Tuesday, February 24, 2009

புதுச்சேரி எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் லாக் அவுட்

சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எஃப்.டயர் கம்பெனி, அதன் புதுச்சேரி தொழிற்சாலையில் லாக்அவுட் செய்திருக்கிறது. தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக லாக் அவுட் செய்திருப்பதாக மும்பை பங்கு சந்தையில் அது அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 22 ம் தேதி இரண்டாவது ஷிப்ட்டில் இருந்து லாக்அவுட் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. எம்.ஆர்.எஃப்.,நிறுவனத்திற்கு சென்னை, அரக்கோணம், புதுச்சேரி, கேரளாவில் கோட்டயம், ஆந்திராவில் மேடக் மற்றும் கோவாவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் அதன் தொழிற்சாலைகளில் ஒரு வருடத்திற்கு மேலாக தொழிலாளர் பிரச்னை இருந்து வருகிறது. அதன் திருவெற்றியூர் தொழிற்சாலை கடந்த 2007 டிசம்பர் மாதத்தில் இருந்தே மூடப்பட்டிருக்கிறது. அங்கு எம்.ஆர்.எஃப்., நிர்வாகம் கொண்டுவந்த நிரந்தர லாக் அவுட் திட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியை சென்னை ஐகோர்ட் கடந்த வாரத்தில் நிறுத்தி வைத்தது.
நன்றி :தினமலர்

Monday, February 23, 2009

பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை ஆர்.பி.ஐ.எடுக்கும் : சுப்பாராவ்

இந்திய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்படும் போது வேண்டிய நடவடிக்கையை எடுக்க தயங்காது என்று ஆர்.பி.ஐ.,யின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளின் மத்திய வங்கி தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த சுப்பா ராவ், நிதி அமைச்சரை சந்தித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். ஞாயிறு அன்று அவர் நிதி அமைச்சரை சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் குறித்தும் இந்திய பொருளாதார நிலை குறித்தும் பேசினார். அப்போது நம்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றார். வெளிநாடுகளின் பொருளாதார நிலை குறித்தும் அதனை சமாளிக்க அங்குள்ள மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழே சென்றிருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கலாம் என்று இங்கே உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் டோக்கியோ சென்றிருந்த சுப்பா ராவ் அங்கு பேசியபோதுற, நாங்கள் இன்னும் வட்டியை குறைக்க முடியும். ஆனால் எவ்வளவு குறைப்பது, எப்போது குறைப்பது என்றுதான் தெரியாமல் இருக்கிறது என்றார். இப்போது ரிசர்வ் வங்கியில் ரிபோ ரேட் 5.5 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரிபோ ரேட் 4.0 சதவீதமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வாங்குகிறது ரிலையன்ஸ்

அமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை வாங்கும் முயற்சியில் ரிலயன்ஸ் இன்டஸ்டிரீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் கிழக்கு, மேற்கு மற்றும் வளைகுடா கடற்பகுதியில் கிடங்குகளை அது தேடி வருகிறது. கிடங்குகளை குத்தகைக்கு எடுக்கிறார்களா அல்லது விலைக்கு வாங்குகிறார்களா என்று இன்னும் தெரியவில்லை. அந்த கிடங்குகள் ஒவ்வொன்றும் 2,00,000 முதல் 2,50,000 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. மார்ச் முடிவிற்குள் கிடங்குகள் வாங்கும் வேலை முடிந்து விடும் என்று தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம், நாள் ஒன்றுக்கு 5,80,000 பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலையில் தயாராகும் எண்ணெய்யை, உலக அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. அதற்காக இந்த சேமிப்பு கிடங்குகள் வாங்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு இருக்கும், நாள் ஒன்றுக்கு 6,60,000 பேரல் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறனுடைய தொழிற்சாலைக்கு அருகிலேயே 5,80,000 பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் இன்னொரு தொழிற்சாலையையும் அது நிறுவியிருக்கிறது. அதன் மூலம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை கொண்டதாக ஆகியிருக்கிறது.
நன்றி : தினமலர்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனம் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் விலகல்

ரூ.7,800 கோடி மோசடியில் சிக்கி, வழக்கை சந்தித்து வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக இருந்து வந்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம், அதிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 12,2009 முதல் அது விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. எனினும் அங்கு நடந்ததாக கூறப்படும் ரூ.7,800 கோடி மோசடி குறித்து நடந்து வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அது அறிவித்திருக்கிறது. சனிக்கிழமை அன்று கூடிய சத்யத்தின் போர்டு, அதன் ஆடிட்டராக இருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனையடுத்து பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்திற்கு பதிலாக வேறு ஆடிட் நிறுவனத்தை நியமிக்கும் வேலையில் சத்யம் போர்டு ஈடுபட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம்: '3 ஜி' சேவை சென்னையில் அறிமுகம்

பி.எஸ்.என்.எல்., சார்பில் இந்தியா முழுவதும் எந்த நெட்ஒர்க்கிற்கும், எந்த பகுதிக்கும் '50 காசுகளில்' பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத் தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இச் சேவையை துவக்கி வைத்து பேசியதாவது: சில வளர்ந்த நாடுகளில் மட் டுமே அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பில் உள்ள இந்த '3 ஜி' சேவை, தற்போது முதன் முதலாக இந்தியாவிலும் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., மூலம் சென்னையிலேயே துவக்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரே நேரத்தில் ஏழை மக்களுக்காக நடத்தும் இதுபோன்ற சாதனைகளை நாம் என் றைக்கும் நிரந்தர சரித்திர கல்வெட்டுக்களாக ஆக்குகிறோம். இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், நான் இங்கே வந் திருப்பது என் உடலில் ஒரு துளி ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பிரச் னைக்காக, நாட்டு நன்மைக் காக போராடுவேன் என்பதற்காகத் தான். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப் பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா பேசியதாவது: கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல்., மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என். எல்., மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ராஜா பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் கூறியதாவது: சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு குல்தீப் கோயல் தெரிவித்தார். நிகழ்வில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி முதன் மை பொது மேலாளர் வேலுசாமி, தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுரா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு': பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3ஜி' மொபைல் சேவை சென்னையில் துவக் கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வருகிறது. இதற்கு தனி சிம் கார்டு மற்றும் எண் வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டின் விலை 300 ரூபாய். இதில் பேசும் வசதி அளிக்கப் படவில்லை. ஏழு நாட்கள் 'வேலிடிட்டி' வழங்கப்பட் டுள்ளது. 2 ஜி சேவையிலிருந்து 3ஜி சேவைக்கு நேரடியாக மாறும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதில் வாய்ஸ் மற்றும் டேட் டா பிளான் எனும் இரண்டு திட்டங்கள் உள்ளன. இரண்டு திட்டங்களிலும் போஸ்ட் பெய்டு மற்றும் பிரிபெய்டு வசதிகளும் உள் ளன.
நன்றி : தினமலர்


Sunday, February 22, 2009

குக்கிராமங்களில் சேவை வங்கி புது திட்டம்

வங்கியின் கிளை இல்லாத குக்கிராமங்களில் சேவை செய்ய, மின்னணு சாதனங்களின் வசதியுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்த உள்ளது. குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கியில் பணம் போடும் வசதி இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வேலை செய்ய தொழிலாளிகள் போகும் போது, அவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். இப்படி குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்ய ஸ்டேட் பாங்க் புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. வங்கியின் சார்பில், குக்கிராமங்களில், வர்த்தக பிரதிநிதிகள் இருப்பர். அவர்களிடம் மின்னணு சாதனம் தரப்படும். விவசாயிகள், தொழிலாளிகளுக்கு வங்கி தரும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, இந்த சாதனம் மூலம் தங்கள் குடும்பத்துக்கு உடனுக்குடன் பணம் அனுப்பலாம். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணத்தை தங்கள் வங்கி கணக்கில் போட இந்த மின்னணு சாதனம் உதவுகிறது. கிராமங்களில், கூட்டுறவு சட்டத் தின் படி செயல்படும் கூட்டுறவு சொசைட்டிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை வங்கியின் பிரதிநிதியாக செயல்படும். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கிராமத்தில் உள்ளவர்கள் பணத்தை செலுத்தினால், அதே போல, ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணமும் எடுக்கலாம். ஸ்மார்ட் கார்டில் இருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றும் வசதியையும் வங்கி ஏற்படுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் கார்டை, ஏ.டி.எம்., கார்டு போலவே பயன்படுத்தலாம். பணத்தை போடுவது, எடுப்பது, கணக்கு விவரம் பெறுவது ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு புத்துயிர்

வியாழனன்று சந்தை மேலும் கீழுமாக இருந்தது என்றாலும், அதற்கு முந்தைய மூன்று நாட்கள் கீழேயே போய்க் கொண்டிருந்த சந்தையை மேலே கொண்டு வந்தது. ரூபாயின் மதிப்பு 50 வரை சென்று வந்ததால், அது சாப்ட்வேர் கம்பெனிகளுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்து அந்தக் கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றன. பணவீக்கம் மேலும் இந்த வாரம் குறைந்திருந்தது. ஆனால், சந்தை அதைக் கண்டுகொள்ளவில்லை. வெள்ளியன்று சந்தை உலகச் சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது. அன்றைய தினம் ஒரு கட்டத்தில் சந்தை, 280 புள்ளிகள் வரை இழந்திருந்தது. இது தான் சமயம் என்று வாங்குபவர்கள் சிலர் இருந்ததால், சந்தை இழந்ததில் 80 புள்ளிகளை திரும்பப் பெற்றது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 199 புள்ளிகள் கீழே சென்று 8,843 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 52 புள்ளிகள் கீழே சென்று 2,736 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை 9,000க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான். கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி முடிவில் 9,647 புள்ளிகளில் சந்தை முடிவடைந்திருந்தது. ஆனால், தற்போது 9,000 அளவில் அல்லாடுவது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் தான். நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால், இன்னும் விலை குறைகிறது. அதனால், முதலீட்டா ளர்கள் பயப்படும் நிலை உள்ளது. அதனால், சந்தையால் மேலே வரவே முடியவில்லை. நீண்டகாலம் என்று வாங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். சென்ற வருடமெல்லாம் பணவீக்கம் குறையாதா என்று கடவுளைப் பிரார்த் தித்துக் கொண்டிருந்தோம். தற்போது இன்னும் குறையாமல் இருக்க வேண்டுமே என்று முதலீட்டாளர்கள் பிரார்த் தித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குறைவதற்குக் காரணம் தேக்க நிலை தான். சென்ற வாரம் 4.39 சதவீதம் அளவிற்கு இருந்தது, தற்போது 3.92 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது, பரமபத இறக்கம் தான். ஏறுவதில் இருந்த ஜோர் இறங்குவதிலும் உள்ளது. ஆனால், இரண்டுமே நிம்மதி தரவில்லை. டிசம்பர் 2007ல் 3.8 சதவீதம் வரை சென்றிருந்தது. அதை கிட்டத்தட்ட மறுபடி நெருங்கி விட்டது. இது போன்ற பொருளாதார மந்தமான சூழ்நிலையில் எல்லாரும் எங்கும் முதலீடு செய்யாமல் பணத் தைப் பணமாக வைத்திருப்பதையே விரும்புவர். நல்ல சமயத்திற்காகக் காத்திருப்பர். ஆனால், இது மியூச்சுவல் பண்டு களுக்கும் பொருந்துகிறது. தற்போது மியூச்சுவல் பண்டுகள் அதிகம் முதலீடு செய்யாமல் பணத்தைக் கைவசம் வைத்துள்ளது. ஜனவரி முடிவில் எல்லா மியூச்சுவல் பண்டுகளும் இது போல கைவசம் வைத்திருந்தது 9,729 கோடி ரூபாய். நல்ல சமயத்திற் காக அவர்களும் காத்திருக்கின்றனரோ என் னவோ? பூஜாரிகள் தான் சாமியிடம் வரம் கேட்க வேண் டும்.. ஆனால், சாமியே வரம் கேட்கும் நிலைக்கு வந்தால்? 9,729 கோடி ரூபாய் என்பது கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர் அளவு, சந்தைக்குள் வந்தால் சந்தையில் புது ரத்தம் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.
8 சதவீத வட்டி: வீடு வாங்கப் போகின்றீரா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித் தது... வங்கிகளுடையே போட்டி உண்டாகியுள்ளது. வேறு சில வங்கிகளும் 8 சதவீதம் தான் முதல் வருட வட்டி என்று அறிவித் துள்ளன. ஆனால், அது ஐந்து லட்சம் வரை உள்ள லோன்களுக்குத் தான் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீட்டு விலையும் குறைகிறது, வட்டியும் குறைகிறது. முதலீட்டாளர்களுக்கு லாபம் தானே? அடுத்த வாரம் பங்குச் சந்தை ரிசர்வ் வங்கியை நம்பி இருக்கும். ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : dinamalar