Wednesday, July 29, 2009

அதிக லாபத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆசைப்படுகிறது : அனில் அம்பானி குற்றச்சாட்டு

கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயுவை பிரித்துக்கொள்வது சம்பந்தமாக, இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ( ஆர் ஐ எல் ) மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ( ஆர் என் ஆர் எல் ) ஆகியவைகளுக்கிடையே நடந்து வந்த மோதல் நேற்று பெரிதாக வெடித்துள்ளது. ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தபோது, அதில் பேசிய அதன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அதிக லாபத்திற்கு ஆசைப்படுகிறது என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தேவையில்லாமல் எங்கள் இருவருக்குமிடையே நடந்து வரும் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறது என்றும் பேசினார். இது பெரும் புயலை கிளப்பி உள்ளது. அனில் அம்பானியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஆலோசகர் ஹரிஷ் சால்வே, எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு இது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் பேசவே விரும்புகிறோம்; மீடியாவில் அல்ல என்றும் சொல்லி விட்டார். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முளரி தியோராவும், இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் எங்களால் பதில் ஏதுவும் தெரிவிக்க இயலாது என்று சொல்லி விட்டார். திருபாய் அம்பானி நிறுவனம் 2005 ல் இரண்டாக பிரிந்தபோது செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதை போல, கே - ஜி பேசில் கிடைக்கும் எரிவாயுவை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் எங்களுக்கு தர வேண்டும் என்று ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் கோருகிறது. ஆனால் மத்திய அரசோ, மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும் 4.2 டாலர் விலையில் தான் இதையும் கொடுக்க வேண்டும் என்கிறது. இது குறித்து ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2.34 டாலர் விலையிலேயே 17 வருடங்களுக்கு ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. அங்கு விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கடியில் கிடைக்கும் எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தமானது. எனவே அதற்கு இரு தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: