கடலோடும், கடற்கரையோடும் பின்னிப் பிணைந்தது தான் மீனவ சமூகத்தின் வாழ்க்கை. வரலாறு முழுவதும் பரதவரின் சிறப்புமிக்க பண்பாடும் வீரமிக்க போராட்டங்களும் மறைக்கப்பட்டே வந்துள்ளன.
÷ நாட்டின் எல்லைப் பகுதிகளான கடற்கரைகளில் வாழ்ந்து கொண்டு கடல்புற வழியாக வெளிநாட்டிலிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து தம் இன்னுயிரைத் தியாகம் செய்து, நாட்டைக் காப்பாற்றிய எல்லையோரக் காவலர்களாக வாழ்ந்தவர்கள் தான் மீனவ சமூகத்தினர். நாள்தோறும் மீனவரின் தொழில் வாழ்க்கை என்பது குளிரூட்டப்பட்ட அறை ஒன்றுக்குள் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை அமர்ந்து பணி உத்தரவாதத்துடன் ஓர் ஊழியர், அதிகாரி செய்யும் வேலையைப் போன்றதல்ல.
கடலுக்குப் போனால் உயிருக்கும், திரும்பி வருவதற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. உள்ளூரில் யார் காணாமல் போனாலும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல ஊடகச் சாதனங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு தனிப் போலீஸ்படை அமைத்து தேடுதலும் முடுக்கிவிடப்படுகிறது. ஆனால் மீனவர்கள் கடலில் காணாமல் போனால் வழக்குக் கூட பதிவாகாது. இப்படி உயிரைப் பணயம் வைத்து மீனவர் பிடிக்கும் மீன் ஏற்றுமதியால் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும்.
÷இந்தியா உலகின் மீன் உற்பத்தியில் மூன்றாம் இடம் வகிக்கிறது. நன்னீர் மீன் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இத்தனைக்கும் மீனவரின் மக்கள்தொகை நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவானதே. உணவு மற்றும் விவசாய அமைப்பின் கணக்கின்படி மொத்த மீனவர் 8.70 மில்லியன். இதில் முழு நேரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் 0.93 மில்லியன், பகுதி நேர மீனவர்கள் 1.07 மில்லியன், மீன் சார்ந்த மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் 3.96 மில்லியன் ஆகும்.
÷கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. இவ்வளவு மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்தாலும் தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்துப் பிடிக்கும் மீன்பிடிப்பால் நாட்டின் 20 சதவிகிதம் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றனர். அதே உணவு மற்றும் விவசாய அமைப்பின் கணக்குப்படியே கடந்த 2003-2004-ம் ஆண்டின் மொத்த மீன் உற்பத்தி 63-99 டன்கள். மீன் குஞ்சு உற்பத்தி 19,173 மில்லியன். அதே காலத்தில் ஏற்றுமதி 5.21 லட்சம் டன்கள். அதாவது, 6793.05 கோடி ரூபாய். இது கடந்த 2007-2008-ல் 9000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது நாட்டுக்கு உழைக்கும் மீனவர்களுக்கு அரசு என்ன தான் செய்துள்ளது?
÷மீனவரைக் கடற்கரையிலிருந்தும், மீன்பிடி தொழிலிலும் இருந்தும் அகற்றிட அரசு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. கடந்த சில பத்தாண்டு கால வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் இந்த உண்மையை நமக்கு உணர வைக்கின்றன. ஏன் இப்படி நடக்கிறது? ஒப்பீட்டளவில் உலகின் பல நாடுகளின் கடற்கரைகள் மாசடைந்துவிட்டன. கடல் வளங்களும், அளவுக்கு அதிகப்படியான மீன்பிடிப்பால் சுரண்டப்பட்டுவிட்டன.
உதாரணமாக ஜப்பான் மற்றும் சில கிழக்காசிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கடல் மீன்வளம் குறைந்துவிட்டபடியால் செயற்கையான முறையில் நிலங்களிலும், கடற்கரைகளிலும் பாத்தி கட்டியும், பண்ணை அமைத்தும் மீன் வளர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயத்தில் இதற்கு மாறாக இந்தியக் கடற்கரையும், கடல்வளங்களும் பெருமளவில் வளங்குன்றாமல் அழகுடன் திகழ்கின்றன. 7,517 கி.மீ. நீளமுள்ள இந்தியக் கடற்கரையையும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் தரும் கடல் வளத்தையும் குறி வைத்து ஏராளமான தனியார் சுற்றுலா நிறுவனங்களும், அந்நிய மீன்பிடி நிறுவனங்களும் வரத் துவங்கிவிட்டன. நாட்டின் உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தத் துவங்கியதிலிருந்து டாலர் குவியும் இடமாகக் கடற்கரையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இக்காலந்தொட்டே கடற்கரையை ஆக்கிரமிக்கும் திட்டங்கள் அணி வகுக்கத் தொடங்கிவிட்டன என்பது கவனிக்கத்தக்கது.
÷கடற்கரையில் ஓய்வு விடுதிகள், ரிசார்ட்டுகள், நீர் விளையாட்டுகள், மிதவை ஹோட்டல்கள் கட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டால் கிடைக்கும் அந்நியச் செலாவணி அதிகமாகும். அதேபோன்று வெளிநாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், கணிப்பொறிதகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் இவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனக் கடற்கரையில் அமைந்து கொண்டிருக்கும் மற்றும் அமைய இருக்கும் வளர்ச்சித் திட்டங்களின் பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது.
இவர்களின் நிர்பந்தத்தால் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை 1991 பலமுறை திருத்தப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.
இதனைப் பலப்படுத்துவதற்கு விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிப்பாணை இயற்றப்பட்டது. இந்த அறிவிப்பாணையானது கடற்கரையிலிருந்து 1 கி.மீ. (1000 மீட்டர்) தொலைவுக்கு அப்பால் மீனவர்கள் செல்ல வேண்டும் என்றும் கடலுக்குள் 12 கடல் மைல்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் (மீன் பிடிக்க அனுமதியில்லை என்பது மறைமுகமானது) என்றும் பரிந்துரைத்தது. இது மீனவர்களுக்கு எதிராக இருந்தது. கடல்வளத்தையும் கடற்கரையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பதிலாக இப்போது கடல் மீன்பிடி (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன் வரைவு மசோதா 2009-ல் கொண்டு வரப்பட்டுள்ளது.
÷இப்புதிய சட்ட முன் வரைவு மறைமுகமாக அல்ல, ஒளிவுமறைவாக கூட இல்லாமல் நேரடியாக மீனவர்களை அழிப்பதற்கு குறி வைத்து ஏவிவிடப்பட்டுள்ளது.
இச்சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் மீனவர்களின் வாழ்வுரிமை முற்றிலுமாகப் பாதிக்கப்படும். மீனவர்களின் இனமே கூண்டோடு அழிக்கப்படும். ஒடுக்குமுறையின் உச்சமாக உள்ள இச்சட்டத்தின் முக்கியப் பிரிவுகள்
மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு மேல் அதாவது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது. மீறிச் சென்றால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 9 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் ஒரு சேர விதிக்கப்படும். ரூ. 10,000-த்துக்கு மேல் மீன்பிடிக்கக்கூடாது. அப்படி மீன்பிடிக்கும்பட்சத்தில் படகும், பிடிக்கப்பட்ட மீனும் மத்திய அரசால் பறிமுதல் செய்யப்படும், ஏலம் விடப்படும். அப்படகில் உள்ள மீனவர் தலா ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
÷எல்லாவற்றுக்கும் மேலாக அந்நிய பன்னாட்டு நிறுவனம், அந்நிய நிறுவனத்தின் கப்பல்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கும் கடித முறை ஏற்கெனவே அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
÷வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நமது கடலில் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி மரபு வழி மீனவர்கள் எந்தெந்த மாதங்களில் எந்தெந்த மீன்பிடிக்க வேண்டும், எவ்வளவு காலம் மீன்பிடிக்க வேண்டும், எவ்வளவு மீன்பிடிக்க வேண்டும் எந்தக் கருவியை, எந்த அளவுள்ள படகைப் பயன்படுத்தி எந்த இடத்தில் மீன்பிடிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு விதிகள் மூலமாக அறிவிக்கும்.
கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் நோக்கமாக தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒழுங்கைக் காப்பது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்புக் கருதியோ, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டியோ படகு உரிமையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.
÷ஏற்கெனவே கடலோரப் பாதுகாப்புப் படையினரும் கப்பல் படையினரும் கடலில் மீன்பிடிக்கும் மீனவரைத் துன்புறுத்தி வருகின்றனர். இப்போது இச்சட்டத்தின்படி தேசியப் பாதுகாப்பு என்ற பெயரிலோ சட்டம் ஒழுங்குக்குப் பாதகமாகச் செயல்பட்டார் என்றோ கடலோரப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் மீனவரைத் துன்புறுத்துவது சட்டபூர்வமாகிவிடும். அது தொடர்கதையாகிவிடும்.
மேலிருக்கும் சட்டப்பிரிவுகளைப் படிக்கும் யாரும் நமது கடலில் மீன்பிடிக்க பாரம்பரியமான மீனவர்களுக்கு அனுமதி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நமது மீனவர்களை மீன்பிடிப்புத் தொழிலிலிருந்து விரட்டி அடிப்பதற்கான சட்டபூர்வ முயற்சியே இது. அன்று தேசத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களை ஒடுக்குவதற்காக வெள்ளை ஏகாதிபத்தியத்தால் போடப்பட்டது, ரெüலட் என்ற ஒடுக்குமுறைச் சட்டம். அதற்கு சற்றும் குறைந்ததல்ல இச்சட்டம். இச்சட்டம் வந்தால் மீனவர்கள் கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் விரட்டியடிக்கப்படுவது நிச்சயம். மீனவர்கள் மத்தியில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும். கடல் வளத்தையும், கடற்கரையையும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளையடித்து முழுவதையும் சுரண்டப்போவது நிச்சயம்.
எனவே, எல்லா வகையிலும் மீனவரின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இப்போது நாடு முழுவதும் எழுந்த மீனவர்களின் கடும் எதிர்ப்பினால் சட்டமுன் வரைவைத் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் திருத்தங்களுடன் கொண்டு வரப்போவதாகவும் அறிவித்துள்ளது, மீனவர்களின் மனங்களின் நீங்காத அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் துயர் என்றுதான் தீருமோ?
கட்டுரையாளர் : எம். சேதுராமலிங்கம்
நன்றி : தினமணி
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment