Monday, November 3, 2008

சாப்பாட்டுக்கே இல்லாத போது பொம்மையை வாங்குவார்களா? -டாக்டர் பாரத் ஜுன்ஜுன்வாலா

தற்போதைய நிதிச் சுழலில் இந்தியா, சீனாவிலுள்ள பங்குச் சந்தை மற்றும் சொத்து மதிப்புகளும் குறைந்திருக்கிறது. எல்லாரும் இந்தப் பிரச்னையில் சீனா தப்பிவிடும் என்கின்றனர். ஆனால், இச்சூழலை உருவாக்கியதில் சீனாவுக்குப் பங்கு உண்டு.அமெரிக்காவில், 'டாட்காம்' குமிழி உடைந்த பின், அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கம் அடைய ஆரம்பித்தது. அமெரிக்க நிதித்துறை வீட்டுவசதிக் கடன் வட்டி சதவீதத்தைக் குறைத்தது. மேலும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, வங்கிகள் தாராளமாகக் கடன் அளித்தன.அமெரிக்கர்களோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் காலணிகள், பொம்மைகள் போன்றவற்றிற்கு செலவு செய்தனர். எப்படி பெரிய கார் நிறுவனங்கள், தங்களுடைய நிதி நிறுவனங்களை வைத்துக் கொண்டு செயல்படுமோ அதுபோல சீனா செயல்பட்டது. தங்கள் கார்கள் அதிக விற்பனைக்காக கடன் வசதியும் தந்தனர். அதேமாதிரி தங்கள் பொம்மைகளை வாங்க அமெரிக்க நுகர்வோருக்குப் பணம் தந்தது சீனா.அதாவது, அமெரிக்க கஜானாவின் நிதிப் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு செயல்பட்டது. அப் பத்திரங்கள் வீட்டுக்கடன் வசதி நிதியாகவும், நுகர்வோர் செலவுக்கான கடன் வசதிகளாகவும் மாறின. இதில் சீனாவுக்கு அன்னியச் செலாவணிக் கையிருப்பாக 1.8 லட்சம் டிரில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு பத்திரங்களாக கிடைத்தன. அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பிற்காக, கடந்த 25 ஆண்டுகளாக பாடுபடுகிறது சீனா. குறைந்த விலையில் பொருட்கள், குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் ஆகிய இரண்டும் சீனத்தயாரிப்பு அதிகரிக்க காரணம். ஆகவே, சீனப்பொருட்கள் அமெரிக்காவில் அதிகமாகக் குவிந்தன.சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருளாதார நெருக்கம் அதிகம். அமெரிக்காவில் வீட்டுக்கடன் திவாலா விவகாரத்தில் சீனா பணம் தந்து பங்கேற்றது. சீனாவில் இருந்து மலிவான இறக்குமதி காரணமாக, அமெரிக்காவில் அப்பொருட்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது; அத்தொழில்கள் மூடப்பட்டன; அதற்கான வேலைவாய்ப்பும் பறிபோனது. அங்கு, 'சப்பிரைம்' திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் கட்டத்தவறியதால் ஏற்பட்ட ஆபத்து தான் இப்போது நாம் காண்பது. ஆனால், இந்தியா 'கார்-லோன்' என்ற இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் நம் அன்னியச் செலாவணி 300 பில்லியன் டாலராக அதிகரித்தது. அமெரிக்க பிரதம வங்கிக்கு நம் ரிசர்வ் வங்கி அனுப்பிய பணத்தில் இருந்து நம் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படவில்லை. ஆகவே, உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி எந்த அளவு சீனாவையும், இந்தியாவையும் வித்யாசமாக பாதிக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.இந்தியாவின் கடையில் உள்ள ஒரு பொருளை விற்கும் போது, அதை தன் சொந்தப் பணத்தில் இருந்து வாங்கும் நுகர்வோர் இங்கு அதிகம். சீனாவில் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் கையில் பணம் இல்லை. இதனால் சீனாவுக்குப் பாதிப்பு ஏற்படும், அன்னியச் செலாவணிக்கையிருப்பு குறையும். இன்றைக்கு அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்த நிலை நீண்டகாலத்திற்கு நீடிக்காது.சீனாவின் ஏற்றுமதிப் பட்டியலில், 'டிவி'க்கள், ஐபாட்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளவை. அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கும் போது இவற்றின் விற்பனை அதிகரிக்காது. சாப்பாட்டுக்கே இல்லாத போது யார் பொம்மையை வாங்குவார்கள்? எங்கிருந்து இரவு டின்னர் வரும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சீனாவில் இருந்து வரும் 'பார்பி டால்' விலை 10 டாலரில் இருந்து ஒன்பது டாலராகக் குறைந்தால் யாருக்கு என்ன லாபம்? எப்படி வாங்க முடியும்? இந்தியாவும் சாப்ட்வேர் மற்றும் 'பிபிஓ' சர்வீஸ்களை ஏற்றுமதி செய்கிறது. இவை உற்பத்தித் திறன் கொண்டவை. சில நிபுணர்கள் கருத்துப்படி இந்த 'சர்வீஸ் வகை ஏற்றுமதி' அதிகரிக்கும். சொல்லப்போனால், அங்கு செலவினத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளால் இவை ஏற்கனவே குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் இடங்களுக்குத் தானே வரும். இப்போது சந்திக்கப்படும் நெருக்கடிகளை சீனாவை விட இந்தியா நன்றாகச் சமாளிக்கும். ஆனால், வருமான வரியில் சில சலுகைகளைத் தந்து மக்கள் கையில் பணம்புழங்க சீனா முடிவு எடுத்திருக்கிறது. நாமும் வருமான வரிச்சலுகைகளை அதிகப்படுத்த வேண்டும். எக்சைஸ் வரிகளைக் குறைப்பதுடன், இறக்குமதி வரியை அதிகரிக்கவேண்டும். வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தரப்படும் மானியம் அதிகரித்தால் அது அடிப்படை செலவினத்தை ஊக்குவிக்கும். அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதால், அவர்கள் அதை அடிப்படை நுகர்விற்குப் பயன்படுத்த மாட்டார்கள்.இன்றைக்கு சொத்து மதிப்பு சரிந்து விட்டதே, பங்குச்சந்தை சரிந்ததே என்று கவலைப்பட வேண்டாம். இது நிஜ பொருளாதாரத்தைப் பிரதிபலிப்பதில்லை, மொத்த வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் இருக்கும் என்பதே நல்ல தகவல். அன்னிய மூலதன முதலீட்டாளர் பணத்தை திரும்ப எடுத்ததே பங்குச்சந்தை வீழக் காரணம். இந்த அலையில் இருந்து இந்தியாமீண்டுவிடும்.
நன்றி : தினமலர்


No comments: