நன்றி : தினமலர்
Friday, December 19, 2008
கேடர் பில்லர் நிறுவனம் 800 கோடி ரூபாய் முதலீடு
கேடர் பில்லர் இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தை 800 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை சேர்ந்த கேடர் பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனம். இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்தியாவில், பெருமளவில் முதலீடுகள் செய்துள்ள கேடர் பில்லர் நிறுவனத்தின் கட்டுமான இயந்திரங்கள், டீசல் மின்உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் இன்ஜின் தயாரிப்புப் பிரிவுகள் திருவள்ளூரிலும், ஓசூரிலும் ஏற்கனவே அமைத்துள்ளன. அவற்றுள் 2,400 பேர் நேரடியாகவும், 7,500 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்நிறுவனம், தற்போது 800 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்களுக்குப் பயன்படும் கனரகப் பொறியியல் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மற்றும் ஓசூரில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை விரிவாக்குவதுடன், சென்னைக்கு அருகில் மற்றுமொரு புதிய இடத்திலும் ஒரு தொழில் பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1,900 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் வழங்கக் கூடிய இப்புதிய விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலர் பரூக்கி, கேடர் பில்லர் இந்தியா நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஆர்.தீனமேன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன் மற்றும் கேடர் பில்லர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment