Saturday, August 14, 2010

புதிய சலுகைத்திட்டத்தை அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரவுண்ட்டிரிப் விமானப் பயணத்திற்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கட்டணக்குறைப்பு அனைத்து ( பர்ஸ்ட், பிசினஸ் மற்றும் எகானமி) பிரிவுகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த கட்டணக்குறைப்பின் மூலம், 13 சதவீத அளவிற்கு சேமிப்பைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், கெய்ரோ, டமாஸ்கஸ், துபாய், குவைத், மஸ்கட், ரியாத், டெஹ்ரான் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும் என்றும், மக்கள் இந்த புதிய சேவையை தங்கள் நிறுவன இணையதளமான டபிள்யூடபிள்யூடபிள்யூ. எமிரேட்ஸ்.காம்/யுஎஸ் என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இந்த தி்ட்டம், இந்த மாதம் 31ம் ‌தேதி முடிவடைவதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர்


பேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது ‌வோனேஜ்


இணையதளம் மூலம் தொலைபேசி சேவை தரும் நிறுவனமான வோனேஜ் நிறுவனம், பேஸ்புக் நண்பர்களுக்குள்ளே இலவசமாக பேசிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து, வோனேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இணையதளத்தின் மூலமமான தொலைபேச வசதியை பிரபலப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ‌போன்களில் இந்த வசதி அறிமுகப்படு்த்தப்பட உள்ளதாகவும், இந்த வசதியைப் பெற, வோனேஜ் இணையதளத்திற்கு சென்று, அதற்குரிய சாப்ட்வேரை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும், அதன்பின், அவர்கள் வழக்கம்போல, பேஸ்புக்கை லாக் இன் செய்தால், அதில் அவர்களின் நண்பர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தகவல் தொலைதொடர்பு வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


அச்சுறுத்தும் "சூப்பர்-பக்'குகள்!

எந்தவொரு வீரிய மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர்-பக்' எனப்படும் பாக்டீரியா இந்திய மருத்துவமனைகளிலிருந்து உலகுக்கு பரவியதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இதழில் வெளியான தகவல், இப்போது பரபரப்பாக செய்தியாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விதழ் குறிப்பிடும் என்டிஎம்-1 (நியு டெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிருமி அல்லது ஒருவகை மரபீனி இ-காலி, கே-நிமோனியா ஆகிய இரு பாக்டீரியாக்களுடன் கலந்து, மனிதர்கள் உடலுக்குள் சென்று எல்லாவிதமான நோய்களையும் ஏற்படுத்தும் என்பதாலும், எந்தவிதமான தீவிர ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் இந்த "சூப்பர்-பக்' கட்டுப்படாது என்பதும்தான் அந்த ஆய்வின் முடிவு.

இந்தக் கிருமியின் பெயரில் நியு டெல்லி என்ற அடையாளம் இருக்கிறதே தவிர, இந்தக் கிருமி, தில்லி மருத்துவமனைகளிலிருந்தோ அல்லது இந்தியாவின் வேறு பகுதியிலிருந்தோ வெளியுலகுக்குச் சென்றது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது. பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த "சூப்பர்-பக்' தாங்கிய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து அறிய வந்துள்ளன.

இந்த "சூப்பர்-பக்' கிருமி ஆய்வில் ஈடுபட்ட இரு ஆய்வு மாணவர்களில் ஒருவர் தமிழக ஆராய்ச்சியாளர் கே. கார்த்திகேயன். வெள்ளக்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியல் ஆய்வு மாணவர். இங்கிலாந்து ஆய்விதழின் கருத்தை இவரே மறுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டும்தான் இந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

ஏதோ "சூப்பர் பக்' மட்டும்தான் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமி என்று கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை என்று நிறைய கிருமிகள் உள்ளன. நுண்ணுயிரித் தொழில்நுட்பம் விரிந்து நுட்பமாகச் செல்வதால், புதுப்புது ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கிருமிகள் பற்றி கண்டறிகிறார்கள். அதற்காக பீதி கிளப்ப வேண்டியதோ அல்லது இந்தியாவின் மீது பழிசொல்வதோ தேவையில்லாத வேலைகள். குறிப்பாக ஆராய்ச்சி இதழ்களுக்குத் தேவையில்லாத வேலை.

இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்துதான் பறவைக் காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் இறக்குமதியாகின. இதற்காக எந்த நாட்டையும் இந்தியா பழிசொல்லவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர, இந்தியாவுக்கு வருகை தந்த எந்தவொரு வெளிநாட்டினரையும் வாட்டி வதைக்கவில்லை.

மேலும், இத்தகைய கிருமிகள் மனிதர் மூலம்தான் பரவ முடியும் என்பதில்லை என்று மறுக்கும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது மனிதர்கள் விமானம் மூலம் சில மணி நேரத்திற்குள் உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்ல முடிகிறது. ஆகவே, அந்த நாட்டின் கிருமித்தொற்று இந்த நாட்டுக்குள் புகுந்ததாகச் சொல்ல முடிகிறது. ஆனால் இத்தகைய பயண வசதிகள் இல்லாத காலத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் காலரா போன்ற நோய்கள் பரவலாக ஒரே நேரத்தில் ஏற்பட்டு, உலகம் முழுவதும் மக்கள் இறந்தார்கள் என்பதைக் குறிப்பிடும் சில ஆய்வாளர்கள், வான் வழியாகவும், இடம்பெயரும் பறவைகள் மூலமும் கிருமிகள் பரவிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

ஆகவே இந்தியாவின் மீது மட்டும், குறி வைத்து இத்தகைய குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசிவிட்டுப் போவதற்குக் காரணம், இந்தியாவில் ஏற்பட்டுவரும் மருத்துவ வளர்ச்சிதான். குறிப்பாக, மருத்துவப் பயணமாக இந்தியா வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மருத்துவ வசதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுக்கு இணையாக உள்ளது. அதேவேளையில் மருத்துவச் செலவுகள் குறைவு. உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால், 30,000 அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால் இந்தியாவில் 6,000 அமெரிக்க டாலர் (3 லட்சம் ரூபாய்) செலவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முடியும். ஆகவே இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் தற்போது புதிது புதிதாகத் தொடங்கப்படும் பல மருத்துவமனைகள் இத்தகைய வெளிநாட்டு நோயாளிகளுக்காகவே, ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்துக்கு மருத்துவமனையை நிர்வகிக்கின்றன. நோயாளிகளைத் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர, பிரசாரம் செய்ய ஏஜன்டுகளையும்கூட பல நாடுகளிலும் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில், வெளிநாட்டினரின் மருத்துவப் பயணத்தால் கிடைக்கும் வருவாய் 5,000 கோடி ரூபாயாக உள்ளது. 2012-ம் ஆண்டில் இந்த அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 10,000 கோடி ரூபாய்) உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வளர்ந்த நாடுகளின் மருத்துவக்கூடங்களின் லாபம் குறைந்து விடுகிறது. அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் குறைகிறது. ஆகவே, இவை வெளிநாட்டினரை அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகள்.

இந்த அவதூறுகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவின் நியாயமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் அன்னிய சக்திகள். இன்னொருபுறம் நமது வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற முயலும் இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும். உலகம் "சூப்பர்-பக்' பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். இந்தியாவை அச்சுறுத்தும் "சூப்பர் பக்'குகள் ஒன்றா, இரண்டா... நாமல்லவா பயப்பட வேண்டியிருக்கிறது!

நன்றி : தினமணி

Sunday, March 21, 2010

இடம்பெயரும் துயரம்

இடமாறுதல் ஆணை பெற்று வேறு ஊருக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கும், பெரிய தனியார் நிறுவனங்களில் பல ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் கிடைப்பதால் இடம் பெயர்வோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் புதிய இடம், புதிய மனிதர்கள், கலாசாரம், மொழி சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால், என்ன தொழில் செய்வோம் என்பதே தெரியாமல், தங்கள் உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மூட்டை முடிச்சுகளுடனும் குழந்தைகளுடனும் வெளியேறும் சாதாரண ஏழைகளின் நிலைமை எண்ணிப் பார்க்க முடியாத துயரமாகத்தான் இருக்கிறது.
2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி, 102 கோடி மக்கள்தொகையில் 30 கோடி பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 24 கோடி பேர் (84.2 சதவீதம்) மாநிலத்துக்குள்ளாகவே மாவட்டத்தைவிட்டு வெளியேறியும் அல்லது மாவட்டங்களுக்கு உள்ளேயும் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 4.5 கோடி பேர் (13.8 சதவீதம்) வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.


1981-ம் ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்களின் எண்ணிக்கை 12-ஆக இருந்தது. 1991-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்த எண்ணிக்கை 23 நகரங்களாக மாறியது. 2001-ம் ஆண்டு 35 நகரங்களாக உயர்ந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.


இவ்வாறு பிழைப்பைத் தேடி வெளியேறும் சாதாரண ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாழ்க்கையின் நெருக்கடி, குடும்ப வறுமை, பொய்த்துப்போன விவசாயம், உள்ளூரில் வேலை கிடைக்காத நிலை என்று பல்வேறு காரணங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்தின்படி, இந்த எண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்திருக்கும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதுபற்றிய உண்மைகள் அப்பட்டமாகத் தெரியவரும்.
பெருந்தொழில்களும் நெடுஞ்சாலைகளும் கிராமங்களைக் கிழித்துப்போடும்போது, இவர்கள் வாழ்க்கையையும் சேர்த்தே கிழித்துவிடுகிறது. விவசாய நிலங்களுக்காக இவர்களுக்குத் தரப்படும் இழப்பீடுகள் ஓராண்டுக்குமேல் கையில் இருப்பதில்லை.



உடலுழைப்பைத்தவிர வேறு தொழில் தெரியாத நிலைமையும், குடிப்பழக்கமும், படிப்பறிவின்மையும் இவர்களின் பணத்தைக் கரைத்துவிடுகிறது. விவசாய நிலவுடைமைக்காரரும் வயலில் வேலை செய்யும் விவசாயக்கூலியும் - இரு குடும்பங்களுமே வெளியேறும் கட்டாயத்துக்கு ஆளாகின்றன. பென்னாகரம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது, அரசியல் கட்சிகளால் பிரச்னையாக்கப்பட்டது. மீண்டும் 13 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதன் உண்மைத் தன்மையை அறிய விரும்பும் சமூகவியல் மாணவர்களும், தன்னார்வ அமைப்புகளும் இத்தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும், மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும் வீடுதேடிச் சென்று ஆய்வு நடத்தினால் துயரம் தோய்ந்த பல்வேறு உண்மைகள் வெளிப்படும். இவர்களில் 90 சதவீதம்பேர் பிழைப்பைத் தேடி வெளியேறியவர்களாக இருப்பார்கள்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயத்துக்கு வழியில்லாமல், தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை நடத்த கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கும் இடம்பெயரும். தமிழர்கள் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் படும் இன்னல்கள்- உள்ளூரிலும் வெளியூரிலும்- ஏராளம்.


உள்ளூரில் இவர்களது குடும்ப அட்டை ரத்து செய்யப்படுவதும், நம்பிக்கையுடன் உறவினர்களுடன் விட்டுச்செல்லப்பட்ட சிறு குழந்தைகள் வீணாகிப் போவதும், இவர்களது சிறு உடைமைகளும் காணாமல்போவதுமான சிக்கல்கள் ஒருபுறம். பிழைப்பைத் தேடிச் சென்ற இடத்தில் தங்க இடம் இல்லாமல் சாலையோரத்தில் ஆதரவற்று வாழ்க்கை நடத்துவதும், பெண் குழந்தைகளும் இளம் பெண்களும் கடத்தப்படுவதும் அல்லது வறுமையால் அவர்கள் வாழ்க்கை சீரழிவதும் ஒருபுறம். இவர்கள் சென்ற இடத்தில், நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்வதாலேயே இவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதே இல்லை- கொலை போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளைத் தவிர, சாதாரண விபத்தில் கை, கால்களை இழந்தாலும், கட்டட வேலையின்போது விபத்தில் இறந்தாலும், குறைந்த அளவு இழப்பீடு கொடுத்து, எந்தக் குற்றப் பதிவும் வழக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இத்தனை இன்னல்கள் இருந்தாலும் இவர்கள் இடம்பெயரக் காரணம் வறுமை, வேலையின்மை.


கிராம மக்கள் சாரிசாரியாக நகரங்களை நோக்கிச் செல்வது மிகப்பெரிய அபாயத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தப் போகிறது. இதனை அறியாத அரசும், அரசியல்வாதிகளும், நாமும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருப்பது அதைக் காட்டிலும் பெருந்துயரம்.


இந்த மக்களை மீண்டும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கே திரும்பி வந்து வாழ்வதற்கான விவசாயத் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையும். நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ. 42,000 கோடி ஒதுக்கினாலும், இவற்றில் மிகச் சிறிய தொகை மட்டுமே விவசாயிகளை அடைகிறது என்பதால், இதை நம்பி யாரும் கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. இவர்களுக்காகத் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். இவர்கள் இடம்பெயர்வதைப் பதிவு செய்யவும், இவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும், இவர்களை மீண்டும் அவர்களது மண்ணிலேயே வேரூன்றவும் செய்வதற்கான சிறப்புத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அவசியம். இதற்கென தனி அமைச்சரை நியமித்தாலும் நல்லதுதான்.
நன்றி: தினமணி

Wednesday, January 27, 2010

அவர்களும் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட (இ.எஸ்.ஐ.) மருத்துவமனைகளை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை வளாகங்களை உருவாக்கவும் தமிழ்நாட்டுக்கு ரூ. 890 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது, தமிழகத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளால் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே. இதை மனதில் கொண்டு பார்க்கும்போது, இந்த மருத்துவமனையின் எல்லைக்குள் வரமுடியாத தொழிலாளர்கள் பல கோடிப் பேர் இருப்பதை உணர முடியும்.

அண்மைக்காலமாக அயல்பணி ஒப்புகை என்பது எல்லாத் தொழில்துறைக்கும் பொதுவானதாக மாறி வருகிறது. உதிரி பாகங்களைத் தனியாரிடத்தில் கொடுத்து, செய்து வாங்கி, அதைத் தொழிற்கூடத்துக்குக் கொண்டுவந்து பொருத்துகிற, பயன்படுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கமும் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 84 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்தந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படக்கூடும்?

அவ்வாறு செய்வது நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. அரசு அதிகாரிகள் சொல்லும் விளக்கம் இதுதான்: இ.எஸ்.ஐ. திட்டம் என்பது தொழிலாளர், தொழிற்கூடம் இரண்டும் உறுப்பினர்களாகச் சேர்ந்து நிதிசெலுத்தும் திட்டம். இதில் தொழிலாளர் தனது சம்பளத்தில் 1.75 சதவீதத்தையும் தொழிற்கூடம் தனது பங்காக 4.75 சதவீதத்தையும் செலுத்துகின்றனர். இத்திட்டத்தில் சிகிச்சை மட்டுமன்றி, மருத்துவமனைக்கு வந்ததால் பணிக்குச் செல்ல முடியாமல் ஏற்படும் சம்பள இழப்பு, பணிக்கால விபத்தில் தாற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என பல்வேறு சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் தாற்காலிகப் பணியாளர்களுக்குத் தரஇயலாது என்பதுதான் அரசுத் துறையின் விளக்கம்.

தாற்காலிகத் தொழிலாளர்கள் இத்தகைய இழப்பீடுகள் பெறத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுக்கும், சாதாரண காயங்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெறவும், அதற்கான மாத்திரைகளைப் பெறவும் செய்தால், அதனால் என்ன செலவு ஆகிவிடப்போகிறது? தாற்காலிகத் தொழிலாளர் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் இல்லையென்ற போதிலும்கூட, அவர் சார்ந்துள்ள நிறுவனம் சந்தாதாரர் என்பதால் இந்தச் சிறிய மருத்துவச் சேவையை அவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது?

மேலும், 50 ரூபாய்க்குக் குறைவாகத் தினக்கூலி பெறும் நபரிடம் சந்தா வசூலிக்காமல், அந்தத் தொழில்நிறுவனத்தின் பங்கை மட்டுமே சந்தாவாகப் பெற்று அந்தத் தொழிலாளியைச் சந்தாதாரராகக் கருதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும் சட்டம், தாற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பதிலி தொழிலாளர்கள் விஷயத்திலும் சலுகைகளை நீட்டிக்க சில சட்டத் திருத்தங்களைச் செய்தால் என்ன? இவர்களைப்போன்றே, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவமனைகளில் சிறு நோய்களுக்காக மருத்துவ ஆலோசனையும் மாத்திரைகளும் பெறச் செய்தாலும் பலர் நன்மை அடைவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெற்று வருவதுடன், உடல்நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையோ அல்லது தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காய்ச்சல், கண் பரிசோதனை போன்ற எளிய மருத்துவ ஆலோசனைகளுக்கும்கூட இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் பணிநேரம் (ஷிப்ட்) காரணமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுவதோடு, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

இத்தொழிலாளர்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை அவசியமெனில் இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும் என்றாலும், சிறுசிறு உடல்கோளாறுகளுக்கு மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி நிர்வகித்தன. காலப்போக்கில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறவும் அதற்கான தொகையை நிறுவனம் செலுத்துவதுமான ஏற்பாடு உண்டானது. அதன்பின்னர் எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. கோடிகோடியாக லாபம் சம்பாதிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட, தங்கள் தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை.

இந்நிலையில், அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும். இ.எஸ்.ஐ. நிர்வாகக் குழுவில் தொழிலாளர், தொழிற்கூடம், மத்திய, மாநில அரசுகள், மருத்துவத்துறை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய நடைமுறையைத் தமிழகம் ஒரு முன்னோடியாக அமல்படுத்தலாம். தேவைப்பட்டால், இந்தத் தொழிலாளர் சார்பில், தொழிற்கூடங்களுக்குப் பதிலாக தமிழக அரசே ஒரு தோராயமான தொகையை இ.எஸ்.ஐ.-க்கு செலுத்துவதன் மூலம் ஆட்சேபணைகளையும் இல்லாமல் செய்துவிட முடியும். நிரந்தரப் பணியாளர்கள் குறைவதால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில், இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்கட்டமைப்புகளை ஏன் மற்ற தொழிலாளர்களுக்காகத் திறந்துவிடக்கூடாது!
நன்றி : தினமணி

அமைதிப் பேச்சில் அர்த்தம் இல்லை

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய குழுவினர் தில்லியில் அண்மையில் கூடி ஆலோசித்துள்ளனர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இதுதான் சரியான தருணம் என, இக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல்படும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதால் பயன் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவாறே உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே அண்மையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பஞ்சாப் ஹோட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து 100-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்த பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசி வழிநடத்தியுள்ளனர்.

மும்பையில் நடந்த தாக்குதலின்போதும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் இருந்துதான் கட்டளைகள் வந்தன. இப்போதும் அதே பாணியில் தாக்குதல் நடத்திப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். நல்லவேளையாக காஷ்மீர் போலீஸôர் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீஸôரின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதைப் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவரை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக்கோரி "அப்பீல்' செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்த மனு நிலுவையில் உள்ளது.

இதேபோல, மும்பைத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகிர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஹித், மஷார் இக்பால், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஹமாத் இக்பால் ஆகிய 5 பயங்கரவாதிகள் மீதான வழக்கும் இழுத்தடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாதவரை, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்தியா எச்சரித்தபோது, இந்தியாதான் அமைதிப் பேச்சைத் துண்டிப்பதாக எகிறும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்ரீநகர் தாக்குதல் இதற்கு ஓர் உதாரணம். இதற்கான செல்பேசி ஆதாரங்களைக் கொடுத்தாலும் பாகிஸ்தான் வழக்கம்போல மறுக்கவே செய்யும்.

இதேபோல, எல்லையிலும் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். துப்பாக்கியால் சுடுவதுடன் இல்லாமல் ஏவுகணைத் தாக்குதலையே நடத்துகிறது.

தங்கள் மண்ணில் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானை இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், பலனில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேளையில், காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு செல்போன் இணைப்புக்கு அனுமதி இல்லை, படைகள் குறைக்கப்படமாட்டாது என்பன உள்ளிட்ட சில உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவது பாராட்டத்தக்கது.

""ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாகக் கருதக்கூடாது'' என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுவதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல, ""ஸ்ரீநகர் சம்பவத்தைக் காரணம்காட்டி காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்வதை நிறுத்தக்கூடாது'' என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தினம் தினம் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் என பயங்கரவாதத்தின் வலியை தானே உணர்ந்து கொண்டபோதும், பலுசிஸ்தானில் நடைபெறும் குழப்பங்களுக்கு இந்தியா தான் காரணம் என அபாண்டமாகக் குற்றம்சாட்டி விஷமத்தனத்துடன் நடந்துகொள்கிறது பாகிஸ்தான்.

அமைதிப்பேச்சைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுஜீவிகளும் மக்களும் விரும்பினாலும் ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை, அமைதிப்பேச்சு என்பதற்கே அர்த்தம் இல்லை.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

Monday, January 25, 2010

வரும் ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிக்காக அதிக முதலீடு

வரும் ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிக்காக அதிக முதலீடு செய்யப் பட வேண்டியிருக்கும் என்று பிரபல நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதை தொடர்ந்து, கட்டமைப்பு துறைகளின் முன்னேற்றத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு முதலீடுகள் தேவைப்படும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புரூக்ஸ் எண்ட்விசில் தெரிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.78.20 லட்சம் கோடியாகும்.
சராசரியாக ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.6.52 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறையில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என புரூக்ஸ் மேலும் தெரிவித்தார்