Thursday, August 21, 2008

தங்கத்திற்கு சென்றது பங்குச் சந்தைக்கு போக வேண்டிய பணம்

சந்தைக்கு இந்த வாரத்துவக்கமே நஷ்டமாகத்தான் இருந்தது. திங்களும், நேற்று முன்தினமும் சந்தை கீழேயே இருந்தது. நேற்று தான் காப்பாற்றியது என்றே கூற வேண்டும். அமெரிக்க சந்தைகளில் மறுபடி சிறிது பயம் தெரிகிறது. அதாவது, அங்கு மறுபடி கொடுத்துள்ள கடன்களில் இருந்து ஏதும் பூதம் கிளம்புமோ என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. அது, உலகளவில் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை. மறுபடி ஒரு சப்-பிரைம் ப்ராப்ளமா? தாங்காது உலகம். இது தவிர பணவீக்க பயம் யாருக்கும் தெளியவில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக இறங்கி வந்த வங்கிப் பங்குகள் நேற்று முன்தினம் சிறிது ஏற்றம் கண்டன. சர்க்கரை பங்குகளும் இனித்தன. இருந்தும் மும்பை பங்குச் சந்தை நேற்று முன்தினம் 102 புள்ளிகள் குறைந்தது. பெர்ட்டிலைசர் மானியங்களுக்காக 22,000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட முடிவுகள் மத்தியில் எடுக்கப்பட்டதால் நேற்று பெர்ட்டிலைசர் கம்பெனி பங்குகள் மேலே சென்றன. தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த சந்தைக்கு நேற்று தான் சிறிது உயிர் வந்தது. குறிப்பாக ரிலையன்ஸ், கிராசிம், பி.எச்.இ.எல்., ஆகிய கம்பெனிகள் மேலே சென்றன. நேற்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 134 புள்ளிகள் கூடி 14,678 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 47 புள்ளிகள் கூடி 4,415 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பிரேசிலும், பங்குச் சந்தையும்: ஒரு காலத்தில் யாருக்கும் வேண்டாத நாடாக இருந்த பிரேசில் இன்று உலகளவில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒரு காலத்தில் (1990) அங்கு பணவீக்கம் 6,800 சதவீதம் அளவு இருந்தது. தற்போது 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற நாடு என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஏனெனில், அங்கு தான் தோண்டுமிடமெல்லாம் எண்ணெய் வளமும், இரும்பு தாது வளமும் கிடைக்கிறது. கூடிவந்த எண்ணெய், இரும்பு தாது விலைகளால் அங்கும் பங்குச் சந்தை கடந்த வருடம் உயர்ந்து கொண்டே சென்றது. ஆனால், இவ்வளவு இருந்தும் இந்த வருடம் அங்கும் பங்குச் சந்தை கீழே செல்ல ஆரம்பித்தது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தங்கம் வாங்கலாமா தங்கம்?
தங்கம், டாலர் மதிப்பில் பார்த்தால் கடந்த மாதம் அதிகபட்சமாக அவுன்ஸ் 1,030 டாலரில் இருந்தது. கடந்த வாரம் குறைந்தபட்சமாக 770 டாலர் அளவு சென்று தற்போது 815 டாலர் அளவில் வந்து நிற்கிறது. அதே சமயம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு டாலர் 42.30 அளவில் இருந்தது. தற்போது, 43.73 அளவு நேற்று இருக்கிறது. அதாவது, டாலருக்கு ஒரு ரூபாய் 43 பைசா கூடியுள்ளது. ஒரு ஆச்சரியமான உயர்வு இது. இந்த அளவு உயர்வு ஆச்சரியம் அளித்தாலும், தங்கம் விலை டாலர் மதிப்பிலேயே அளவிடப்படுவதால், விலை 11,400 முதல் 11,900 அளவிலேயே இருந்து வருகிறது (10 கிராம், 24 காரட் தங்கம்). தங்கத்தின் சமீபத்திய ஏற்ற, இறக் கத்திற்கு டாலர், ரூபாய் மதிப்பும் ஒரு காரணம். இன்னொரு காரணம் டிமாண்ட். விலை குறைகிறது, இது தான் வாங்குவதற்கு சமயம் என்று மக்கள் சென்ற வாரமெல்லாம் கடைகளில் அலை மோதினர். பங்குச் சந்தைக்கு வரவேண்டிய பணத்தில் பாதியளவாவது தங்கத்தில் சென்றிருக்கும். ஒரு டாலருக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் 43 பைசா வரை கூடியிருந்தாலும், அது பங்குச் சந்தையில் ஏற்றுமதி, சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளை மேலேற்றாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்?:
சந்தையில் பல பங்குகள் மலிவாகக் கிடைக்கின்றன. ஆனால், மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இது தங்கம் போல் இல்லை. தங்கம் விலை குறைந்ததும் பலர் வரிசையில் நின்று வாங்கினர். ஆனால், பங்குச் சந்தை குறைந்தால் வாங்குபவர்கள் சிலரும் காணாமல் போய்விடுவர். ஏனெனில் கடந்த வருடத்தில் எல்லாரும் குறைந்த காலத்தில் அதிகம் பங்குச் சந்தையில் சம்பாதித்தனர். அதுவே ரீபிட் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்தக் காலம் திரும்பி வருமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், பங்குச் சந்தையை நீண்ட காலம், அதாவது ஒரு தென்னம் கன்றையோ அல்லது ரப்பர் கன்றையோ நடும் போது சில வருடங்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு பாதுகாப்போம் அல்லவா, அதுபோல பாதுகாத்தால் பங்குச் சந்தையும் நீண்டகாலத்தில் பலன் தரும். கடந்த 11ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தை 15,303 புள்ளிகளில் இருந்தது, தற்போது கிட்டதட்ட 825 புள்ளிகள் குறைந்து 14,678 புள்ளிகளில் இருக்கிறது. இருந்தாலும் வாங்குபவர்கள் அதிகம் இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதை தான்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்

No comments: