கார்லைல் என்ற பேராசிரியர், ""மக்களை இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்'' என்று குறிப்பிடுகிறார். அந்த வகையில், இந்தியத் திருநாட்டிற்கு ஏற்ற தேசிய இலக்கியம் திருக்குறள்தான்.
""இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும் விரும்புகிறது. விரும்பி வலியுறுத்துகிறது. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக்கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்கள் அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும், திருக்குறள் நெறி வாழ்க்கையிலும் ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும்'' என்பார் திருக்குறளுக்கு இயக்கம் கண்ட குன்றக்குடி அடிகளார்.
தவஞானி ஸ்ரீஅரவிந்தர், தமிழ் கற்றதோடு, திருக்குறளின் முதல் இரு அதிகாரங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் "இந்தியாவின் ஆன்மா' என்ற நூலில் திருக்குறட் பெருமையை, இந்திய இலக்கியங்களோடு இனிது ஒப்பிட்டுப் பின்வருமாறு விளக்குகிறார்.
""பிரதேச மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும் இசைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், காதல்-வீரப்பாடல்கள் முதலியவைகளே. ஆனால் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிர ஞானியான ராமதாசரின் சமய ஒழுக்கப்பாடல்களையும், அரசியல் கருத்தமைந்த பாடல்களையும் திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளையும் குறிப்பிடலாம். அதன் கட்டுக்கோப்பிலும், எண்ணத்தின் திண்மையிலும் சொல்லாட்சித் திறனிலும் திருக்குறள் குறுவடிவில் பொதுவான உண்மைகளை வெளியிடும் கவிதை வகையில் தலைசிறந்து விளங்குகின்றது'' என்கிறார்.
"திருக்குறளின் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதி, தமிழச்சாதி அமரத்தன்மை உடையது' என்று பாடிய பாரதியாரின் உள்ளக்கிடக்கையோடு ஒத்துப்போகிறது அரவிந்தர்தம் திருக்குறள் பற்றிய கருத்தோட்டம். இந்தியச் சிந்தனையாளர்களோடு, ஏனைய தமிழ் ஞானிகளையும் முன்னிறுத்தித் திருவள்ளுவரைப் போற்றுகிறார் அரவிந்தர்.
இந்தியர் மட்டுமன்றி, உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றி, ஏற்றுக் கொண்ட பெருமை திருக்குறளுக்கு உண்டு.
ஐரோப்பியத் தமிழறிஞரான பெஸ்கி பாதிரியார், 1730-இல் முப்பாலான திருக்குறள் முதலிரு பால்களையும், லத்தீனில் மொழிபெயர்த்தார்.
தலைசிறந்த பிரெஞ்சுமேதை எம்.ஏரியல், 1848-இல் திருக்குறளின் சில பகுதிகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார். அவருக்கு முன்பே, 1730-இல் பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நினைவுகூரும் அவர், திருக்குறள் ஃபிரான்சு தேசத்தின் தேசிய நூலகத்தில் இருப்பதையும்
சுட்டுகிறார்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கிராஸ் என்பாருக்குத் திருக்குறளின் ஆங்கில நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. திருக்குறளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மூலத்தில் படிப்பதற்காகவே தமிழ் கற்றார். பின்னர், 1854-இல் ஜெர்மனியிலும், 1856-இல் லத்தீனிலும் மொழிபெயர்த்தார். எனினும், அதனால் திருப்தியுறாத அவர், ""எந்த மொழிபெயர்ப்பும் மனங்கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணரமுடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு கொண்ட தங்க ஆப்பிள் கனி'' என்று அறிவித்தார்.
தமிழ்மாணவன் என்று தம்மை அழைத்துக்கொண்ட ஜி.யு.போப், 1886-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவர், திருக்குறளை முன்வைத்து மொழிந்த வாசகங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. ""குறளுக்குப் புகழ் சேர்க்கும் மிக முக்கிய அம்சம், அதன் இணையற்ற கவிதை வடிவம். அந்தத் தலைசிறந்த தமிழ்ச் சொல்லோவியரின் கூற்றுக்கு இந்த வடிவம் செறிவினைக் கொடுத்திருக்கிறது'' என்று திருவள்ளுவருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கிறார்.
இவ்வாறு, திருக்குறளை உணர்ந்து ஓதிய பெருமக்கள் தத்தம் மொழிகளில், அதனை மொழியாக்கம் செய்து மேன்மை பெற்றிருக்கிறார்கள். இதுவரையில் நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரிபோலி' உள்ளிட்ட 34 மொழிகளில், திருக்குறளுக்கென்று 130 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. லத்தீன், ஜெர்மன், ஃபிரெஞ்ச், டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம் ஆகிய அயல்நாட்டு மொழிகளிலும், வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இத்தகு மேன்மை கொண்ட திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாகட்டும். திருவள்ளுவ நெறியில் மனிதகுலம் உயரட்டும்.
கட்டுரையாளர் : கிருங்கை சேதுபதி
நன்றி : தினமணி
2 comments:
இது நடக்க வேண்டும் என்பதே உலகத் தமிழரின் ஒட்டுமொத்த அவா!
நல்ல பதிவு. பாராட்டு.
சுப.நற்குணன் வருகைக்கு நன்றி
Post a Comment