எத்தனை கேள்விகள் கேட்டாலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா வாய்திறக்க மறுத்துவிட்டார். கடந்த ஒருவாரமாகவே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. மத்திய அமைச்சரவை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின் முடிவு செய்யும் என்ற கருத்து பேசப்பட்ட போது, நேற்று முன்தினம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விரைவில் வரும் என்ற கருத்தைக் கூறியிருந்தார் தியோரா. பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் தியோரா, அத்துறையின் செயலர் பாண்டே, துணைச் செயலர் சுந்தரேசன், ஓ.என்.ஜி.சி., தலைவர் உட்பட பலரும் சேர்ந்து நேற்று இப்பிரச்னைக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக பல தொழில் நுட்ப கேள்விகளுக்கு அந்தத் துறையைச் சேர்ந்த செயலர்கள் பதிலளிக்க அனுமதித்ததால், இப்பிரச்னை குறித்து ஒரு மணி நேரம் விளக்கம் தரப்பட்டது. இந்த மாநாட்டில் முரளி தியோரா தெரிவித்த கருத்துக்கள்: இன்று கச்சா எண்ணெய் பேரல் 50 டாலருக்கு கீழே குறைந்திருக்கிறது. முன், 147 டாலர் இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட விலையா இன்னமும் தொடர்வது என்று காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேட்கின்றனர். இந்த விலை குறைப்பில் சம்பந்தப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண் ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகிய நான்கில், பெட்ரோல், டீசலில் மட்டும் லாபம் கிடைக்கிறது. இன்றைய தேதியில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ. 8.17ம், டீசலில் லிட்டருக்கு 60 பைசாவும் கிடைக்கிறது. அதேசமயம் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 21.64ம், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.330.20ம் நஷ்டம் ஏற்படுகிறது. மூன்று எண்ணெய் கம்பெனிகளும் தினமும் 90 லட்சம் முதல் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன. ஏற்கனவே, அதிக விலையில் கச்சா எண்ணெய் விற்றதில் இருந்து தொடர்ந்த நஷ்டமும், தற்போதைய நஷ்டமும் சேர்ந்து எண்ணெய் கம்பெனிகளுக்கு லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே அளவு கச்சா எண்ணெய் விலை நீடித்தால், அதன் நஷ்டம் குறைய இன்னமும் ஆறு மாதங்கள் ஆகும். மேலும், எண்ணெய் பத்திரங்கள் மூலம் மத்திய நிதியமைச்சகம் 50 ஆயிரம் கோடியை முன்பே தந்திருக்கிறது. எது எப்படியானாலும் எல்லா அம்சங்களையும் அரசு ஆராய்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் முடிவை எடுக்கும். அதே சமயம், விலை குறைப்பு பற்றி பேசியதாக வந்த செய்தியை அடுத்து தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது என்பது முற்றிலும் தவறு. அப்படி நோட்டீஸ் ஏதும் வரவில்லை. பெட்ரோலுடன், எத்தனால் கலக்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டம். அதில் 44 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் பின்பற்றும் வரித்திட்டம், மற்ற சில நடைமுறைகளால் பெரிய அளவில் ஊக்கம் பெறவில்லை. இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
நெருக்கடியான கேள்விகள் கேட்ட போது நகைச்சுவையாக பதிலளித்து பிரச்னையை சமாளித்தார். முன்னதாக செய்தி, ஒளிபரப்பு அமைச்சர் ஆனந்த் சர்மா, 'டிவி'களுக்கு ஒழுங்கு நடைமுறைத் திட்டம் கொண்டுவருவதில் அரசுக்கு உள்ள சிக்கல்களை விளக்கினார். அதே சமயம் ஒழுங்கு நடைமுறைகளை மீறும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் உரிமை என்றார். தேர்தல் ஆணையம் நோட்டீஸ் : கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ளதால், டிசம்பர் 24ம் தேதிக்குப் பின், பெட்ரோல், டீசல் விலை குறைக் கப்படும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். 'அவரின் இந்த அறிவிப்பு, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல்' எனக் கூறி, பாரதிய ஜனதா கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து, இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி, அமைச்சர் முரளி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment