மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க முடிவு செய்துள்ளது. அதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. தொலைபேசி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் 'டிராய்' அமைப்பு, மொபைல் நிறுவனங்களின், மொபைல் இணைப்பு சேவை தொடர்பாக, சில கட்டணங்களை விதித்துள்ளது. இந்த கட்டணங்களை இப்போது குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி உள்ளது. பி.எஸ்.என்.எல்., மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்கு போகிறது என்றால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் 13 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும். இதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'டிராய்' தன் முடிவை இப்போது பரிந்துரை அறிக்கையாக அரசுக்கு அனுப்பினாலும், இறுதி முடிவு, மார்ச் மாதம் எடுக்க உள்ளது.
அப்போது தான் இது தொடர்பாக முழு விவரம் தெரியும். இந்தியாவில் மொபைல் போன் சேவை, சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப முறைகளில் தரப்படுகிறது. ஜி.எஸ்.எம்., முறையில் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ள சந்தாதாரர்கள் தான் அதிகம். சி.டி.எம்.ஏ.,வில் கணிசமாக குறைவாகத்தான் உள்ளனர். இதனால், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தை பின்பற்றும் நிறுவனங்களை விட, ஜி.எஸ்.எம்.,நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது. போட்டி காரணமாக, சந்தாவை குறைத்து, அதனால், ஓரளவு இழப்பை தான் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், 'டிராய்' திட்டம் பற்றி மொபைல் நிறுவனங்கள் தரப்பில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. 'டெர்மினேஷன் கட்டணத்தை ஒன்பது பைசாவாக குறைக்க வேண்டும். அப்போது தான் எல்லா நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படாமல் வர்த்தக போட்டியை சமாளிக்க முடியும்' என்று சில நிறுவனங்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இறுதி முடிவு தெரிந்த பின், மொபைல் கட்டணம் அதிக பட்சம் 30 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதுபோல, சாதா போன் சந்தாதாரர்களுக்கும் இதனால் பலன் கிடைக்கும்.
நன்றி : தினமலர்
Saturday, January 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment