Tuesday, March 31, 2009

மே 1-ந் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் ஓய்வூதிய திட்டம் அறிமுகம்

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறையினரும் பயன் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்று இவ்வாண்டு மே 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த ஒரு சில நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இனிமேல், பல சரக்கு கடை நடத்துபவர்கள், பிளம்பர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் முதல் அனைத்து குடிமக்களும் ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற விரும்பும் பொதுமக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும்.
சென்ற ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதன்படி, இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டீ.ஏ) இவ்வாண்டு ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக, ஓய்வூதிய கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேர்தல் கமிஷனின் அனுமதியை கோரியது. இதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, இத்திட்டம் மே 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்திற்காக திரட்டப்படும் நிதி, அரசு கடன்பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடுகளை நிர்வகிப்பதற்காக, கட்டுப்பாட்டு அமைப்பு புதிதாக ஆறு நிறுவனங்களை நியமித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: