Saturday, June 27, 2009

ஜாகுவார், லேண்ட்ரோவரால் டாடா மோட்டார்ஸூக்கு நஷ்டம் ரூ.2,505 கோடி

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.2,505 கோடி நிகர நஷ்டம் அடைந்திருக்கிறது. இங்கிலாந்தின் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரை கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 2.5 பில்லியன் டாலருக்கு டாடா மோட்டார்ஸ் வாங்கியதை அடுத்து, இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களால் மட்டும் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.1,777 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. டாடா மோட்டார்ஸின் கைக்கு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வந்ததற்கு பின், அந்த இரு கார்களின் வருடாந்தர விற்பனை 32 சதவீதம் குறைந்து 1.67 லட்சமாகி இருக்கிறது. லேண்ட் ரோவரின் விற்பனை 1.98 லட்சத்தில் இருந்து 1.2 லட்சமாகவும், ஜாகுவாரின் விற்பனை 1,000 கார்கள் குறைந்து 47,000 ஆகவும் ஆகி விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் வைஸ் சேர்மன் ரவி காந்த், கடந்த நிதி ஆண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரின் விற்பனை வட அமெரிக்காவில் 37 சதவீதமும் இங்கிலாந்தில் 31 சதவீதமும் குறைந்திருந்தது என்றார். ஆனால் இப்போது, அங்கு நிலைமை மாறி வருகிறது. விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.
நன்றி : தினமலர்


உலகம் இதுவரை பார்த்திராத வகையில் மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்குமாம்

இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலம் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ருடால்ப் வேலன்டினோ என்ற அமெரிக்க நடிகர் 1926 ல் இறந்தபோது 40,000 பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலத்தில் டயனாவுக்கு அடுத்ததாக அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மைக்கேல் ஜாக்ஸனின் சவ அடக்கத்தை குடும்ப நிகழ்ச்சியாக நடத்த தீர்மானித்தாலும் கூட ரசிகர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும் என்கிறார்கள். மேலும் மைக்கேல் ஜாக்ஸன் ரகசியமாக முஸ்லிமாக மாறி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் முஸ்லீம் முறையில் அடக்கம் செய்யப்பட இருந்தால், இறந்த இரு நாட்களுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமாம். அதற்கு வாய்ப்பு இல்லை. இன்னொரு செய்தியும் வெளிவருகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பெங்களுருவில் இருந்த துபாய்க்கு தினசரி விமான சேவை : கிங்ஃபிஷர் இயக்குகிறது

Justify Fullபெங்களுருவில் இருந்து துபாய்க்கு தினசரி விமான சேவையை தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் இயக்குகிறது. ஏற்கனவே லண்டன், கொழும்பு, மற்றும் தாகா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், இப்போது நான்காவதாக துபாய்க்கு சேவையை துவங்கியிருக்கிறது. இந்த பயணத்திற்காக ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்படும் என்றும் கிங்ஃபிஷர் கிளாஸ், பிரீமியம் எக்கனாமி போன்ற வகுப்புகள் அதில் இருக்கும் என்றும் அந்த கிங்ஃபிஷர் தெரிவித்திருக்கிறது. பெங்களுருவில் இருந்து தினமும் மாலை 6 : 15 க்கு புறப்படும் அந்த விமானம்,ற இரவு 8 : 55 க்கு ( அங்குள்ள நேரம் ) துபாய் சென்றடையும். அதேபோல் அங்கு இரவு 10 : 10 க்கு புறப்படும் அந்த விமானம், பெங்களுருவுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 : 45 க்கு வந்து சேரும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Friday, June 26, 2009

ஏறியது பங்கு சந்தை

ஜூலை சீரியஸின் முதல் நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி மற்றும் ரியஸ் எஸ்டேட் பங்குகளின் வளர்ச்சியால் சந்தை குறியீட்டு எண்களான நிப்டி 4350 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14700 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து முடிந்திருக்கிறது. கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி, எல் அண்ட் டி, இன்போசிஸ், பெல், டிசிஎஸ், பார்தி, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், செய்ல், ஹெச்டிஎப்சி,மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருந்தாலும் சன் பார்மா, ரான்பாக்ஸி லேப், ஹீரோ ஹோண்டா, எம் அண்ட் எம், மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சன் பார்மா வின் பங்கு மதிப்பு இன்று 11.5 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 419.02 புள்ளிகள் ( 2.92 சதவீதம் ) உயர்ந்து 14,764.64 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 133.65 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) உயர்ந்து 4,375.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

நன்றி : தினமலர்



டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது

2008 - 09 நிதி ஆண்டில், உலகின் ஆறாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 2,045 பேர்களின் வேலை பறிபோகும் என்றும் தெரிகிறது. ஐரோப்பாவில் ஸ்டீலுக்கான தேவை குறைந்து போனதையடுத்து கடும் நெருக்கடியில் இருக்கும் ஆங்கிலோ - டச் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையை விட இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்றார் டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குனர் முத்துராமன். பொருளாதார மந்த நிலையால், ஸ்டீலை அதிகம் பயன்படுத்தும் கட்டுமான துறை மற்றும் ஆட்டோமொபைல் தொழில் மோசமாக நலிவடைந்து போய் இருக்கிறது. எனவே ஆர்செலர் மிட்டல் போன்ற பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தியை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை, இரண்டாம் உலகப்போருக்குப்பின் இந்த வருடம் தான் ஸ்டீலுக்காவ தேவை இந்தளவுக்கு மோசமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


இன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத்திய அரசு பணியில் சேர்ந்தார்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்டர்நெட்டை மொய்த்த அவரது ரசிகர்கள்

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்ததாக செய்தி வெளியான உடனேயே அவரை குறித்த செய்திகள் மற்றும் விபரங்களை அறிய, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்டர்நெட்டை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கூகிள் வெப்சைட்தான். அவரது மரணம் குறித்த செய்திகளை விட அவர் குறித்த விபரங்களை அறிய நிறைய பேர் கூகிள் வெப்சைட்டை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் அவரது மரணம் குறித்த செய்திகளை அறிய லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெப்சைட்டை அதிகம் பேர் பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருக்கிறார்.எனவே உள்ளூர் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் தான் அவர் குறித்த செய்திகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருதியிருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்