Saturday, November 1, 2008

இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது

செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.7,047.13 கோடி நிகர நஷ்டமடைந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டில் ஐ.ஓ.சி., ரூ.3,817.75 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இந்த நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலுமே ஐ.ஓ.சி., நஷ்டம்தான் அடைந்திருக்கிறது. இதற்கு முன் அது, 2007 - 08 நான்காவது காலாண்டில்தான் நஷ்டத்தை சந்தித்திருந்தது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால் அதற்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு பண அளவு குறைந்து போனது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இன்வென்ட்ரி வேல்யூவேஷனில் ஏற்பட்ட இழப்பு, வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்திருப்பதால் அதிகரித்து விட்ட செலவினம் போன்ற காரணங்களால், இந்த காலாண்டில் நஷ்டம் ரூ.7 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாக ஐ.ஓ.சி.,யின் சேர்மன் சர்தக் பெகுரியா தெரிவித்தார். ஆனால் நீண்ட இடைவேளைக்குப்பின் இன்று சனிக்கிழமையில் இருந்து அது லாபம் அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். காரணம், கச்சா எண்ணெய் விலை கனிசமாக குறைந்திருப்பதுதான். இதுவரை பெட்ரோல் விற்பனையால் நஷ்டமடைந்து வந்த ஐ.ஓ.சி., இனிமேல் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்கும் போதும் ரூ.4.12 லாபம் அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்பனையின் போது தொடர்ந்து நஷ்டம்தான் அடையும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு லிட்டர் டீசலிலும் ரூ.0.96 ம், மண்ணெண்ணெயில் ரூ.22.40 ம், எல்.பி.ஜி.,யில் ரூ.343.49 ம் நஷ்டமடையும் என்கிறார்கள். இவைகளின் விற்பனையால் ஐ.ஓ.சி., நாள் ஒன்றுக்கு அடையப்போகும் நஷ்டம் ரூ.85 கோடி.
நன்றி : தினமலர்



No comments: