Sunday, December 6, 2009

லேப்-டாப்பில் டிவி பார்க்கலாம்: டாடா புதிய திட்டம்

லேப்-டாப் அல்லது கணினியில் அனைத்து 'டிவி' சேனல்களையும் கண்டு களிக்கும் வகையில், டாடா டெலிசர்வீசஸ், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினியிலோ அல்லது லேப்-டாப்பிலோ எங்கிருந்தாலும் 'டிவி' சேனல்களைப் பார்ப்பதற்கு, 3ஜி வசதியைப் பயன்படுத்தி டாடா டெலிசர்வீசஸ், 'போட்டான் டிவி' என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியால், நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கும்போது கூட லேப்-டாப்பில் 'டிவி' நிகழ்ச்சிகளை காணமுடியும். இதற்காக, டாடா டெலிசர்வீசஸ், 3ஜி வசதியைப் பயன்படுத்துகிறது. டாடாவில் அதிவிரைவு இணையதளத் தொடர்பு வாங்குபவர்கள் இந்த போட்டான் 'டிவி'யைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே, வாங்கியிருப்பவர்கள், 'போட்டான் பிளஸ் யு.எஸ்.பி., கார்டு' மூலம் தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான கட்டணம் 'டிவி' சேனல்களுக்கு நீங்கள் அளித்து வரும் கட்டணம் போன்றதுதான். அதாவது ஒரு சேனலுக்கு நான்கு ரூபாய். 10 சேனல்கள் கொண்ட தொகுப்புக்கு 29 ரூபாய். 40 சேனல்களுக்கு 75 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 'போட்டான் சூப்பர் சர்ப் பிளான்' திட்டத்தில் 1,500 ரூபாய் செலுத்தினால், மாதத்துக்கு 160 மணி நேரம் 'டிவி' பார்க்கலாம். ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்துக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் 3ஜி வசதி இருப்பதால், பல்வேறு விளையாட்டு, செய்தி, பொழுதுபோக்கு மற்றும் அந்தந்தப் பகுதி சேனல்களை தடையின்றி பார்க்க முடியும். இதற்காக, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், 'அபல்யா டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: