Tuesday, March 31, 2009

பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு மேலும் சம்பள உயர்வு : மத்திய அரசு ஒப்புதல்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்பட, பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு, கடந்த வரும் அறிவித்த சம்பள உயர்வை விட மேலும் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆறாவது சம்பள கமிஷன் பரித்துரையின்படி கடந்த வருடம் அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த சம்பள உயர்வு போதாது என்றும் இன்னும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரசு அறிவித்திருக்கும் அகவிலைப்படியான, அடிப்படை சம்பளத்தில் 68.8 சதவீதம் என்றிருப்பதை 78.2 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்த கோரிக்கையை இப்போது ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அதன்படி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வை 2007 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம், ஆட்சேபனை ஏதும் இல்லை என்ற உத்தரவை பெற்றிருக்கிறது. இருந்தாலும் பொதுத்துறை அதிகாரிகள் கேட்டபடி, ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை சம்பளத்தை மாற்றி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எங்களது ஒரு கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த சம்பள உயர்வினால் எங்களுக்கு வெறும் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சம்பளம் உயரும். எனவே இன்னும் அதிகமான சம்பள உயர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
நன்றி :தினமலர்


No comments: