பணவீக்கம்: பணவீக்கம் சிறிது வீக்கமாகத் தான் இருக்கிறது. சிறிதளவு கூடியிருக்கிறது. சென்ற வாரம் 0.48 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 0.61 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டில் 4 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்சூரன்சின் புதிய வெளியீடு: இன்சூரன்ஸ் கம்பெனிகள் எல்லாம் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வரும் தருணம் இது. ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்ட் இன்சூரன்ஸ் கம்பெனியா அல்லது வேறு ஏதாவது கம்பெனியா? முதலில் வெளியீடைக் கொண்டு வருவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது ரிலையன்ஸ் வர முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்கின்றனர். பல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருப்பதால் அவர்களுக்கு சந்தை மேலே செல்வது ஒரு வாய்ப்பு தான்; முதலீட்டாளர்களுக்கும் தான்.
கச்சா எண்ணெய்: தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலர் அளவில் இருப்பதால், அரசு மானியங்களை நிறுத்திவிட்டு ஏன் மார்க்கெட் விலையை நிர்ணயித்து விற்கச் சொல்லக்கூடாது என்ற எண்ணங்கள் இருந்து வருகிறது. அப்படி வரும் பட்சத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை கூடும். எண்ணெய் கம்பெனிகளும் லாபம் பார்க்க வேண்டுமே? அமைச்சர்களின் துறைகளும் சந்தையும்: சந்தை புதிய அமைச்சரவையில் யார் யார் அமைச்சராக வரப்போகின்றனர் என்ற யூகங்கள் பலவாறாக இருக்கிறது. குறிப்பாக எரிசக்தி, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளைப் பற்றி. இந்த துறைகளில் வரும் ஐந்து ஆண்டுகளில் பல திட்டங்கள் நடைபெற இருப்பதால் யூகங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக மட்டும் அரசு உடனடியாக 57,000 கோடி ரூபாய் வரை செலவிடவுள்ளது. நல்ல சாலை வசதிகள் நாட்டிற்கு பல மேம்பாடுகளைப் பெற்றுத் தரும் என்பது யாருக்கும் சந்தேகம் இல்லை.
2003ம் ஆண்டும் பங்குச் சந்தையும்: கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் பங்குச் சந்தை 3000 புள்ளிகளில் தான் இருந்தது என்றால் நம்ப முடியுமா? ஆமாம். அதுதான் உண்மை. உயர்ந்து கொண்டே வந்து 2008ம் ஆண்டு அதே பங்குச் சந்தை ஜனவரி 10ம் தேதி 21,207 புள்ளிகளை அடைந்தது. அதாவது ஆறு மடங்கு லாபங்கள், ஐந்தாண்டுகளுக்குள். அதன் பிறகு வந்த சுனாமி தான் பலருக்கு தெரியும். பங்குச் சந்தை நார்நாராகக் கிழித்துச் சென்றது. கிழிந்த சந்தை மறுபடி மேலே வர முயற்சிக்கிறது. 8,000 அளவிற்கும் சென்ற சந்தை தற்போது 14,000 அளவுகளில் நிற்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. சந்தையை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். எப்போதெல்லாம் குறைகிறதோ அந்த சமயத்தில் நல்ல பங்குகளை வாங்கி கணக்கில் சேர்க்க வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். தினசரி லாப நஷ்டங்கள் பார்த்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கக்கூடாது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை ஏற்றமும் இறக்கமாகவே இருக்கும். 100 நாட்களுக்குள் பட்ஜெட் மற்றும் அரசாங்கத்தின் பல அறிவிப்புகள் ஆகியவை வரலாம். அவை சந்தை உயர்த்தும். சந்தை வருங்காலங்களில் மேலே செல்லவே வாய்ப்புகள் அதிகம். எல்லா இறக்கத்திலும் சிறிது சிறிதாக நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள், நீண்ட நாட்கள் கழித்துப் பாருங்கள். அது உங்களை வளர்ச்சியடைய வைத்திருக்கும். அதை விட்டு விட்டு இன்று, நாளை ஏறியிருக்கிறதா என்று பார்க்காதீர்கள்; இறங்கினாலும் வருத்தப்படாதீர்கள்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment