Monday, August 25, 2008

கேபிள் வரி கட்டாமல் அரசுக்கு ரூ.265 கோடி இழப்பு: புதிய பணக்காரர்கள் உருவானது மிச்சம்

கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய சேவை வரியில் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசுக்கு 265 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 'டிராய்' என்னும் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சேகரித்த தகவலின் அடிப்படையில், வரி அமைப்புகள் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2007-08ம் ஆண்டில் கேபிள் இணைப்புக்கான சேவை வரியாக 28 கோடி ரூபாய் வசூலானது. இதற்கு முந்தைய ஆண்டும் இதே அளவில் தான் சேவை வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில், 1.5 கோடி புதிய கேபிள் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு துறைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கேபிள் இணைப்புகள் எத்தனை என்று திட்டவட்டமாக இன்னமும் வரித்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான திட்டம் மற்றும் நடைமுறைகளை கேபிள் நிறுவனங்களோ அல்லது எம்.எஸ்.ஓ., எனப்படும் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களோ உருவாக்க வில்லை. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய நான்கு மாநகரங்களில் அதிக கேபிள் இணைப்புகள் உள்ளன. மேலும் 20 நகரங்களில் கணிசமாக இந்த இணைப்புகள் கடந்த ஓராண்டில் லட்சக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. கணக்கில் வந்திருப்பது அதிகபட்சம் 12 லட்சம் கேபிள் இணைப்புகள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், கேபிள் இணைப்பு தரும் உள்ளூர் ஏஜென்டுகள் தங்கள் இஷ்டத்திற்கு பொத்தாம் பொதுவாக ஒரு தொகையைக் கட்டி, அதேசமயம் அதிகரிக்கும் இணைப்புகளைக் காட்டுவதில்லை என்று வரித்துறை கருதுகிறது.
டில்லியில் மட்டும் 26 லட்சம் வீடுகளில் கேபிள் இணைப்பு இருக்கிறது. சராசரியாக மாதம் ஒரு இணைப்புக்கு 150 ரூபாய் என்று கணக்கிட்டால், ஆண்டு வருமானம் 470 கோடி ரூபாய். அப்படிப்பார்த்தால், அதற்கு சேவை வரி 58 கோடி ரூபாய். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் வெறும் 5.7 கோடி ரூபாய் மட்டும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதே போல மற்ற நகரங்களில் இன்னமும் கணக்கெடுப்பு நடத்தவில்லை.இதைப் பற்றி மேலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில், வடமாநிலங்களில் இப்படி அதிகமாக வரும் வருவாய் கறுப்புப் பணமாக மாறி, அதிக பணக்காரர்களை திடீரென உருவாக்கியிருக்கிறது. ஏனெனில், கேபிள் மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கும் போது முறையான ரசீதை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை. அப்படி ரசீது தரும் பட்சத்தில் சேவைவரி தானாக வந்து விடும். அது மட்டும் அல்ல, ஒரு தெருவில் அல்லது பகுதியில் ஆயிரத்து 500 கேபிள் இணைப்பு இருந்தால், வழக்கமாக 500 அல்லது 600 இணைப்புக்குப் பணம் தந்து விட்டு மற்றதை இருதரப்பும் சேர்ந்து சரிக்கட்டும் நடைமுறை இருக்கிறது. 'டிராய்' திட்டப்படி இக்கட்டணங்களுக்கு முறையான ரசீது தேவை.வடமாநிலங்களில் இம்மாதிரி கடந்த காலங்களில் பெரிய அளவில் கேபிள் இணைப்புகள் அதிகரித்ததால், அந்த எம்.எஸ்.ஓக்களை நிர்வகிப்பவர்கள் அல்லது கேபிள் ஒளிபரப்பாளர்கள் தாங்கள் சேகரிக்கும் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இந்தி, மொழி பத்திரிகை நடத்துபவர்கள் பலர் 'டிவி' சேனல்களையும், எம்.எஸ்.ஓ.,க்களையும் தங்கள் கட்டுப் பாட்டில் மறைமுகமாக வைத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் கறுப்பு பணத்தைக் கொடுத்து பெரிய நகரங்களில், அலுவலகங்களுக்கு நிலம் வாங்குவதும், பல கோடியில் அந்த நிலத்தில் கட்டடங்களைக் கட்டுவதும், நடத்த முடியாமல் திணறும் நாளேடுகளை விலைக்கு வாங்குவதும், பத்திரிகையின் விலையைக் குறைத்து போட்டிகளை நசுக்குவதும், நடைமுறையாக உள்ளது. இதில் பல அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளதால், வருமான வரி அதிகாரிகள் இதில் தலையிட அஞ்சுகின்றனர்.பத்திரிகைகளின் விற்பனையை அதிகரித்துக் கணக்குக் காட்ட, இந்தக் கறுப்புப் பணம் பெரிதும் உதவுகிறது. பினாமி ஏஜென்டுகளை கணக்கில் வைத்திருப்பதும், பிற ஏஜென்டுகளுக்குத் தேவையில்லாப் பிரதிகளை அதிக அளவில் அவர்களுக்கு அனுப்பி வைத்து, விற்காதப் பிரதிகளை விற்றதாக கணக்குக் காட்ட, கறுப்புப் பணத்தை எடுத்து ஏஜென்டுகள் கணக்கில் மாதம் தோறும் கோடிக்கணக்கில் வரவு வைப்பதும் வடமாநிலங்களில் வாடிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனை, கணக்கு கச்சிதமாக எழுதப்படுவதால், பத்திரிகைகளின் விற்பனைக்கு அத்தாட்சி வழங்கும் ஏ.பி.சி., என்ற குழு இந்த போலி விற்பனையை உண்மை என்று நம்பி சான்றிதழ் கொடுக்கிறது.தற்போது, 'டிவி'யில் இன்டர்நெட் என்ற புதிய 'ஐபிடிவி' அறிமுகம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதால், இத்துறையிலிருந்து வரும் குளறுபடிகளைக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான சேனல்கள் ஒளிபரப்பப்படுவதால், தானாக முன்வந்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒளிவு மறைவற்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய செய்தி, ஒளிபரப்புத்துறைச் செயலர் சுஷ்மா சிங் கூறியுள்ளார்.கேபிள் தொழில் தற்போது பன்முக வளர்ச்சி பெற்றிருப்பதால், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தவறான அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு, வரி செலுத்துவதில் சரியான அணுகுமுறையைப் பின்பற்ற 'டிராய்' ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசுகளுடனும், வரித்துறையுடனும் சேர்ந்து செயல் பட்டால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி முழுவதும் கிடைக்கும் என்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: