மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. எனவே மாநிலத்தின் நிலைமையை நேரில் மதிப்பிட்டு அம் மாநில அரசைப் பதவிநீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று மத்திய உள்துறை இணைச் செயலாளர் வி.எஸ். சௌத்ரி தலைமையில் மத்திய அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள உயர் அதிகாரிகளையும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியது.
÷இப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிரும் புதிருமான பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இணைந்து நின்று மத்திய அரசின் இச்செயலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
÷மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்குப் பதிலளிக்கும்போது, மத்திய அரசின் குழு அனுப்பும் முடிவு, மாநில அரசுடன் மோதவேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இதை 356-வது விதி என்ற கண்ணாடி வழியாகப் பார்க்கத் தேவையில்லை என்று கூறியிருப்பது, தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறியவனை தோட்டக்காரன் கண்டுபிடித்தவுடன் புல் பறிக்க மரமேறியதாகப் பசப்பிய கதைதான் நினைவுக்கு வருகிறது.
÷சிறந்த வழக்கறிஞரான சிதம்பரம் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் என்ன கூறுகின்றன என்பதை அறியாமல் இருக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஒன்றாகும். ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுமானால் மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அரசியல் சட்டத்தின் 163, 164, 356-வது பிரிவுகள் மத்திய, மாநில உறவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
÷ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாகப் புகார் செய்யப்படுமானால், மத்திய அரசு உடனடியாக அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மாநில அரசு மறுக்குமானால், அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற 257(1) பிரிவின்படி மாநில அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆணைகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணைகளையும் மாநில அரசு புறக்கணிக்குமானால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும். அதன் பின்னரே 356-வது பிரிவின் கீழ் மாநில அரசைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
÷அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் அரசியல் நிர்ணய சபையில் இப் பிரச்னை குறித்து விரிவான-ஆழமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. 1949-ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு கு றித்து விவாதம் நடைபெற்றபோது, மத்திய சட்ட அமைச்சர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிமுறைகளுக்கு மாறாக அந்த அரசுகள் செயல்படுமானால் மத்திய அரசு தலையிடும் நிலை உருவாகிறது. ஆனால் மாநிலத்தில் நல்ல அரசு செயல்படுகிறதா இல்லையா என்பதை நிர்ணயிப்பது மத்திய அரசின் வேலை அல்ல. இந்த விஷயத்தில் நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். இந்தச் சட்டப்பிரிவு செயல்படாத செத்த பிரிவாகவே இருக்கும். எனினும் இந்தச் சட்டப்பிரிவைச் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலாவதாக அரசியல் சட்டம் வகுத்துத் தந்த வழிப்பிரகாரம் நடக்குமாறு தவறு செய்யும் மாநிலத்துக்கு எச்சரிக்கை விடவேண்டும். அந்த எச்சரிக்கை உரிய பயனை அளிக்காமல் போகுமானால், அந்த மாநில மக்களே தங்கள் விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட இரண்டு பரிகாரங்களும் தோல்வியடையுமானால் மட்டுமே 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்த வேண்டும்.
÷மாநிலங்கள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல்வேறு சட்டப்பிரிவுகள் நமது அரசியல் சட்டத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், நமது அரசியல் அமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகும். அதாவது மத்திய அரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறைகளில் மத்திய அரசுக்கு எவ்வளவு சுயஆதிக்கம் உண்டோ அதைப்போல மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட துறைகளில் மாநிலங்களுக்கு சுயஆதிக்கம் உண்டு. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை என்பது மத்திய,மாநில அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து தருவதாகும்.
இது மத்திய அரசு இயற்றும் சட்டத்தின் மூலம் அல்லது அரசியல் சட்டத்தின் மூலமே வகைசெய்யப்படுகிறது. நமது அரசியலமைப்பின்படி மாநிலங்கள் சட்டம் இயற்றும் அல்லது நிர்வாக அதிகாரங்களுக்கு மத்திய அரசைச் சார்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் சரிசமமான அதிகாரங்கள் படைத்தவை.
÷1951-ம் ஆண்டில் முதல் முதலாக பஞ்சாப் மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது. அதற்குப் பிறகு 100 தடவைகளுக்கு மேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசு இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லா கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு. 1977-ம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 9 மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. 1980-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டபோது 9 மாநிலங்களில் இருந்த ஜனதா கட்சி அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் இந்தப் பதவி நீக்கத்தை ஏற்பதற்கு அது மறுத்துவிட்டது. ஆனால் 1994-ம் ஆண்டில் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர். பொம்மையின் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் 9 பேர்களைக் கொண்ட நீதிபதிகளின் ஆயம் தலையிட்டு உன்னதமான ஒரு தீர்ப்பை வழங்கியது.
÷இந்த ஆயத்தில் ஒருவரான நீதிபதி கே. ராமசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்:
நமது அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை தன்னுடைய அடிப்படை அம்சமாகக் கொண்டிருக்கிறது. அது ஒருபோதும் அழிக்கப்பட முடியாதது.
மற்றொரு நீதிபதியான குல்தீப் சிங் கூறுகையில்: மாநிலங்கள் சுதந்திரமானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான அரசியல் சட்ட ரீதியான நிலையைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசியல், சமுதாயம், கல்வி போன்ற துறைகளில் மத்திய அரசைப் போலவே மாநில அரசுகளுக்கும் முக்கியப் பங்களிப்பு உண்டு. மத்திய ஆட்சியின் ஏஜெண்டுகளாகவோ அல்லது அதைச் சார்ந்து நிற்கவேண்டிய நிலையிலேயோ மாநில ஆட்சிகள் இல்லை.÷ ÷மற்றொரு நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் கூறுகையில்: 356-வது சட்டப்பிரிவு அபூர்வமாகவே பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்ட அமைப்பின்படி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் உறவைச் சீர்குலைக்கும் வகையில் இந்தப் பிரிவை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுமானால், மாநில முதலமைச்சர் தன்னுடைய அரசியல் ரீதியான கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாது. தான் தொடர்ந்து பதவியில் இருக்க முடியுமா முடியாதா என்ற அச்சத்தின் கீழ் அவர் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மாநிலத்தின் நலன்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுவிடும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
÷உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட ஆயம் அளித்த இந்தத் தீர்ப்பு என்பது, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.
1980-களில் மத்திய, மாநில உறவு பற்றி ஆராய பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் தன்னுடைய அறிக்கையில் பின்வருமாறு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது:
மிக மோசமான சூழ்நிலையில் வேறுவழியே இல்லாதபோதும், மற்ற வேறு வகையான முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனபோதும், அந்த மாநிலத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கைத் திருத்தும் நோக்கத்துடன் 356-வது பிரிவு மிகமிக அபூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முன்னால் அந்த மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்கு சகல விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறு செய்யும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடப்படவேண்டும். 356-வது பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன், மாநில அரசு அளிக்கும் விளக்கத்தை மிகக் கவனமுடன் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் மாநில அரசைப் பதவிநீக்கம் செய்வதென்பது சரியானது அல்ல.
உலகத்தின் பல்வேறு கூட்டாட்சி முறை உள்ள நாடுகளின் அரசியல் சட்டத்தில் இத்தகைய சட்டப்பிரிவு என்பது இல்லவே இல்லை. எனவே இச்சட்டப்பிரிவை அடியோடு நீக்குவது பற்றி ஆராயவேண்டிய கட்டம் வந்துவிட்டது.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்த இந்தியாவின் நிலைமை முற்றிலுமாக மாறியிருக்கிறது. அப்போது காங்கிரஸ் கட்சி ஒன்றே வலிமை வாய்ந்த கட்சியாகத் திகழ்ந்தது. 1947-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தியது. சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிப் போராடிய பல தலைவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்தார்கள். எனவே மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிரச்னைகள் எழும்போது அவற்றைக் கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டார்கள்.
ஆனால் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி மத்தியில் ஒரு கட்சியும் மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளும் ஆட்சிப் பொறுப்புகளை ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த நிலைமையிலும் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு மத்தியில் எந்தவொரு கட்சியும் ஆட்சி செய்யமுடியாமல் பல்வேறு மாநிலக் கட்சிகளின் உதவியோடு கூட்டணி ஆட்சியை நடத்தும் நிலை மிகத் தெளிவாக உருவாகிவிட்டது.
இனி எந்தக் காலத்திலும் ஒரு கட்சியின் ஆட்சி என்பது மத்திய அரசில் ஏற்படப் போவதில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதலற்ற போக்கு ஏற்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; இல்லையென்றால் வளர்ச்சி திட்டவட்டமாகப் பாதிக்கப்படும்.
÷நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வளர்ச்சிப் போக்குகள் இருப்பது மோதல்களை அதிகமாக்குவதற்கே வழிவகுக்கும். மாநில உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நடத்தும் போராட்டம் என்பது மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அறைகூவல் விடுவதில் போய் முடியும்.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி முறைகள் நிலவி வரும்போது இந்தியாவிலும் அத்தகைய நிலைமை வந்துவிடக் கூடாது. மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் உண்மையான கூட்டாட்சி மலரும் வகையிலும் நமது அரசியல் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டிய காலகட்டம் பிறந்துவிட்டது. இந்த உண்மையை மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் உணரவேண்டும். இல்லையென்றால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment