Wednesday, August 20, 2008

உங்கள் பர்ஸ் கனமானால் கோபப்படமாட்டீர்கள்

சமீபகாலமாக பொதுமக்களையும், கம்பெனிகளையும், அரசாங்கத்தையும் பாடாய்ப்படுத்தி வருவது பணவீக்கம் என்ற ஆறு எழுத்துக்கள் தான். தற்போது, 12 சதவீதத்தையும் தாண்டி பந்தயக்குதிரை போல சென்று கொண்டிருக்கிறது. எங்கு சென்று நிற்கப்போகிறது? மறுபடி பழைய நிலையான 3 அல்லது 4 சதவீத அளவு வருமா? பொருட்களின் விலை குறையுமா? இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் கேள்விகள் இது தான். பணவீக்கம் குறைய பொதுமக்களின் பங்கும் நிறைய இருக்கிறது. பணவீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம். கூடிவரும் பணவீக்கத்தில் செலவுகளை சமாளிப்பது எப்படி? பணவீக்கம் என்பது சில சமயம் ஜலதோஷம் போலத்தான். ஜலதோஷம் வந்தால் என்ன செய்வோம், அப்படியே விட்டுவிடுவோம். அது சில நாட்கள் கழித்து சரியாகிவிடும். அதுபோல சிறிய அளவு பணவீக்கம் இருந்தால் அது தானாக சரியாகி விடும். ஆனால், அதே ஜலதோஷம் பல நாட்கள் கூடுதலாக இருந்தால், அதுவே சளியாக மாறி நுரையீரலில் தங்கினால் ஆபத்தாகி விடும். அது போல ஒரு சூழ்நிலை தான் பணவீக்கத்தால் தற்போது உருவாகியுள்ளது. அரசாங்க வைத்தியர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. பணவீக்கம் 12.44 சதவீதம் என்றால் என்ன? அதாவது சென்ற வருடம் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள், தற்போது, 112 ரூபாய் அளவில் கிடைக்கிறது என்பது சிம்பிளான அர்த்தம். ஆனால், அதுபோல கிடைக்கிறதா என்றால் இல்லை. வீட்டு வாடகை கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது, ஓட்டல்களில் விலை 33 சதவீதம் உயர்ந்திருக்கிறது, காய்கறிகள், பழங்கள் 50 சதவீதத்திற்கும் மேலே கூடியுள்ளன. கூடும் பணவீக்கத்திற்கு தான் பஞ்சப்படி அதிகம் கிடைக்கிறதே என்று பலரும் நினைக்கலாம். அதெல்லாம், அரசாங்கம் கொடுக்கும் யானைப்பசிக்கான சோளப்பொரிதான் அது. தமிழக மக்களுக்கு சேமிப்பு பற்றி சொல்லித் தர வேண்டிய அவசியமேயில்லை. ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் கூட அதிலேயே 50 ரூபாய் சேமிப்பவர்கள் தமிழர்கள். ஆனால், சமீபகாலமாக இந்தப் போக்கு மாறிவருகிறது. சேமிப்பு பணத்தில் மட்டுமல்ல, மற்ற விஷயங்களிலும் தேவை. எந்த வகையில் செலவுகளை கட்டுப்படுத்தலாம், சேமிக்கலாம் என்று பார்க்கலாம். காய்கறி, மளிகை சாமான்கள்: நமது மாதாந்திர பட்ஜெட்டில் முக்கியமாக இடம் பெறுவது காய்கறி, மளிகை சாமான்கள் தான். அதில், மிச்சம் பிடித்தாலே நிறைய ரூபாய் சேமிக்க முடியும். அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய் வரை கொண்டு சென்றால் பை நிறைய காய்கறிகள் வாங்கிவரலாம் என்று அப்பா சொல்வார். ஆனால், தற்போது 100 ரூபாய் கொண்டு சென்றாலும் பை நிறைய மாட்டேன் என்கிறது. என்ன செய்வது? பணம் சம்பாதிக்கிறேன் என்று வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று தான் பல சமயம் நினைக்கத் தோன்றுகிறது. முன்பெல்லாம், காலை எழுந்தவுடன் முதல் வேலை காய்கறி வாங்கச் செல்வது தான். தற்போது, அதிகாலையில் எழுங்கள் என்று சொன்னாலே அது ஏதோ குற்றம் என்பது போல பலர் பார்க்கின்றனர். ஆதலால், அதிகம் சம்பாதிப்பதால் சோம்பேறித்தனப்பட்டு, விலை சிறிது அதிகம் இருந்தாலும், காய்கறிகள் அருகில் உள்ள கடைக்காரரிடம் சென்று வாங்கினால் போதும் என்று தான் நினைக்கிறோம். இதில், தினம் மூன்று ரூபாய் கூடுதலாகக் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாதத்திற்கு 90 ரூபாய். வருடத்திற்கு 1080 ரூபாய். இதையே, 25 வருடங்கள் என்று வைத்துப் பார்த்தால் வட்டி வட்டிக்கு என்று எல்லாம் போட்டுப் பார்த்தால் எவ்வளவு வரும் தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு மூன்று லட்ச ரூபாய்க்கு மேலே வரும். மயக்கம் போட்டு விடாதீர்கள். நடந்து சென்று அருகில் உள்ள மார்க்கெட்டில் வாங்கினால் பர்சுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது. பிளாட்டில் குடியிருப்பவர்களில் வாரம் ஐந்து பேர் வீதம் சேர்ந்து, மொத்தமாக காய்கறி, மளிகை சாமான்கள் விற்கும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான, காய்கறிகளை, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி பகிர்ந்து கொள்வார்களேயானால், அது செலவை மிகவும் குறைக்கும். கார் பயணங்கள்: தற்போது வசதி வாய்ப்புக்கள் கூடியுள்ளதாலும், வீட்டில் இரண்டு பேரும் வேலை பார்ப்பதாலும், பெரும்பாலும் எல்லாரும் கார் வைத்திருக்கின்றனர். கார்களில் அலுவலகங்களுக்கு செல்வதை ஒரு பெருமையாகவும், அதே சமயம் தேவையாகவும் கருதுகின்றனர். அதுபோல, கார்கள் வைத்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து, கார் பூல் அமைத்து, தினம் ஒரு காரை உபயோகித்தோ அல்லது ஒருவரின் காரை உபயோகித்தோ செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இது நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். ஆடைகளைப் பொறுத்தளவில், ரெடிமேட் தான் எடுப்பேன் என்றால், பேப்பர்களில் வரும் தள்ளுபடி விற்பனைகளை கவனித்து, எதில் நல்ல டிஸ்கவுன்ட் கிடைக்கிறது என்று பார்த்து வாங்குங்கள். எப்படியாவது கஷ்டப்பட்டு நகரின் ஒதுக்குப்புறத்திலாவது ஒரு வீடு வாங்கி விடுவது என்று முடிவெடுத்து, அதற்கு கடன்கள் எல்லாம் வாங்கி இருப்பீர்கள். அந்த கடன்களுக்கான வட்டிகள் கூடிக்கொண்டே செல்கிறது. எப்படி குறைப்பது என்று தெரியாமல் பல சமயம் விழிக்க வேண்டியிருக்கும். அதாவது, வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று பிக்சட் வட்டி, இரண்டாவது பணவீக்கத்திற்கு தகுந்தபடி மாறிக் கொண்டிருக்கும் வட்டி. கையில் அதிகப்படியாக பணம் இருக்குமானால், கடனில் பகுதியை யோ அல்லது முழுமையாகவோ குறைப்பது மிகவும் நல்லது. ஷேர் ஆட்டோ டிரை பண்ணிப்பாருங்கள். இல்லாவிடில் டவுன் பஸ் தான் பெஸ்ட். செல்லும் இடத்திற்கு 10 நிமிடம் முன்னதாகவே புறப்பட்டால் செலவு குறைவான வழியில் அந்த இடத்தை சென்றடைந்து விடலாம். வெளியில் சாப்பிட்டுக்கிறேன்: இன்றைக்கு நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன் என்ற வார்த்தைகள் உங்கள் மனைவியை சிறிது மகிழ்ச்சிப்படுத்தலாம், ஆனால், உங்கள் பர்சை மகிழ்ச்சிப்படுத்தாது. ஆபிசிற்கு சென்ற உடனேயே வெளியில் சாப்பிட நண்பர்களை தயார்படுத்துவீர்கள். எல்லாரையும் கூட்டிச் செல்லும் பட்சத்தில் பல சமயங்களில் எல்லாரும் செலவைப் பகிர்ந்து கொண்டாலும், சில சமயங்களில் நீங்களே எல்லார் செலவையும் ஏற்கும் படியாகி விடும். இன்றைக்கு அல்ல என்றைக்கும் டிபன் பாக்சை எடுத்து செல்ல மறந்து விடாதீர் கள். குறைந்த தூர விமானப் பயணங் களை தவிர்க்கலாம். ரயில், பஸ் பயணங்களை அதிகப்படுத்தலாம். கார்களில் செல்லுமிடத்திற்கு பஸ்சில் செல்ல முடியுமா என்று பார்க்கலாம். சைக்கிள்கள் அதிகம் ரோட்டில் தென்படவேண்டும். அது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. தவிர்க்க முடியாத பள்ளிக் கட்டணம்: பள்ளிக் கட்டணம், பால் ஆகியவை தவிர்க்க முடியாதவை தான். உங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து, அந்த பள்ளியில் கட்டணங்கள் கூடி வரும் வேளையில், பெற்றோர் - ஆசிரியர் கழக மீட்டிங்குகளில், கூடி வரும் கட்டணங்களைப் பற்றி கூற மறக்காதீர்கள். அது அவர்களையும் இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்களே என்று யோசிக்க வைக்கும். வங்கி டிபாசிட்: அதுபோலவே வங்கியில் பிக்சட் டிபாசிட் போடும் போது எந்த வங்கி கூடுதலாக வட்டி தருகிறதோ, அந்த வங்கியில் சென்று போடவேண்டும். அது உங்களுக்கு அதிக வருமானத்தைத் தரும். அதிக வருமானம் உங்கள் அதிக செலவுகளுக்கு உதவும். பணவீக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த யாரிடமும் எந்த மந்திரக்கோலும் இல்லை. வண்டியில் இரண்டு மாடுகளும் ஒன்றாக ஓடவேண்டும். இரண்டும் இரண்டு பக்கம் இழுக்கக்கூடாது. அதுபோலத்தான் துவக்கம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும். நமது முன்னோர்கள் சிக்கனமாக இருந்து, நமக்கெல்லாம் நல்ல பாடங்கள் தந்து சென்றிருக்கின்றனர். அடுத்தவர் என்ன நினைப்பர் என்ற நினைப்பிலே நாம் பெரும்பாலும் அதிகம் செலவழிக்கிறோம். அதைத் தவிர்த்தாலே ஒரு பெரிய சேமிப்பு ஏற்படும். இதையெல்லாம் கடைபிடித்துப் பாருங்கள். உங்கள் பர்சும் கனமாகும், மனதும் இலகுவாகும். பர்சில் பணம் அதிகமானால் அதிகம் கோபப்படமாட்டீர்கள். கடன் வாங்கி முதலீடுகள் செய்யலாமா? : கடன் வாங்கி முதலீடுகள் செய்வதை தவிருங்கள். அதாவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய என கடன் வாங்கி பலர் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர். முன்பு இந்த வட்டி விகிதங்கள் குறைவு, முதலீடுகளில் வருமானங்கள் அதிகம் என்பதால், பலர் இதுபோல செய்து வந்தனர். தற்போது, கூடிவரும் வட்டி விகிதங்களில், குறைந்து வரும் பங்குச் சந்தையில் இதுபோன்று ஆர்பிடரேஜ் ஆப்பர்சூனிட்டி அதிகம் இல்லை. ஆதலால், இதுபோன்று செய்து கையை கடித்துக் கொள்ளாதீர்கள்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்


2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் வாசிக்க எளிதாயிருக்கும்.

பாரதி said...

ஜ்யோவ்ராம் சுந்தர் வருகைக்கு நன்றி
அப்படி கொடுக முயற்சி செய்கிறான்