காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவே முடியாத பகுதி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துவதை விட்டுவிட்டு அதை ஒரு பிரச்னைக்குரிய பகுதி என்று நம்மவர்களே உலக அரங்கில் ஒத்துக்கொண்டு விடுவார்களோ என்கிற பயம் சமீபகாலமாக எழுந்து வருகிறது. இந்தியாவின் தேச நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும் காஷ்மீர் பிரச்னையில் நாங்கள் அமெரிக்காவின் வழிகாட்டுதல்படி நடக்கிறோம் என்று நம்மவர்கள் சொல்லி விடுவார்களோ என்றும் பயமாக இருக்கிறது.
ஆரம் பம் முதலே காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணையத் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. தாங்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று கருதும் காஷ்மீரிகள் கேட்டது "ஆசாதி', அதாவது, தனி நாடுதானே தவிர பாகிஸ்தானுடன் இணைய ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவை விட்டுப் போகும்போது கூடவே பிரச்னையையும் விட்டுப் போக வேண்டும் என்று கருதிய பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவுதான் காஷ்மீர் பிரச்னை.
காஷ்மீரைத் தனி நாடாக்கி அதைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஆசியா கண்டத்தையே தனது கண்காணிப்பில் வைத்திருப்பது என்கிற ரகசியம் மேலைநாட்டு வல்லரசுகளுக்கு நன்றாகவே தெரியும். காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தனது ராணுவத் தளத்தை அமைத்துவிட்டால், எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசிய நாடுகள், ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட வளமும், பலமும் பொருந்திய எல்லா ஆசிய நாடுகளையும் கண்காணிக்க முடியும் என்று மேற்கத்திய வல்லரசுகள் நினைக்கின்றன. அதனால்தான், அமெரிக்கா ஆரம்பம் முதலே பாகிஸ்தானுக்குப் பெரிய அளவில் நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்துக் காஷ்மீர் பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்படி பார்த்துக் கொள்கிறது.
உலக ராஜதந்திர வியூகத்தில் தத்தம் நாடுகளின் பாதுகாப்பையும், மேலாண்மையையும் பாதுகாக்க முயல்வதும் செயல்படுவதும் தவறல்ல. அந்த வியூகங்களை உடைத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக மாறி விட்டிருக்கிறது என்பதற்கு, அங்கே தொடர்ந்து நடந்துவரும் தேர்தல்களும், அதில் கடந்த நான்கு தேர்தல்களாக மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வாக்களித்திருப்பதும்
சாட்சி. பாகிஸ்தானியப் பகுதியான ஆசாத் காஷ்மீரில் முறை
யா கத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்பதையும், அங்கே அடிக்கடி பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதையும் நாம் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரைப் பற்றி இப்போது நாம் விவாதிக்க வேண்டியதன் காரணம், அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா சிறுபிள்ளைத்தனமாக வெளியிட்டிருக்கும் சில கருத்துகள்தான். காஷ்மீரிலுள்ள தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஜனநாயக வழிமுறைக்கு அழைத்து வருவதற்கு முயற்சிக்க வேண்டிய முதல்வர், திடீரென்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்று பேசத் தொடங்கி இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
முத்த ரப்பு என்பது தீவிரவாதக் குழுக்கள், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என்று கூறியிருந்தால் அவரது முயற்சியை வரவேற்றுப் பாராட்டி இருக்கலாம். உமர் அப்துல்லா குறிப்பிடும் முத்தரப்பு என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் என்று இருப்பதை நாம் எப்படி வரவேற்பது? அது இருக்கட்டும். இப்படி ஓர் அபத்தமான கருத்தை ஒரு மாநில முதல்வர் வெளியிடுகிறார். அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சியோ, உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசோ மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லையே, ஏன்?
கடந்த நான்கு தேர்தல்களைவிட, தீவிரவாதக் குழுக்கள் விடுத்த எச்சரிக்கைகளைச் சட்டை செய்யாமல் காஷ்மீர் மக்கள் வாக்குப் பதிவில் கலந்துகொண்டிருப்பதில் இருந்தே, மக்கள் மத்தியில் தீவிரவாதம் செல்வாக்கு இழந்து வருவது தெளிவாகிறது. கடந்த 20
ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் மிகமிகக் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், அவசியமே இல்லாமல் முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் பாகிஸ்தானைப் பிரச்னையில் நுழையவிட வேண்டிய அவசியம்தான் என்ன?
காஷ் மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் பேசுகிறார்கள். நாம் மௌனமாக இருக்கிறோம். இங்கே, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சகாவான காஷ்மீர் முதல்வர், முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை இணைக்க வேண்டும் என்கிற விபரீத யோசனையை முன்வைக்கிறார். நாம் பேசாமல் இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ஜம்மு காஷ்மீரிலிருந்து ராணுவம்
கணிசமாகக் குறைக்கப்படும் என்கிறார். எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். அதிர்ச்சி தரும் விஷயங்கள் இவை.
காஷ்மீரிலிருந்து ராணுவத்தைக் குறைப்பதோ விலக்கிக் கொள்வதோ ஆபத்து. பாகிஸ்தானை முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நினைப்பது அபத்தம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வாளாயிருந்தால் அதன் விளைவு விபரீதமாக முடியும்!
நன்றி : தினமணி
Sunday, December 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment