Saturday, December 20, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 36 டாலராக குறைந்தது

வியாழன் அன்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் மேல் குறைந்து, பேரலுக்கு 36 டாலராக குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போய், டீலர்களிடம் ஏராளமான கார்கள் விற்காமல் தேங்கி இருப்பதால், அங்குள்ள கார் கம்பெனிகளுக்கு இன்வென்ட்ரி நஷ்டம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கார்களின் விற்பனை குறைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் குறைந்து, அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. ஓபக் அமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்போம் என்று சொன்னதும் கூட விலை குறைவதை தடுக்க முடியவில்லை. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 35.98 டாலர் வரை குறைந்து பின்னர் 36.22 டாலரில் முடிந்திருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 43.92 டாலராக இருந்தது. சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் இன்னும் சரியாகவில்லையாதலால், பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்டும் அதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டுதான் இருக்கும் என்று இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல்

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் இன்றும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலேயே இருக்கிறது. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக உயராமலும் குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 23.48 புள்ளிகள் ( 0.23 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,099.91 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 16.75 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 3,077.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, கேப்பிடல் குட்ஸ், பவர், மெட்டல், டெலிகாம் பங்குகள் உயர்ந்திருந்தன. ஓ.என்.ஜி.சி., கெய்ர்ன் இந்தியா, சத்யம், சிமென்ட் மற்றும் குறிப்பிட்ட சில வங்கி பங்குகள் பெருளவில் விற்கப்படவும் செய்தன. பணவீக்கம் எதிர்பாராத அளவை விட குறைந்திருப்பதை அடுத்து, வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்ததால், ரியல் எஸ்டேட், ஆட்டோ, இன்ஃரா பங்குகள் நல்ல விலைக்கு போயின. பேங்கிங் பங்குகளும் உயர்ந்திருந்தன. இருந்தாலும் றஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் கொஞ்சம் சரிவில்தான் முடிந்திருக்கின்றன. ஆசியாவை பொருத்தவரை கூடியும் குறைந்தும் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Friday, December 19, 2008

கேடர் பில்லர் நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடு

கேடர் பில்லர் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தை 800 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை சேர்ந்த கேடர் பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனம். இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்தியாவில், பெருமளவில் முதலீடுகள் செய்துள்ள கேடர் பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின்உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் இன்ஜின் தயாரிப்புப் பிரிவுகள் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைத்துள்ளன. அவற்றுள் 2,400 பேர் நேரடியாகவும், 7,500 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்நிறுவனம், தற்போது 800 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரகப் பொறியியல் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மற்றும் ஓசூரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் வழங்கக் கூடிய இப்புதிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலர் பரூக்கி, கேடர் பில்லர் இந்தியா நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆர்.தீனமேன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன் மற்றும் கேடர் பில்லர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


'வட்டி வீதம் மேலும் குறையும்'

பணவீக்கம் குறைந்துள்ளதால் வட்டி வீதம் மேலும் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அசோக் சாவ்லா கூறியதாவது: பணவீக்கம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால், வட்டி வீதமும் குறையும். டிசம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு வாரமாக பணவீக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால், ரிசர்வ் வங்கி இதைக் கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின், மூன்று லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது. இவ்வாறு அசோக் சாவ்லா கூறினார்.
நன்றி : தினமலர்


Thursday, December 18, 2008

சரிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மெட்டல், டெலிகாம்,பவர், கேப்பிடல் குட்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதாலும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வேகமாக குறைந்து போனதாலும் சென்செக்ஸ் சரிந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருந்தாலும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கி விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க பங்கு சந்தைகளின் வீழ்ச்சிதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சென்செக்ஸ் 9,682.91 புள்ளிகள் வரை இறங்கி வந்தாலும் வர்த்தக முடிவில் 261.69 புள்ளிகள் ( 2.62 சதவீதம் ) குறைந்து 9,715.29 புள்ளிகளில் முடிந்திருந்தது. நிப்டி 2,943.50 புள்ளிகள் வரை இறங்கி இருந்தாலும் வர்த்தக முடிவில் 87.40 புள்ளிகள் ( 2.87 சதவீதம் ) குறைந்து 2,954.35 புள்ளிகளில் முடிந்திருந்தது.தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக அசையாமல் இருந்த மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்று ஆட்டம் க்ண்டு விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சத்யம், பெல், எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃரா ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்திருந்தன. இன்று அதிகம் பாதிக்கப்பட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். 30.22 சதவீத மதிப்பை அது இழந்திருந்தது. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி.,ஹெச்.யு.எல், ஹெச்.டி.எப்.சி.பேங்க், கிராசிம், விப்ரோ பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் : சர்வே

இந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.49 சதவீதமாகத்தான் இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 10 சதவீதமும் டீசலின் விலையை 6 சதவீதமும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் என்று 11 பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு சதவீதம் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1.5 சதவீதம் முதல் 2.0 சதவீதம் குறைந்திருக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட ஜூன் ஆரம்பத்தில் இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. பின்னர் அது அதிகபட்சமாக ஆகஸ்ட் 2 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


மேடாஸ் நிறுவனங்களை வாங்கிக்கொள்வதை கைவிட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

மேடாஸ் இன்ஃரா மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் இருந்து சத்யம் கம்ப்யூட்ர்ஸ் விலகிக்கொண்டது. முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தையும் மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளையும் 1.6 பில்லியன் டாலருக்கு ( சுமார் 8,235 கோடி ரூபாய் ) வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்ததும், அதன் பங்குதாரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஐ.டி.கம்பெனி, கட்டுமான நிறுவனமான மேடாஸை வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நியுயார்க் பங்கு சந்தையில் அதன் பங்கு மதிப்பு 55 சதவீதம் வரை குறைந்து விட்டது. செவ்வாய்க்கியமை அன்று இந்திய பங்கு சந்தை முடிவடைந்ததும், நலிவடைந்திருக்கும் மேடாஸ் புராபர்டீஸின் எல்லா பங்குகளையும் 1.3 பில்லியன் டாலருக்கும், மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளை 0.3 பில்லியன் டாலருக்கும் வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்தது. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் மேடாஸ் இன்ஃராவில் 36 சதவீத பங்குகளும் மேடாஸ் புராபர்டீஸில் 35 சதவீத பங்குகளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து சத்யம் விலகிக்கொள்வதாக அறிவித்ததும், சரிந்திருந்த அதன் பங்கு மதிப்ப ஓரளவு மீண்டது.
நன்றி : தினமலர்