Thursday, November 27, 2008

மழையால் தத்தளிப்பதை போல் தத்தளிக்கிறது பங்குச் சந்தை

சந்தை 9,000 புள்ளிகளையே சுற்றி சுற்றி வருகிறது. சந்தையைக் காப்பாற்ற ஒரு நல்ல செய்தி வந்தால், இன்னொரு கெட்ட செய்தி வந்து எந்த ஏற்றமும் இல்லாமல் செய்து விடுகிறது. வரும் செய்திகளெல்லாம் நல்ல செய்திகளாக இல்லாததால் சந்தை, தமிழகம் மழையால் தத்தளிப்பது போல தத்தளிக்கிறது. புயல் கூட கரையைக் கடந்து விடும் போலிருக்கிறது; சந்தையைப் பிடித்த சனி இன்னும் கரையைக் கடக்கவில்லை.
திங்களன்று காலை சிட்டி வங்கியை காப்பாற்ற அமெரிக்க அரசு பல கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. முக்கிய இடத்திலிருந்து சிட்டி வங்கி மூழ்குகிறது என்றால் பல இடங்களிலும் சந்தை பற்றி எரிந்திருக்கும். தற்போது வந்து கொண்டிருக்கும் செய்தி பாங்க் ஆப் அமெரிக்காவின் நிலைமையும் சரியில்லை என்பது தான். சமீப காலத்தில் தான் பாங்க் ஆப் அமெரிக்கா நலிந்த நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கே இந்த நிலை என்றால் எங்கு போய் சொல்வது? இந்த வாரத்தில் மூன்று நாட்களுமே சந்தை ஏறி இறங்கிக் கொண்டு தான் இருந்தது. காலையில் ஒரே ஏற்றமாக இருக்கும். அப்பாடி இன்று தப்பித்தோம் என்று பல முதலீட்டாளர்கள் இருக்கும் சமயத்தில் சந்தை ஒரேயடியாக விழத்தொடங்கும். இது தான் வாடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த வெள்ளியன்று சந்தை மிகவும் கீழே இறங்கியே துவங்கின. அங்கு நிதி செகரட்டரியாக எல்லாரும் விரும்பிய நபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சந்தை யூ டேர்ன் அடித்தது. இதைத் தொடர்ந்து திங்களன்று இந்தியாவிலும் சந்தை பிரமாதமாக பரிணமிக்கப் போகின்றன என்று தான் எல்லாரும் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நடந்ததோ வேறு. காலை முதல் ஏறிக் கொண்டே இருந்த சந்தை முடிவாக 12 புள்ளிகள் இறங்கியே முடிவடைந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் வருமானங்கள் வருங்காலங்களில் குறைவாக இருக்கும் என்று ஜே.பி. மோர்கன் கணித்திருந்ததாக வெளிவந்த செய்திகள் அந்த வங்கியின் பங்குகளையும், மற்ற வங்கியின் பங்குகளையும் கீழே தள்ளியது. இது சந்தையை குறைத்தது.
நேற்று முன்தினமும் 207 புள்ளிகள் சரிவைத்தான் சந்தித்தது. சரிவே வாழ்க்கையாகிப் போனது. ஏன் குறைந்தது? டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதிகள் நெருங்குவதால் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் அதிகம் விற்கப்பட்டதாலும், ஐரோப்பா பங்குச் சந்தைகள் அன்றைய தினம் கீழே இறங்கியே தொடங்கியதாலும் அதன் பாதிப்புகள் இங்கேயும் தெரிந்தது. ஆதலால் சந்தை இங்கும் மிகவும் இறங்கியது. சீன மத்திய வங்கி கடந்த செப்டம்பரில் இருந்து இது வரை நான்கு முறை ரேட் கட் செய்துள்ளது. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி அது போல செய்யலாம் என்ற எண்ணத்தில், நேற்று சந்தை கடகடவென மேலே சென்றது. மும்பை பங்குச் சந்தை 331 புள்ளிகள் கூடி 9,028 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 98 புள்ளிகள் கூடி 2,752 புள்ளிகளுடன் முடிவடைந்தது. என்ன செய்யலாம்?: நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையை தொடர்ந்து கவனிக்காதீர்கள். அது உங்கள் போர்ட் போலியோவுக்கும் நல்லதல்ல, உடலுக்கும் நல்லதல்ல. வங்கியில் பிக்சட் டிபாசிடில் போட்டால் தொடர்ந்து பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள். அப்படி இருந்து விடுங்கள். ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அது வந்தால் சந்தையை சிறிது உயர்த்தலாம்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


No comments: