Sunday, May 24, 2009

எச்.சி.எல்., நிறுவனத்துக்கு 'எம் டிவி' ஆர்டர்

பிரபல 'எம் டிவி' நிறுவனத்தின் ஆர்டர்களை எச்.சி.எல்., நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்து எச்.சி.எல்., நிறுவன இயக்குனர் ஸ்ரீராம சீனிவாசன் குறிப்பிடுகையில், 'டிவி' மற்றும் இன்டெர்நெட் மூலம் 'எம் டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. இனி ஆன்-லைன் மூலம் 'எம் டிவி' மற்றும் இதனுடைய மற்ற சேனல்களான வி.எச்1, காமடி சென்ட்ரல், நிக்லோடியான் போன்றவற்றை பார்ப்பதற்கு வசதியான தொழில் நுட்பத்தை உருவாக்குவதற்கு எச்.சி.எல்., நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது' என்றார். எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினித் நாயர் குறிப்பிடுகையில், 'அவுட் சோர்சிங் சேவைக்காக எச்.சி.எல்., நிறுவனத்துக்கு நிறைய ஆர்டர்கள் குவிகின்றன. பிரபல 'ரீடர் டைஜஸ்ட்' நிறுவனத்துக்கான அவுட் சோர்சிங் பணிக்கு 1,500 கோடி ரூபாய்க்கான ஆர்டர் கிடைத்துள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


பங்குச்சந்தையை நிமிர வைக்குமா புதிய அரசின் செயல்பாடுகள்?

வியாழன் அன்று சந்தையில் லாபம் பார்ப்பவர்கள் ஓரமாகக் கொண்டு சென்று விட்டனர். ஆதலால், சந்தை ஆட்டத்திலேயே இருந்தாலும் மேலேயே வரமுடியாததாகி விட்டது. மும்பை பங்குச் சந்தை 324 புள்ளிகளை இழந்து 14,000க்கும் கீழேயும் சென்றது. சந்தை ஏறுகின்றதே என்று வாங்கியவர்கள் எல்லாம் சிறிது பயந்தது என்னவோ உண்மை தான். வெள்ளியன்று சந்தை ஆரம்பத் தில் நஷ்டத்திலேயே துவங்கினாலும், நமக்கு பின் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஜம்மென மேலேயே துவங்கியதால், இந்திய சந்தைகளிலும் வசந்தம் வீசத் துவங்கியது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 150 புள்ளிகள் கூடி 13,887 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 27 புள்ளிகள் கூடி 4,238 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சென்ற வாரம் வரை 12,000த்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்த நாம் இது வரை வந்தது கையின் மேஜிக் தான்.
பணவீக்கம்: பணவீக்கம் சிறிது வீக்கமாகத் தான் இருக்கிறது. சிறிதளவு கூடியிருக்கிறது. சென்ற வாரம் 0.48 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 0.61 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டில் 4 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்சூரன்சின் புதிய வெளியீடு: இன்சூரன்ஸ் கம்பெனிகள் எல்லாம் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வரும் தருணம் இது. ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்ட் இன்சூரன்ஸ் கம்பெனியா அல்லது வேறு ஏதாவது கம்பெனியா? முதலில் வெளியீடைக் கொண்டு வருவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது ரிலையன்ஸ் வர முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்கின்றனர். பல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருப்பதால் அவர்களுக்கு சந்தை மேலே செல்வது ஒரு வாய்ப்பு தான்; முதலீட்டாளர்களுக்கும் தான்.
கச்சா எண்ணெய்: தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலர் அளவில் இருப்பதால், அரசு மானியங்களை நிறுத்திவிட்டு ஏன் மார்க்கெட் விலையை நிர்ணயித்து விற்கச் சொல்லக்கூடாது என்ற எண்ணங்கள் இருந்து வருகிறது. அப்படி வரும் பட்சத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை கூடும். எண்ணெய் கம்பெனிகளும் லாபம் பார்க்க வேண்டுமே? அமைச்சர்களின் துறைகளும் சந்தையும்: சந்தை புதிய அமைச்சரவையில் யார் யார் அமைச்சராக வரப்போகின்றனர் என்ற யூகங்கள் பலவாறாக இருக்கிறது. குறிப்பாக எரிசக்தி, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளைப் பற்றி. இந்த துறைகளில் வரும் ஐந்து ஆண்டுகளில் பல திட்டங்கள் நடைபெற இருப்பதால் யூகங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக மட்டும் அரசு உடனடியாக 57,000 கோடி ரூபாய் வரை செலவிடவுள்ளது. நல்ல சாலை வசதிகள் நாட்டிற்கு பல மேம்பாடுகளைப் பெற்றுத் தரும் என்பது யாருக்கும் சந்தேகம் இல்லை.
2003ம் ஆண்டும் பங்குச் சந்தையும்: கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் பங்குச் சந்தை 3000 புள்ளிகளில் தான் இருந்தது என்றால் நம்ப முடியுமா? ஆமாம். அதுதான் உண்மை. உயர்ந்து கொண்டே வந்து 2008ம் ஆண்டு அதே பங்குச் சந்தை ஜனவரி 10ம் தேதி 21,207 புள்ளிகளை அடைந்தது. அதாவது ஆறு மடங்கு லாபங்கள், ஐந்தாண்டுகளுக்குள். அதன் பிறகு வந்த சுனாமி தான் பலருக்கு தெரியும். பங்குச் சந்தை நார்நாராகக் கிழித்துச் சென்றது. கிழிந்த சந்தை மறுபடி மேலே வர முயற்சிக்கிறது. 8,000 அளவிற்கும் சென்ற சந்தை தற்போது 14,000 அளவுகளில் நிற்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. சந்தையை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். எப்போதெல்லாம் குறைகிறதோ அந்த சமயத்தில் நல்ல பங்குகளை வாங்கி கணக்கில் சேர்க்க வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். தினசரி லாப நஷ்டங்கள் பார்த்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கக்கூடாது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை ஏற்றமும் இறக்கமாகவே இருக்கும். 100 நாட்களுக்குள் பட்ஜெட் மற்றும் அரசாங்கத்தின் பல அறிவிப்புகள் ஆகியவை வரலாம். அவை சந்தை உயர்த்தும். சந்தை வருங்காலங்களில் மேலே செல்லவே வாய்ப்புகள் அதிகம். எல்லா இறக்கத்திலும் சிறிது சிறிதாக நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள், நீண்ட நாட்கள் கழித்துப் பாருங்கள். அது உங்களை வளர்ச்சியடைய வைத்திருக்கும். அதை விட்டு விட்டு இன்று, நாளை ஏறியிருக்கிறதா என்று பார்க்காதீர்கள்; இறங்கினாலும் வருத்தப்படாதீர்கள்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


Saturday, May 23, 2009

ஆறு மாதங்களில் பொருளாதார நிலை சீராகும்: ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை

'அடுத்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலைமை சீராகும்' என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். மும்பையில் நிதித்துறை நிர்வாக உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: உலகச் சந்தையில் அமைதி திரும்புகிறது, நாம் எடுத்திருக்கும் நிதித்துறை நடவடிக்கைகளும் பலன் தரத் துவங்கியிருக்கின்றன. மெர்சண்டைஸ் ஏற்றுமதி அளவு இந்தியாவைப் பொறுத்தளவில் குறைவு. அது இழப்பீட்டைக் குறைத்திருக்கிறது. வசதியான அன்னியச் செலாவணி, பணவீக்கம் அதிகரிக்காத போக்கு ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள். இவை எல்லாம் சேர்ந்து பொருளாதார மந்த நிலையை அகற்றும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்


Thursday, May 21, 2009

இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் 83 சதவீதம் குறைந்திருக்கிறது

பொருளாதார மந்த நிலை காரணமாகவும், கடுமையான விலை ஏற்றத்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருந்ததாலும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் 83 சதவீதம் குறைந்திருக்கிறது. வேர்ல்டு கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.சி.சி.,) இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. உலகில் அதிகம் தங்கத்தை பயன்படுத்தும் நாடான இந்தியாவில், 2009 ஜனவரி - மார்ச் காலத்தில், தங்கத்தின் விலை 11 சதவீதம் உயர்ந்திருக் கிறது. அதிகபட்சமாக பிப்ரவரி 20 ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.16,040 ஆக இருந்தது. இதன் காரணமாக அந்த மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 83 சதவீதம் குறைந்து 17.7 டன்னாகி விட்டது. இதனால் அந்த மூன்று மாத காலத்தில் 1.7 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக் கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 62 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இப்போதுள்ள நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் இன்னும் சாதகமான நிலைக்கு வரவில்லை என்றாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை போகவில்லை என்று சொன்ன வேர்ல்டு கோல்ட் கவுன்சிலின் சி.இ.ஓ.,அரம் சிஸ்மணியன், மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க மீண்டும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் தங்கத்தின் தேவை 83 சதவீதம் குறைந்திருந்த அதே மூன்று மாத காலத்தில், உலக அளவில் தங்கத்திற்கான தேவை 38 சதவீதம் அதிகரித்து 1,016 டன் ஆகி இருக்கிறது. எளிதில் மாற்றத்தக்க முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அவர்களது முதலீடு அதிகரித்ததே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் சிறிது அதிகரித்தது

மே 9 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 0.61 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.48 சதவீதமாகத்தான் இருந்தது. தானியங்கள், இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய், சுகர், வாசனைப்பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்ப தால் பணவீக்கம் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தேங்காய் எண்ணெய், மைதா, உப்பு, ஆட்டா ஆகியவைகளின் விலை குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப் படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 8.57 சதவீதமாக இருந்தது.

நன்றி : தினமலர்



Wednesday, April 29, 2009

பி.பி.ஓ.வேலைக்காக 8,000 பேரை வேலைக்கு எடுக்கும் விப்ரோ டெக்னாலஜிஸ்

விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், அதன் பி.பி.ஓ.,பிரிவுக்கு, இந்த நிதி ஆண்டுக்குள் 8,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்திருக்கிறது. இந்த 8,000 பேரில் 1,300 பேர், ஐதராபாத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அதன் அலுவலகத்தில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு 3,150 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் அங்கு 22,000 பேர் வேலை பார்க்க முடியும். 70 வாடிக்கையாளர் களுக்கு தேவையான வேலைகளை இங்குள்ள பி.பி.ஓ., அலுவலகத்தில் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடையே பேசிய விப்ரோ பி.பி.ஓ., நிறுவனத்தின் தலைமை அதிகாரி அசுதோஷ் வைத்யா, நாங்கள் எங்களது பி.பி.ஓ., அலுவலகத்திற்கு பணியாளர்களை சேர்க்க ஆரம்பித்து விட்டோம். பெரிய நகரங்கள் மற்றும் டவுண்களில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்போம் என்றார். அங்கேயே அவர்களுக்கான கடிதம் கொடுக்கப்படும் என்றும் சொன்னார்.
நன்றி : தினமலர்


Tuesday, April 28, 2009

கொள்கையை விட பெர்சலாலிட்டியால்தான் ஒபாமா பிரபலமாகியிருக்கிறார்

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் பாரக் ஒபாமா, அதிபர் பதவியில் அமர்ந்து 100 நாட்கள் ஆகிறது. வெள்ளை மாளிகையில் 100 நாட்களை கழித்திருக்கும் ஒபாமா, அமெரிக்க மக்களிடையே அவரது கொள்கைகளால் பிரபலமாகவில்லை என்றும் அவரது பெர்சனாலிட்டியால்தான் பிரபலமாகியிருக்கிறார் என்றும் சி.என்.என்./ ஒப்பினியன் போல் ரிசர்ச் கார்பரேஷன் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 47 வயதான ஒபாமா, அதிபருக்குண்டான கடமைகளை சரியாக செய்வதாக 63 சதவீத அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். மூன்றில் ஒருவரே ஒபாமாவின் நடவடிக்கைகளில் திருப்தி கொள்ளவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. ஒரு அதிபருக்குண்டான தனிப்பட்ட தகுதிகள் ஒபாமாவுக்கு இருப்பதாக நான்கின் மூன்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதிபர் ஒபாமாவிடம் இரண்டு விதமான தகுதிகளை அமெரிக்கர்கள் பார்க்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஒன்று தனிப்பட்ட தகுதிகள். இன்னொன்று அவரது கொள்கைகள் என்கிறார் சி.என்.என்.னின் அரசியல் ஆய்வாளர் பில் ஸ்னைடர். ஆனால் பொதுவாக அமெரிக்க மக்கள் அவர்களது அதிபரிடம், தனிப்பட்ட தகுதியை விட அவரது கொள்கைகளையே அதிகம் பார்க்கிறார்கள். ஆனால் ஒபாமாவை பொருத்தவரை, அவரது கொள்கைகளை விட பெர்சனாலிட்டியில் தான் அதிகம் பிரபலமாகி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
நன்றி : தினமலர்