பரபரப்பாக பேசப்படும், ஒரு லட்சம் ரூபாய் நானோ ரக கார், திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் வெளிவருமா? - மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பகீரதப்பிரயத்னம் செய்து, மம்தாவை சமாதானப்படுத்த முயன்றாலும் குழப்பம் நீடிக்கிறது. மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. கிராம மக்களிடம் இருந்து நிலத்தை அரசு வாங்கி, டாடா நிறுவனத்துக்கு அளித்தது. இங்கு தான், ஒரு லட்சம் ரூபாய் கார் தயாராகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லாயிரக்கானோர் இந்த ஒரு லட்சம் கார் வாங்க முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு அக்டோபர் மாதத்துக்குள் காரை ஒப்படைக்க வேண்டும். சிங்கூரில் உள்ள, தொழிற்சாலையில் 75 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. கார்களும் தயாராகி, இறுதி நிலையில் உள்ளன. ஆனால், கிராம மக்களிடம் வாங்கிய நிலங்களை ஒப்படைக்க கெடு விதித்த திரிணமுல் காங்., தலைவி மம்தா பானர்ஜி, காலவரையற்ற போக்குவரத்து தடை போராட்டத்தை அறிவித்ததை அடுத்து, மேற்கு வங்க அரசும், டாடாவும் பீதியடைந்துள்ளன. 'டாடா நிறுவனத்தில் இப்போது 40 சதவீத தொழிலாளர்கள் தான் பணியில் உள்ளனர். தற்காலிக தொழிலாளர்கள் பலரும் பீதியில் ஓட்டம் பிடித்து விட்டனர். அதனால், திட்டமிட்டபடி கார்கள் வெளிவருவது சிக்கல் தான். கிராம மக்களுக்கு தீர்வு கிடைக்காமல் கார்களை விட மாட்டோம். அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன' என்று மம்தா தரப்பில் கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தை சுற்றியுள்ள, சாலைகள் எல்லாம் மூடப்பட்டு 21 இடங்களில் இரண்டு லட்சம் பேர் திரண்டு, கார்களை வெளிவராமல் தடுப்பது தான் மம்தா திட்டம். 'மக்களுக்கு உதவுவதாக சொல்லி, மாநில வளர்ச்சியை தடுக்க வேண்டாம்' என்று புத்ததேவும், வர்த்தக அமைப்புகளும் மம்தாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், மம்தா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும், தன் நிலையை அவர் விடவில்லை. இப்போதே தொழிற்சாலை பணிகள் கணிசமாக முடங்கும் நிலையில் இருப்பதால், திட்டமிட்டபடி, ஒரு லட்சம் காரை டாடா நிறுவனம் வெளிக்கொணருமா என்ற குழப்பம் நீடிக்கிறது. மம்தா போர்க்கொடியால், டாடா மட்டுமல்ல, பல தனியார் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. புதிய நிறுவனங்களும், மேற்கு வங்கத்தில் தொழில் செய்ய அஞ்சுகின்றன.
நன்றி : தினமலர்
Wednesday, August 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment