Tuesday, September 16, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 92 டாலராக குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது.நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை நேற்று மட்டும் பேரலுக்கு 5.47 டாலர் குறைந்து 95.71 டாலராக இருந்தது. அதே போல லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 92.38 டாலராக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இப்போது தான் கச்சா எண்ணெய் விலை இவ்வளவு அதிகமாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கிணறுகள் இருக்கும் மெக்ஸிகோ வளைகுடா பகுதியை, ஐக் சுறாவளி எதிர்பார்த்த அளவுக்கு தாக்காமல் கடந்து சென்றுவிட்டதுதான் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதற்கு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதிநிறுவனமான லேமன் பிரதர்ஸ் திவால் ஆனதாக அறிவித்திருந்தும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது ஆச்சரியம்தான். ஆனால் இதிலும் ஓரு ஆதரவான செய்தி என்னவென்றால், மோசமான நிதி நிலையில் இருக்கும் இன்னொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் சை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறது. மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்திற்கு 40 பில்லியன் டாலருக்கும் மேல் வராக்கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனமான ஏ ஐ ஜி யும் இப்போது நிதி பிரச்னையால் தள்ளாடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: