Saturday, July 11, 2009

திருப்பூர் பனியன் விற்பனை பாதிப்பு; உற்பத்தியும் 25 சதவீதம் குறைந்தது

கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பனியன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளது.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்நாட்டு விற்பனைக்கான பனியன் மற்றும் பலவிதமான உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, டில்லி, மும்பை, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
கோல்கட்டாவில் உற்பத்தி செய்யப்படும் பனியன், சில மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. லூதியானா, டில்லி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன், அப்பகுதியில் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பூர் பகுதியில் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, உள்நாட்டு விற்பனைக்கான பனியன் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, பல மாநிலங்களில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பனியன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள், பிளாட்பாரங்கள் மற்றும் சந்தைகளில்தான் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர்.
மழை காரணமாக, சில்லறை வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட பனியன்கள் மற்றும் உள்ளாடைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல், லாரி கிடங்குகளிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தேக்கமடைந்துள்ளன.
பனியன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் உற்பத்தி செய்யப்படுவதால், மழை காரணமாக, நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் துவங்குவதால், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள மக்கள் புதிய ஆடைகளை வாங்கி அணிவதை தவிர்க்கின்றனர். இதன் எதிரொலியாகவும் பனியன் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்