கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் யானைகள் விபத்தில் இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அந்த வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ரயிலின் வேகத்தைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முன்வந்திருக்கிறது.
யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் சாகின்றன என்பது உண்மையே என்றாலும், நியாயமாகப் பார்த்தால் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது வனத்துறைதான்.
இந்த ரயில் வழித்தடம் புதியதல்ல. இந்த ரயில்தடத்தின் ஒரு சிறுபகுதி, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்ளும் அதையொட்டியும் செல்கிறது என்பதும் புதிதல்ல. கடந்த 30 ஆண்டுகளில் இந்த ரயில் வழித்தடத்தில் 13 யானைகள் இறந்துள்ளன. இவற்றில், 2008 பிப்ரவரி முதல் 2009 ஜூலை வரையிலான 18 மாதங்களில் இந்த ரயில் வழித்தடத்தில் 4 விபத்துகளில் 8 யானைகள் இறந்துள்ளன என்பதை எண்ணிப்பார்த்தால், இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நிவாரண நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது வனத்துறைதான் என்பது புரியும்.
ஏன் இப்போது மட்டும் ரயிலில் யானைகள் விபத்தில் சிக்கி இறப்பது அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை நுட்பமாகப் பார்த்தால் கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததும், தான் செய்திருக்கவேண்டிய கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதும்தான் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியவரும்.
பன்னெடுங்காலமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் மைசூர் தொடங்கி ஏற்காடு வரை வந்து திரும்பும் யானைப் பாதை உள்ளது என்பது வனத்துறைக்குத் தெரியாதது அல்ல. ஆனால், யானைப் பாதை குறுக்கிடும் என்று தெரிந்திருந்தும், தேயிலை, காப்பித் தோட்டங்கள் விரிவாக்கம் மற்றும் பல்வேறு தொழில்களுக்காக குத்தகைக்கு அனுமதி அளித்தது வனத்துறைதான். இதற்கு அரசியல் தலைவர்களின் நிர்பந்தம் மற்றும் பெருந்தொகை கையூட்டு என எது காரணமாக இருந்தாலும், வனத்துறைதான் இப்போது பொறுப்பேற்க வேண்டும்.
இத்தகைய அனுமதியில், யானைப் பாதைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று ஒரு ஷரத்து வெறும் பெயரளவுக்கு இருந்தாலும், முதலீடு செய்தவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. வழிகளை ஆக்கிரமித்து அடைத்துவிட்டார்கள். இதனால்தான் யானைகள் புதிய வழிதேடி (வழிதவறிய யானைகள் என்று சொல்வது யானையை சிறுமைப்படுத்துவதாக அமையும்) அலைகின்றன.
யானைகள் ரயிலை மட்டுமே தேடி வரவில்லை. அண்மைக்காலமாக, அரூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஜவ்வாது மலை, ஒசூர், தேன்கனிக்கோட்டை என எல்லா இடங்களிலும் கூட்டமாக வருகின்றன. பயிர்களைச் சேதம் செய்வதும் நடைபெறுகிறது. சில நேரங்களில் யானைகளால் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். சில நேரங்களில் மனிதர்களால் யானைகள் சாகின்றன.
யானைகள் மீது வனத்துறைக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், யானைப் பாதையை தடைகள் இல்லாதபடி செய்வதும், அந்தப் பாதையில் யானைக்குத் தேவையான உணவுப் பயிர்களை மானியம் கொடுத்து விளைவிக்கச் செய்வதும், யானைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க உறுதி செய்வதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதற்கு கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்.
ரயில்களின் வேகத்தைக் குறைப்பதும், இந்த வழித்தடத்தில் உணவுப் பொட்டலங்களை வீச வேண்டாம் என்று பயணிகளுக்குப் போதிப்பதும், ரயில்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் சரியான தீர்வுகள் அல்ல. ரயில் தடத்தைவிட்டு பஸ் தடத்துக்கு யானைகள் வந்தால் அப்போது என்ன செய்வார்களோ? ரயில் பாதைக்கு அருகே சில இடங்களில் மின்வேலி அமைக்கும் யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வேலியிலும் யானைகள் சிக்கி இறக்கின்றன என்பதை அறிந்தால், இதையெல்லாம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.
வனப்பகுதியில் எல்லா நீர்ஆதாரங்களும் எஸ்டேட்களின் தேவைக்காகத் திசை திருப்பப்படுகின்றன. தவறான நடைமுறைகளால், காட்டாறுகள் திசைமாறி மண்அரிப்பை ஏற்படுத்தி, மழைநீர் வீணாகி வருகிறது. முன்பு அதிமுக ஆட்சியில் காட்டு விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் காட்டுக்குள் பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டினார்கள். தலைமையைத் திருப்திசெய்ய "ஜே' ஆங்கில எழுத்துவடிவத்திலேயே தொட்டிகள் அமைக்கப்பட்டன.
விலங்குகளுக்குத் தேவையான உணவும் நீரும் காட்டுக்குள்ளேயே கிடைக்குமானால் அவை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைக் கொஞ்சம்கூட விரும்பாது.
யானைகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டு, அவை "வழிதவறி' வருவதாகவும், பயிர்களை அழிப்பதாகவும், ரயில் விபத்துகளில் சிக்கி அவை இறப்பதாகவும் குறைசொல்வது மனிதர்களால் மட்டுமே இயலும்.
மனிதா, வாழு, வாழவிடு! - குறைந்தபட்சம் விலங்குகளையாவது!
நன்றி : தினமணி
Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிகவும் அர்த்தமுள்ள பதிவு.
பதிவர் லதானந்த் கருத்து என்ன எனத்தெரிய ஆவல்!
ச.செந்தில்வேலன் வருகைக்கு நன்றி
Post a Comment