Wednesday, September 3, 2008

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடியில் கடை

'தீ விபத்து நடந்த சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை நிர்வாகத்தினர், தீயணைப்பு சான்றிதழ் பெறாமல் கடையை நடத்தியுள்ளனர். கடையில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர் எடுத்துச் செல்லும் பைப் லைன்கள் பெயரளவில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை,'' என தமிழக தீயணைப்புத் துறை இயக்குனரான கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணை போலீஸ் தரப்பில் நடந்து வருகிறது. தீப்பிடித்தது எப்படி என்ற விசாரணையில், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அச்சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாகின. சம்பவ இடத்தை பார்வையிட்டேன். பல தவறுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட ஐந்து மாடிக் கட்டடத்தில், தரைதளத்தில் இருந்து ஐந்தாவது தளத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டு, கேட் வால்வு பொருத்தப்பட வேண்டும். அதை முறைப்படி செய்யாமல், பெயரளவில் செய்துள்ளனர். வெறும் பிளாஸ்டிக் பைப் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. கேட் வால்வு இல்லை; அதனால், விரைவில் தண்ணீரை, தீப்பிடித்த தளத்திற்கு கொண்டு செல்ல முடியாதது, விசாரணையில் தெரிய வந்தது.அது தவிர, விபத்து நடந்த கடையில், தீயணைப்புத் துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ் பெறவில்லை. அதனை பெறாமல் எப்படி கடையை நடத்தினர் என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை. சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடைக்கு தீயணைப்புத் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. தீ விபத்து நடந்த நிறுவனத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, கோர்ட் டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த சம்பவம், தீயணைப்பு விதிகளை மீறும் அனைத்து நிறுவனத்திற்கும் பாடமாக இருக்க வேண்டும்.தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள வர்த்தக நிறுவனத்தினர் பலர், ஐகோர்ட்டில் பல்வேறு தடை உத்தரவுகளை வாங்கியுள்ளனர். மாநகராட்சி விதி முறையை மீறி அனுமதிக்கப்பட்ட தளங்களுக்கு மேல், ஏறக்குறைய எல்லா நிறுவனத்தினரும் கட்டடம் கட்டியுள்ளனர். அவர்கள் அதைக் குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் உள்ள வர்த்தக நிறுவனத்தினரை நேரில் அழைத்து, தீ தடுப்பு உத்திகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளோம். அத் துடன், வர்த்தக நிறுவனங்களில் பொருத்த வேண்டிய தீ தடுப்பு கருவிகள் உட்பட முக்கிய அம்சங்கள் குறித்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் செய்து முடிக்காவிட்டால் நடவடிக்கை தொடரும்.
தமிழகத்தில் 968 பெரிய அடுக்கு மாடிக் கட்டடங்கள் உள்ளன. அதில், சென்னையில் மட்டும் 661 கட்டடங்கள் உள்ளன. பல மாடி கட்டடங்கள் கட்டுபவர்களுக்கு, 2006ம் ஆண்டு ஐகோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, இனிமேல் கட்டப்படும் புதிய கட்டடங்களை சுற்றி நாலாபுறமும் ஏழு மீட்டர் காலியிடம் அமைக்க வேண்டும். தீயணைப்பு சான்றிதழ் வழங்கும்போது இதனை கண்டிப்பாக பின்பற்ற உள்ளோம்.
கட்டடம் முழுதும் தீப்பற்றி எரியும்போது, கட்டடத்திற்குள் துளையிட்டு நுழைவதற்கு நவீன துளையிடும் கருவியை, இந்த விபத்தில் பயன்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த மெஷினின் மதிப்பு ரூ.50 லட்சத்தைத் தாண்டும். அதைத் தமிழக தீயணைப்புத் துறைக்கு வாங்க அரசிடம் அனுமதி கோரப்படும்.
இவ்வாறு ஷியாம் சுந்தர் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: