உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ. 26,352; பேராசிரியர்களுக்கு ரூ. 62,085 மாத ஊதியமாகக் கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் கெüரவமான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தில் கல்வியாளர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை, அந்தச் சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ. 557.49 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏற்கெனவே, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 30 சத ஊதிய உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழக அரசு மட்டுமல்ல; மத்திய அரசும் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுமே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது என்பது நியாயமானது மட்டுமல்ல; அரசின் கடமையும்கூட.
அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தவிர்த்து, நாட்டின் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தி ஏன் உவப்பானதாக இல்லை என்பதை அரசு யோசிக்க வேண்டும். ஏனெனில், இதுவும் அரசின் கடமைதான்.
நம் நாட்டின் ஆகப் பெரும்பான்மையினர் - அதாவது, 93 சதவீதத்தினர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில் இவர்களுடைய பணிப் பாதுகாப்புக்கு, பணி நலனுக்கு அரசு செய்தது என்ன என்று கேட்டால், சட்டப் புத்தகங்களிலுள்ள விதிகளைத் தவிர்த்து அரசால் உருப்படியான பதில்களைத் தர முடியாது.
தேசத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் கூலிப் பிரச்னையில் அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்தபட்சக் கூலியை ரூ. 150-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு என்ன செய்கிறது? இப்போதுதான் ரூ. 100-ஆக நிர்ணயிப்பது தொடர்பாகவே யோசிக்கத் தொடங்கியுள்ளது.
சரி, நெசவாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைவிட இப்போது இன்னும் மோசம். ஒரு நெசவாளி - குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நாள் முழுவதும் உழைத்தால்கூட மாதம் ரூ. 5,000 ஈட்டுவது கடினம். நெசவாளிகளுக்கு உதவும் "சிகிடா'க்கள் ரூ. 2,000 ஈட்டினால், அது அதிர்ஷ்டம்.
இவர், அவர் என்றில்லாமல் நாட்டின் பெரும்பான்மைத் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை இதுதான். இவர்களுடைய நலன்களில் அரசு எடுத்துக்கொள்ளும் அக்கறை என்ன?
முன்னெப்போதுடனும் ஒப்பிட முடியாத இப்போதைய மோசமான சூழலையே எடுத்துக்கொள்வோம். விலைவாசி கடுமையான உச்சத்திலிருக்கும் இன்றைய சூழலில்தான் இந்திய முதலாளிகள், உலகப் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு என்று "தீபாவளி' கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனில் அரசு காட்டும் அக்கறை என்ன?
ஆக, அரசு என்ன நினைக்கிறது என்றால், அதிகாரத்தைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளும் சக பங்காளிகளின் நலன் மட்டுமே தன்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறது. எஞ்சியோருக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 80 கூலி, 100 நாள் வேலை போதும் என்று நினைக்கிறது.
இந்தப் போக்கு அநீதியானது மட்டுமல்ல; ஆபத்தானதுமாகும். அரசின் மனோபாவம் இந்தியாவில் அரசு ஊழியர்களை மட்டும் சகல கடவுளர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாற்றி வருகிறது.
சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக் கூடிய ஒரு புதிய இனமாக அரசு ஊழியர்களை மாற்றி வருகிறது.
இந்த உண்மையை எல்லோரையும்விட சாமர்த்தியசாலிகள் - குறிப்பாக - அரசு ஊழியர்கள் சீக்கிரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பாருங்கள். ஓர் அரசு ஊழியர் அவர் ஆணோ, பெண்ணோ திருமண வயதில் இருந்தால், அவர் தேடும் இணையை அரசு ஊழியராகவே தேடுகிறார். அரசுப் பணியில் இருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தேடும் வரன்களும் அரசு ஊழியர்கள்தான்.
இப்படியாக ஓர் இனம் உருவாகிறது; சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக்கூடிய ஒரு புதிய இனம். சமூகத்தின் ஏனைய தரப்பினர், அரசையும் அது உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய இனத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?
கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி
Wednesday, September 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கரீட் அண்ணாத்த.
வேலைக்கு ஆகாத ஜென்மங்கள் நிறைய " அரசு ஊழியர்கள் " ன்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க. அதுங்க காதுல ஏறினா சரி.
அது மட்டுமா ? பென்ஷன் , விடுமுறை , மூடு அவுட் ஆனா உண்ணாவிரதம் ன்னு ... ரொம்ப என்ஜாய் பண்றாங்க.
30% சம்பளத்த வரியா குடுத்துட்டு மத்தவன் எல்லாம் மோட்டு வளைய பாத்துகிட்டு இருக்கான்.
ஒரே காண்டா கீது.
அஹோரி வருகைக்கு நன்றி
நாங்க யாரு? டாஸ்மாக் சரக்கின் விலையை 50% ஏத்திட்டு, அடித்தள மக்களின் வாங்கும் திறனை உயர்த்திவிட்டோம்னு அறிக்கை விட்டுருவோம்ல?
Post a Comment