கடலைவிடப் பெரிது "கருணை' மனம் என்பர். இந்த அவசர உலகில் சுயநலம், லாப நோக்கு, நமக்கென்ன வந்தது என்ற ஒருமுகச் சிந்தனை... போன்றவை நாலாபக்கமும் பரவிக் கிடப்பதை நாம் கவலையுடன் உற்றுநோக்க வேண்டியுள்ளது.
நவநாகரிகச் சிந்தனையில் சிக்கியுள்ள இன்றைய மனிதர்கள் பலர், தங்கள் கண்முன் நடக்கும் எந்தச் சம்பவங்களையும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. "நமக்கேன் வம்பு' என்ற மனப்பான்மையில் அவரவர் வேலையைப் பார்த்துவிட்டுச் செல்லும் வழக்கம் இன்றைய சூழலில் அதிகரித்து வருகிறது.
தள்ளாத வயதிலும், முக்கியப் பணி நிமித்தமாக அவசரமாகப் பஸ்ஸில் ஏறும் வயோதிகர்கள்கூட சிறப்புக் கட்டண பஸ்ஸô, எல்.எஸ்.எஸ். பஸ்ஸô, சாதாரண பஸ்ஸô என பார்த்துத்தான் ஏறவேண்டும் என்று நடத்துநர்கள், ஓட்டுநர்கள் நினைக்கின்றனர்.
அப்படியே ஒருவர் அவசரத்தில் பஸ்ஸில் ஏறிவிட்டால் அந்தப் பயணிக்கு ஒருசில நடத்துநர்களால் கொடுக்கப்படும் "அர்ச்சனை' சொல்லில் அடங்காது. அந்தப் பயணியைக் குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுவதற்குப் பதிலாக வேறொரு நிறுத்தத்தில் வேண்டுமென்றே இறக்கிவிடும் செயல்களையும் நாம் பார்க்க முடிகிறது.
ஒரு பயணிக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என நினைத்துத் திரைப்படங்களில் வேண்டுமானால் "ஹீரோ' தட்டிக்கேட்பதை ஆவலோடு நாம் எதிர்பார்ப்போம்; ஏற்றுக்கொள்வோம். ஆனால், இதுபோன்ற உண்மைக் காட்சியை பஸ்ஸில் நேரடியாகப் பார்க்கும் பயணிகளில் ஒருவருக்குக்கூடத் தட்டிக்கேட்கும் மனப்பான்மை இல்லாமல் வாய்மூடி மெüனிகளாகிவிடுகின்றனர்.
பயணிகளிடம் அன்பும், பரிவும் காட்டுவேன் என அவர்கள் (ஓட்டுநர், நடத்துநர்) பணியில் சேர்ந்தபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழி எங்கே போனது?
"வருமானம் ஈட்டிவந்த குடும்பத் தலைவர் திடீரென மரணமடைய நேரிடுகிறது. 3 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு 35 வயதே ஆன அவரது மனைவி, அரசின் சமூகநலப் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித் தொகைக்காக விண்ணப்பித்து காத்துக்கிடக்கிறார்.
அவருக்குச் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருகிறது. உங்களுக்கான உதவித்தொகை ரூ.10,000}க்கான காசோலை தயாராக உள்ளது. ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் காசோலையைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு ஊழியர் ஒருவர் அந்த பெண்ணிடம் "பேரம்' பேசுகிறார். அந்தப் பெண்மணி லஞ்ச ஒழிப்பு போலீஸôரைநாடி தனது உரிமையைப் (உதவித்தொகையை) பெற்றுக்கொண்டார்' என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தில், வாழவேண்டிய வயதில் கணவனை இழந்து, 3 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சமுதாயத்தில் போராட வேண்டிய பெண்ணுக்கு, ஆறுதலாக அரசு அளிக்கும் உதவித்தொகைக்குகூட ஈவுஇரக்கமே இல்லாமல் லஞ்சம் கேட்கும் அதிகாரியின் மனப்போக்கை நாம் என்னவென்று சொல்வது!
கணவனை இழந்து மனம் நொந்து தவிக்கும் இதுபோன்ற ஒரு பெண்ணிடம் இதயமே இல்லாமல் கொள்ளையடிக்கும் இதுபோன்ற ஒருசில அதிகாரிகளின் "ஈரமில்லா' எண்ணங்களை எப்படி, யாரால் மாற்றுவது?
அண்மையில் மதுரையில் நடந்த சம்பவம் இது } ஒரு இளம் போலீஸ்காரர் மனைவி ஒருவர் தீயிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்றபோது அந்த போலீஸ்காரரும் தீக்காயமடைந்தார்.
இருவருமே ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 30 சதவிகிதமே தீக்காயமடைந்த அந்தப் பெண், சுமார் 50 தினங்கள் வரை அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து உயிரிழந்தார். இதில், மனதைப் பதறவைக்கும் விஷயம் என்னவென்றால், மருந்து, மாத்திரை, சிகிச்சைக்கான கட்டணங்கள் முழுவதையும் வசூல் செய்த பின்னரே அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாக உற வினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மனிதநேயமற்ற இதுபோன்ற செயல் இப்பூவுலகில் வேறெங்கும் நடக்குமா என்பதை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
மரணப் படுக்கையில் உள்ள மனித உயிர்களுக்கு விலை வைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உலையும் வைத்து பணம் சம்பாத்தியமே ஒரே குறிக்கோள் என்ற நோக்கத்தில் பயணிக்கும் ஒருசில மருத்துவமனைகளின் போக்கால் ஏற்படும் விபரீதத்தை நாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
பார்ப்பதற்கே அருவெறுப்பான தோற்றத்துடன், ஈ மொய்க்கும் நிலையில் இருந்த தொழுநோயாளிகளையும் தனது கருணைக் கண்ணால் உற்றுநோக்கி, அவர்களிடத்தில் மனதை மட்டும் பார்த்துப் பேசி, அரவணைத்து, தாய்மை போற்றிய அன்னை தெரஸô வாழ்ந்ததும் இப்பூவுலகில்தானே.
கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் மருத்துவ உலகமே இப்படித் திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ள இந்த பேராபத்து எங்கு போய் முடியும்?
துளியும் கருணையில்லாத கல் நெஞ்சக்காரர்களின் இது போன்ற தவறுகள், சமுதாயத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை.
எனவே, இதுபோன்ற மனிதர்களின் தவறுகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், பணபலம், அதிகாரபலம் உள்ளிட்டவற்றால் அவர்கள் காப்பற்றப்பட்டுவிடுவது சமுதாயத்தின் சாபக்கேடே.
இதனால், கோபம் கொள்ளும் சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்கள் கிளர்ந்தெழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற கிளர்ச்சிகளை ஆரம்பத்திலேயே தடுக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். இல்லையென்றால் வழக்கம்போல் "தும்பை விட்டு வாலைப் பிடித்த' கதையாகிவிடும்.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்வரன்
நன்றி : தினமணி
Saturday, December 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment