உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பெருகி வருவ தும், அதனால் பலர் பயனடைந்து வருவதும் மகிழ்ச்சி தரும் செய்திகள். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு, ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைத் தானம் அளிக்க முன்வந்த டாக்டர் தம்பதியால் தமிழ்நாடு முழுவதும் பரவலாயிற்று. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட நோயாளிகளின் உறுப்புகளைத் தானமாக அளிக்க முன்வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் குறிப்பிடுவதைப் போல, சராசரியாக வாரம் ஒரு உறுப்பு தான உடல் வந்துகொண்டிருந்த நிலைமை மாறியுள்ளது. இம்மாதம் 10, 12 ஆகிய இரு நாள்களில் 5 உறுப்புதான உடல்கள் பெறப்பட்டு, பல்வேறு உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையால் 15 பேர் பயனடைந்துள்ளனர். இதுவரை 100 சிறுநீரகங்கள், 14 கல்லீரல்கள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும்போது உறுப்புதான உடல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உறுப்புகளைப் பெறுவதில் சங்கிலித் தொடர் நிறுவன மருத்துவமனைகள் முன்னுரிமை பெறுவதையும், பணவசதி படைத்தவர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவமனைகளில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையால் பயன்பெறுகிறார்கள் என்பதையும் பார்க்கும்போது, பழையபடியே முறைகேடுகள் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
உடல்தானம் செய்யும் குடும்பத்தினர் ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவினர், பணக்காரர்கள் என்று பல விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதில்லை. விருப்பம் தெரிவிக்கவும் முடியாது. உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சை யாருக்கு நடத்த இயலும் என்பதையும், தானம் பெற்ற உறுப்பின் அளவு, திசுக்கள் அதைப் பொருத்திக்கொள்ளும் நோயாளியின் உடல் ஏற்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டியது மருத்துவ வல்லுநர் குழுதான்.
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான நவீன மருத்துவக் கருவிகளை வைத்திருக்கும் மருத்துவமனைகள் அனைத்துமே பெரிய, நிறுவனமாக்கப்பட்ட மருத்துவமனைகளாக உள்ளன. விதிவிலக்காக, சென்னையில் தலைமை அரசு மருத்துவமனையிலும், அதிகபட்சமாக ஸ்டான்லி மருத்துவமனை அல்லது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி இருக்கக்கூடும். மற்றபடி, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் இதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பதுதான் நிலைமை.
உடல்தானம் செய்வோர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மூளை இறப்புக்கு உள்ளான தங்கள் குடும்ப அங்கத்தினரின் உடல்உறுப்புகள் யாருக்காவது பயன்படட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் மட்டுமே அளிக்கின்றனர். இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் உடல்உறுப்புகள் எந்தவொரு தனிப்பட்ட மருத்துவமனைக்கும் சொந்தமானது அல்ல. தற்போதைய நடைமுறையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளரை அரசு நியமித்து, தானமாகக் கிடைத்த உறுப்புகள் யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை தமிழக அரசு புகுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உடல்உறுப்பு தானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும், அவ்வாறு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிடவும் வேண்டும். அமெரிக்காவில் உறுப்பு பெறுதல் மற்றும் மாற்றிப்பொருத்துதல் இணையம் (ஞடபச) உள்ளது. இதில் நோயாளிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்கிறார்கள். அவர்களது நோயின் தீவிரம் மற்றும் திசுப் பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவக் குழு அப்பட்டியலில் உள்ள நோயாளிகளைத் தீர்மானிக்கிறது. அதேபோன்ற நடைமுறை தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். சிறுநீரகத் திருட்டுகள் நடைபெற்ற தமிழகத்தில், இத்தகைய வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியமாகிறது.
இதனை வலியுறுத்த இன்னொரு முக்கிய காரணம், தமிழகத்தில்தான், முதல்முறையாக தானம்பெற்ற கல்லீரல் ஒரு அயல்நாட்டவருக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த இராக் நாட்டைச் சேர்ந்த நோயாளி பயனடைந்திருக்கிறார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பொருத்தமான நோயாளிகள் இருக்கிறார்களா என்று தேடியபோது, அங்கு இல்லாத காரணத்தால், ஒரு உறுப்பு வீணாகிவிடக் கூடாதே என்கிற நோக்கில், அயல்நாட்டவர் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இதேபோன்ற நிலைமை தொடரக்கூடாது. ஏனென்றால், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவில், இங்கே ஐந்துநட்சத்திர ஹோட்டல் போன்ற வசதியுள்ள தனிஅறைகளில் தங்கி, தரமான சிகிச்சை பெற்று நலமாகத் திரும்ப முடிகிறது என்பதுதான் இதற்குக் காரணம். அவ்வாறு வருவோர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு சிறுநீரகமோ அல்லது கல்லீரலோ, இதயமோ வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருப்போர் பட்டியல் மிகமிக நீளமாக இருக்கும். கிடைத்தாலும் அதற்கான செலவு குறைந்தது ஒரு லட்சம் டாலர் ஆகிறது. இது போதுமே-இந்திய மருத்துவ உலகில் முறைகேடுகளை முடுக்கிவிடுவதற்கு!
உடல்தானம் குறித்த விழிப்புணர்வு பரவலாகும் இந்த வேளையில், உடல்உறுப்பைத் தானம் பெறக் காத்திருப்போர் மற்றும் தானம் அளித்தோர், சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனைகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்பது முறைகேடுகளைப் பெருமளவு குறைக்கும்.
நன்றி : தினமணி
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment