பொது மக்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் ஒன்று சட்டத்தின் தவறான விதிமுறைகளால் இருக்கலாம் அல்லது அரசு நிர்வாகத்தில் நிலவும் காலதாமதம், அலட்சியப் போக்கு, ஊழல் போன்றவற்றால் மக்கள் அவதியுறலாம்.
சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்கு இருக்கிறது. நிர்வாகத்தின் சீர்கேடுகளால் நடைபெறும் அநீதிகளைக் களையவும், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களைக் கண்காணித்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.
அன்றாட வாழ்வில் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்ற முறையில் உள்ள வாய்ப்பு
களில் மிக முக்கியமானது கேள்வி நேரம்.
கேள்வி நேரம் என்பது இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் 18-ம் நூற்றாண்டில் தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரு அவைகளிலும் நேரிடை பதிலுக்காக தலா இருபது கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட துறையின் அமைச்சர் நேரிடையாக அவையில் பதிலளிப்பதற்காக நட்சத்திரக் குறியிடப்பட்ட இருபது கேள்விகள் குலுக்கல் முறையில் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவையின் விதிமுறைப்படி ஓர் உறுப்பினருக்கு ஒரு நட்சத்திரக் குறியிட்ட கேள்விக்கு மேல் ஒரு நாளைக்குத் தரப்படுவதில்லை.
ஒரே கேள்வியைக் கேட்பவர்கள் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் குலுக்கல் முறையில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவையில் நேரிடையாகப் பதிலளிக்கப்படாமல் இரு அவைகளிலும் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் இருநூறு கேள்விகளுக்கு எழுத்து மூலமாகப் பதில் தரப்பட்டு அவையின் முன் வைக்கப்படும். இந்த முறையால், இரு அவைகளிலும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 440 கேள்வி-பதில்கள் மூலம் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடைக்கிறது.
545 உறுப்பினர்களையுடைய மக்களவையின் கேள்வி நேரத்தில், இருபது கேள்விகளுக்கு மட்டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால் அத்தகைய வாய்ப்பு மிக அரியதாகத்தான் ஓர் உறுப்பினருக்கு அமையும். திங்கள் முதல் வெள்ளி வரை, வாரத்தில் அமைச்சரகத் துறைகள் அனைத்தும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. உறுப்பினர் எழுப்பும் கேள்வி அந்த பிரச்னைக்குரிய அமைச்சரைக் குறிப்பிட்டு நேரிடையாக அனுப்பப்படுகிறது. கேள்விக்குரிய நாளுக்கு ஐந்து நாள் முன்னதாகவும், 21 நாள்களுக்குள்ளாகவும் உறுப்பினர் தமது கேள்வியை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளின் விவரம் அச்சிடப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐந்தாறு நாள்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டுவிடும். ஆக, தன்னுடைய கேள்வி வரும் நாளன்று குறிப்பிட்ட உறுப்பினர் அந்தக் கேள்விக்குரிய பிரச்னைகளைத் துணைக் கேள்விகள் மூலம் கேட்பதற்கான விவரங்களைச் சேகரித்து வைத்து, குறிப்பிட்ட அமைச்சரின் துறை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கடந்த காலத்தில் இருபது கேள்விகளில் நான்கு அல்லது ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே பதில் பெறப்பட்டு அதற்குள் கேள்வி நேரம் முடிந்துவிடும்.
இங்கிலாந்து மக்களவையில் கேள்வி-பதில்கள் மிக விரைவாகவும், சுருக்கமாகவும் இருக்கும். உதாரணமாக, 30-11-2009 திங்கள்கிழமை ஒரு மணி நேரத்தில் 19 கேள்விகளுக்குப் பதில்கள் தரப்பட்டன.
அதே 30-11-2009 திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய மக்களவைக் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் கேட்கப்படவிருந்த இருபது கேள்விகளுக்குத் தொடர்புடைய 38 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே வருகை தந்து தம்முடைய கேள்விகளைக் கேட்டனர். மீதமிருந்த கேள்விகளுக்கு உரிய 34 உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் அவையில் இல்லாத காரணத்தால் அரை மணி நேரத்தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மக்களவைக் கூட்டங்களில் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் பெரும்பாலான கேள்விகள் பதில் தரப்படாமல் விடப்பட்டிருக்குமே தவிர, 26 நிமிடத்துக்குள் கேள்வி நேரம் முற்றுப் பெற்றது கிடையாது. ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் கேள்வி கேட்ட உறுப்பினர்கள் அவையில் இல்லாததால், அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு வேதனையான சாதனை ஆகும்.
கேள்விகள் கேட்டுவிட்டுக் குறிப்பிட்ட தருணத்தில் அவையில் இல்லாத 34 பேர்களில் கட்சிவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் (12), பா.ஜ.க. (7), ஜே.டி.யு. (3), சிவசேனா (3), சி.பி.எம். (2), சி.பி.ஐ. (2) மற்றும் ஓர் உறுப்பினர் மட்டும் வராத கட்சிகள் சமாஜ்வாதி, கே.சி.எம்., ஏ.எம்.எம்.ஐ., பிஜு ஜனதாதள், சுயேச்சை ஆகியோர் அடங்கும். ஆக, ஆளுங்கட்சியினர் கேள்வி நேரத்தில் அலட்சியமாக இருப்பதைவிட, கேள்வி கேட்ட எதிர்க்கட்சியினர் பலர் மக்களுக்குப் பணியாற்றத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியது கண்டனத்துக்குரியதாகும்.
மக்களவையில் இப்படி என்றால், மாநிலங்களவையிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. 2-12-2009 அன்று மாநிலங்களவையில் கேள்வி கேட்ட 5 உறுப்பினர்கள் வரவில்லை. மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்பினர்கள் அவையில் இல்லாத காரணத்தால் அந்தக் கேள்விகளுக்கு நேரிடையான பதில்கள் அவையில் தரப்படவில்லை.
சென்ற 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் 89,000 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் 56 உறுப்பினர்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கவில்லை என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் தேவ கவுடா, மம்தா பானர்ஜி, அஜீத் சிங், உமர் அப்துல்லா, கல்யாண் சிங், ஜெகதீஷ் டைட்லர், தர்மேந்திரா, கோவிந்தா போன்ற கட்சித் தலைவர்கள் பலரும், திரையுலகப் பிரமுகர்களும் ஒரு கேள்விகூட கேட்டதில்லை. மேலும், 67 உறுப்பினர்கள் அந்த ஐந்தாண்டு காலத்தில் பத்துக் கேள்விகள் அல்லது அதற்கும் குறைவாகக் கேட்டிருக்கிறார்கள். மொத்த உறுப்பினர்களில் 23 சதவிகிதம் பேர் கேள்வி கேட்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர்.
சென்ற மக்களவையில் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் ஆனந்தராவ் வித்தோபா அட்சுல் 1,255 கேள்விகளையும், சிவாஜி அதல்ராவ் பாட்டில் 1,251 கேள்விகளையும் கேட்டு முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருந்தனர். இதை வைத்து, அகில இந்திய அரசியலில் சிவசேனா உறுப்பினர்களுக்கு இருந்த அக்கறை மற்ற கட்சியினருக்கு இல்லாது போயிற்று என்று கூற முடியுமா?
30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்பினர்கள் பற்றி அந்தந்தக் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதப்போவதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார். அவையின் நடவடிக்கைகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு ரூ.26,000 அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. அன்று கேள்வி கேட்டு வராத உறுப்பினர்களால் அவையின் நடவடிக்கை அரை மணி நேரம் ஒத்திப்போடப்பட்டு வீணான செலவு ரூ. 7.8 லட்சம் ஆகும். இது அரசாங்கப்பணம் என்றாலும் மக்களின் வரிப்பணம்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் விளைவாகத்தான் ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தவறான முறையில் நிதியுதவி அளிக்கப்பட்டதென்று உறுப்பினர் பெரோஸ் காந்தி (இந்திரா காந்தியின் கணவர்) 1958-ல் மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்ததன் பேரில், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின்படி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்கு முந்த்ரா உதவியிருப்பதாகவும், அதன்பேரில், அவருடைய பங்குகளை மிக அதிகமான விலைக்கு வாங்க நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி உத்தரவின்படி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முன்வந்ததும் தெரியவந்தது. இது, அரசாங்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஊழல் விவகாரம் என்று சாக்லா குழு தீர்மானித்தது. அதன் பிறகு, நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியிலிருந்து வெளியேறினார்.
1973 ஆகஸ்டு 15-ல் கல்வியமைச்சர் நூருல் ஹாசன் முயற்சியால் சுதந்திர இந்தியாவின் முதல் 25 ஆண்டுகள் பற்றிய ஒரு வரலாற்றைத் தொகுத்து காலப்பெட்டகத்தில் வைத்து தில்லி செங்கோட்டை அருகில் ஆழப் புதைத்தார்கள். விஞ்ஞான முறையால் அப்பெட்டகத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வருபவர்களால் தாம் திறந்து பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. ஆயினும், பெட்டகத்தில் வைக்கப்பட்ட வரலாற்றில் பல தவறான, தாறுமாறான விவரங்கள் இருப்பதாக ஒரு கேள்வி 1973 நவம்பரில் மக்களவையில் வந்தது. அதற்கு, பெட்டகத்திலுள்ள வரலாறு மிகவும் ரகசியமானது, அது ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் பதிலளித்தார்.
ஆயினும், 1977 மார்ச்சில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்ததும், அந்தக் காலப்பெட்டகம் தோண்டியெடுக்கப்பட்டு, அதிலிருந்த வரலாற்றுக் குறிப்புகள் தவறானவை என்று நிரூபணமானது. இதில் எனக்கும் பங்கு உண்டு.
சிறுபொறி, பெரும் தீயாக மாறக்கூடும். அதைப்போல், ஒரு சிறிய கேள்வி பெரிய வரலாற்றுத் திருப்பத்தை உண்டாக்கக்கூடும். ஆக, கேள்வி நேரத்தை எந்த வகையிலும் ஒதுக்கி வைப்பது அல்லது அலட்சியம் செய்வது, நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி
Saturday, December 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இன்னாபா பேசற நீ ... ஒண்ணுமே பிரில ... கோட்டர், பிரியாணி குடுத்தா ஓட்டு போடுவேன் ... அம்புடுதேன்.
அஹோரி வருகைக்கு நன்றி
Post a Comment