Saturday, November 29, 2008

அரசு கேபிள் 'டிவி'யில் 800 சேனல்கள் ; வாடகைக்கு 'செட்டாப் பாக்ஸ்': உமாசங்கர் தகவல்

''அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், வியாபார நோக்கத்தில்தான் செயல்படும்; இதனால், எல்லாத் தரப்பினருக்கும் பலன் கிடைக்கும்,'' என்று, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் தெரிவித்தார்.
அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனின் செயல் பாடுகள் குறித்த கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உமாசங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், வியாபார நோக்குடன்தான் செயல்படும். ஒரு மடங்கு முதலீடு செய்தால் மூன்று மடங்கு வருவாய் பார்க்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத அளவுக்கு அதிநவீன தொழில் நுட்பத்தில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், மிக மிகத்துல்லியமாக டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு இருக்கும் என்பதோடு, 800 சேனல் கூட தர முடியும்.

வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறும் சேனல் களை அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் கேபிள் இணைப்புகளுக்கும், இங்கிருந்து பெறும் சேனல்களை பிற நிறுவனங்களின் இணைப்புகளுக்கும் மாற்றித்தருவது (பைரசி) சட்டத்துக்குப் புறம்பானது.

'செட்டாப் பாக்ஸ்'களை விலைக்கும், வாடகைக்கும் வழங்கலாம் என்று இரு வகையான ஆலோசனை உள்ளது. 30 ரூபாயிலிருந்து, 35 ரூபாய் க்குள் வாடகை வசூலிக்கலாம். கேபிளை வெட்டுவது சட்டவிரோதச் செயல். கேபிளை யார் வெட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கேபிளில் விரைவில் எல்லா சேனல்களும் வரும்; அதற்கான முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. சட்டரீதியான முயற்சிகளுடன்,பேச்சுவார்த்தை மூலமாகவும் முயற்சி எடுக்கப்படுகிறது. கேபிள் தொழிலுக்கு எதிர்காலம் நன்றாகவுள்ளது. கேபிள் இணைப்பில் ஏதாவது பிரச்னை என்றால், நீங்கள் உடனடியாக சரி செய்து கொடுப்பீர்கள். ஆனால், டி.டி.எச்., உபகரணத்தில் ஏதாவது பிரச்னை என்றால் அதை சரி செய்ய பல நாட்களாகி விடும். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் கேபிள் களை வெளியாட்கள் யாரும் வெட்ட வாய்ப்பில்லை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.

கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இடையிடையே உமாசங்கர் தலையிட்டு கூறிய கருத்துக்களுக்கு பெரும் கைத் தட்டல் கிடைத்தது. இதுவரையிலும் அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தேறுமா என்ற எண்ணத்தில் இருந்த ஆபரேட்டர்கள் பலரும், நேற்று நடந்த கூட்டத்துக்கு வந்த பின், புதிய நம்பிக்கை உடன் திரும்பினர்.

அரசு கேபிள் 'டிவி' சார்பில்

அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. வேலூர் மற்றும் சென்னையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் 'செட்டாப் பாக்ஸ்' உடன் இணைப்பு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில், நடுநிலையான தமிழ் செய்தி சேனல் ஒன்றும், உள்ளூர் சேனல் ஒன்றும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசிடமிருந்து இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் எந்த நிபந்தனைக்கும் உட்படாமல் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. கோவையில் 100 சதவீத ஆபரேட்டர்கள், 'செட்டாப் பாக்ஸ்' வேண்டுமென்கின்றனர். 'செட்டாப் பாக்ஸ்' வைத்தால் இலவச சேனல்களைத் தவிர்த்து, கட்டண சேனல்களுக்கு ஒரு சேனலுக்கு ஐந்து ரூபாய் வீதம் கொடுத்தால் போதுமானது. கட்டண சேனல் வேண்டாமென்றால் இலவச சேனல்களுக்குரிய மாதாந்திர கட்டணம் செலுத்தினால் போதும். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில் இதுவரை 70 ஆயிரம் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. மேலும் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு உமாசங்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: