Saturday, November 1, 2008

சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை மேலும் குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்து ரூ.1,85,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரித்திருந்தது. இப்போது ரிசர்வ் வங்கி, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை ( சி.ஆர்.ஆர்.) மேலும் ஒரு சதவீதமும், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ( ரிபோ ரேட் ) 0.5 சதவீதத்தையும் குறைத்திருக்கிறது. ஏற்கனவே 6.5 சதவீதமாக இருந்த சி.ஆர்.ஆர்., இப்போது 5.5 சதவீதமாக குறைத்திருப்பதால், வங்கிகளில் மேலும் ரூ.40,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சி.ஆர்.ஆர்., குறைப்பு, இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. 0.5 சதவீதத்தை அக்டோபர் 25ம் தேதியிலிருந்தும் 0.5 சதவீதம் நவம்பர் 8ம் தேதியிலிருந்தும் அமல்படுத்துகிறது. இதுவரை 8 சதவீதமாக இருக்கும் ரிபோ ரேட்டை நவம்பர் 3 ம் தேதியில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கிறது. இது தவிர, வங்கிகள் கவர்மென்ட் பாண்ட்களில் செய்ய வேண்டிய முதலீட்டிலும் ஒரு சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இப்போது அது 24 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை பற்றி ஐசிஐசிஐ வங்கியின் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சார், இது வங்கிகளின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் வங்கிகள் வட்டியை குறைக்க வழி ஏற்படும் என்றும் சொன்னார்.
நன்றி : தினமலர்


No comments: