Monday, November 24, 2008

சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதற்கு 320 பில்லியன் டாலர் கடன் கொடுக்க அமெரிக்க அரசு ஒப்புதல்

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்பை காப்பாற்ற, அதன் 300 பில்லியன் டாலர் வராக்கடன்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. மோசமான கடன் என்று அக்கவுன்ட் புக்கிலேயே நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் 300 பில்லியன் டாலர் ( சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ) கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக ஓத்துக்கொண்டிருக்கிறது. இது தவிர மேலும் ஒரு 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ) சிட்டி குரூப்பின் முதலீட்டிற்கு கடனாக கொடுக்கவும் அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்க நிதித்துறை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆகியவற்றுடன் நேற்று சிட்டி குரூப் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டிற்காக கொடுக்கப்படும் 20 பில்லியன் டாலருக்கு அமெரிக்க நிதித்துறை, கொஞ்சம் அதிக வட்டியை, அதாவது 8 சதவீத வட்டியை சில வருடங்களுக்கு வசூல் செய்யும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. சிட்டி குரூப்பிடமிருந்து 8 சதவீத வட்டியை வசூலிப்பது போலவே, அமெரிக்க நிதித்துறை மற்ற வங்கிகளுக்கு கடந்த மாதத்தில் கொடுத்திருந்த 700 பில்லியன் டாலர் கடனுக்கும் 8 சதவீத வட்டியை வசூலிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது தவிர சிட்டி குரூப்பின் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது. 106 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள சிட்டி குரூப்பிற்கு 20 கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். மோசமான நிதி நிலையில் இருந்த அந்த பேங்க்கின் பங்கு மதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வந்தததை அடுத்து, திவால் ஆகி விடுமோ என்ற அச்சம் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் கஸ்டமர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.
நன்றி : தினமலர்


No comments: