உலகிலேயே அதிக அளவு பெட்ரோலை உபயோகிக்கும் நாடு அமெரிக்காதான். முன்பு பெட்ரோல் விலை குறைவாக இருந்ததால் இஸ்டத்திற்கு செலவழித்தார்கள். இப்போதோ பேரலுக்கு 147 டாலர் வரை விலை உயர்ந்து கொண்டே போனதால் பெட்ரோல் உபயோகத்தை குறைக்க ஆரம்பித்து விட்டனர். அதனால் இப்போது கச்சா எண்ணெய் விலையும் குறைகிறது என்கிறார்கள். நேற்றைய சந்தையில் அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 112.31 டாலர் வரை குறைந்து பின்னர் 113.01 டாலரில் முடிந்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவு குறைவு. அமெரிக்க அரசு வெளியிட்ட எனர்ஜி இன்ஃபர்மேஷன் அட்மினிஸ்டிரேஷன் ( ஐ இ ஏ ) ரிப்போர்ட்டில், கடந்த 26 ஆண்டுகளில் இல்லத அளவாக அமெரிக்காவில் பெட்ரோல் உபயோகம் குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவின் பெட்ரோல் உபயோகம் நாள் ஒன்றுக்கு 8,00,000 பேரல்கள் குறைந்திருக்கிறது.அமெரிக்காவில் இப்போதிருக்கும் பொருளாதார மந்த நிலையே அடுத்த வருடமும் நீடித்தால், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துதான் இருந்தால், அடுத்த வருடத்தில் அமெரிக்காவின் பெட்ரோல் உபயோகம் நாள் ஒன்றுக்கு 20.08 மில்லியன் பேரல்களாக ( 2,00,80,000 பேரல்கள் ) மட்டுமே இருக்கும் என்று ஐ இ ஏ அறிக்கை சொல்கிறது. ரஷ்யாவும் ஜார்ஜியாவும் சண்டையை விலக்கிக்கொள்வதாக அறிவித்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஒரு காரணம். ஏனென்றால் இவர்களது சண்டையால் ஜார்ஜியா வழியாக செல்லும் மிக முக்கியமான எண்ணெய் பைப்லைன் ஒன்றுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் முன்பு இருந்தது.இப்போது அந்த அச்சம் போய் விட்டது. ஜார்ஜியா ஒரு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இல்லை என்றாலும் அது வழியாக முக்கியமான பைப்பைன் ஒன்று ஆசர்பைஜானில் இருந்து துருக்கிக்கு செல்கிறது. இந்த பைப்லைன் வழியாக நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஆசர்பைஜானில் இருந்து துருக்கிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்
Wednesday, August 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment