எந்தவொரு வீரிய மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர்-பக்' எனப்படும் பாக்டீரியா இந்திய மருத்துவமனைகளிலிருந்து உலகுக்கு பரவியதாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சி இதழில் வெளியான தகவல், இப்போது பரபரப்பாக செய்தியாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விதழ் குறிப்பிடும் என்டிஎம்-1 (நியு டெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிருமி அல்லது ஒருவகை மரபீனி இ-காலி, கே-நிமோனியா ஆகிய இரு பாக்டீரியாக்களுடன் கலந்து, மனிதர்கள் உடலுக்குள் சென்று எல்லாவிதமான நோய்களையும் ஏற்படுத்தும் என்பதாலும், எந்தவிதமான தீவிர ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் இந்த "சூப்பர்-பக்' கட்டுப்படாது என்பதும்தான் அந்த ஆய்வின் முடிவு.
இந்தக் கிருமியின் பெயரில் நியு டெல்லி என்ற அடையாளம் இருக்கிறதே தவிர, இந்தக் கிருமி, தில்லி மருத்துவமனைகளிலிருந்தோ அல்லது இந்தியாவின் வேறு பகுதியிலிருந்தோ வெளியுலகுக்குச் சென்றது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது. பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த "சூப்பர்-பக்' தாங்கிய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள் குறித்து அறிய வந்துள்ளன.
இந்த "சூப்பர்-பக்' கிருமி ஆய்வில் ஈடுபட்ட இரு ஆய்வு மாணவர்களில் ஒருவர் தமிழக ஆராய்ச்சியாளர் கே. கார்த்திகேயன். வெள்ளக்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் நுண்ணுயிரியல் ஆய்வு மாணவர். இங்கிலாந்து ஆய்விதழின் கருத்தை இவரே மறுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டும்தான் இந்த நோய்க்கிருமி உள்ளது என்று சொல்வது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.
ஏதோ "சூப்பர் பக்' மட்டும்தான் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமி என்று கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை என்று நிறைய கிருமிகள் உள்ளன. நுண்ணுயிரித் தொழில்நுட்பம் விரிந்து நுட்பமாகச் செல்வதால், புதுப்புது ஆய்வுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய கிருமிகள் பற்றி கண்டறிகிறார்கள். அதற்காக பீதி கிளப்ப வேண்டியதோ அல்லது இந்தியாவின் மீது பழிசொல்வதோ தேவையில்லாத வேலைகள். குறிப்பாக ஆராய்ச்சி இதழ்களுக்குத் தேவையில்லாத வேலை.
இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்துதான் பறவைக் காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் இறக்குமதியாகின. இதற்காக எந்த நாட்டையும் இந்தியா பழிசொல்லவில்லை. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர, இந்தியாவுக்கு வருகை தந்த எந்தவொரு வெளிநாட்டினரையும் வாட்டி வதைக்கவில்லை.
மேலும், இத்தகைய கிருமிகள் மனிதர் மூலம்தான் பரவ முடியும் என்பதில்லை என்று மறுக்கும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது மனிதர்கள் விமானம் மூலம் சில மணி நேரத்திற்குள் உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்ல முடிகிறது. ஆகவே, அந்த நாட்டின் கிருமித்தொற்று இந்த நாட்டுக்குள் புகுந்ததாகச் சொல்ல முடிகிறது. ஆனால் இத்தகைய பயண வசதிகள் இல்லாத காலத்திலும் உலகின் பல்வேறு நாடுகளில் காலரா போன்ற நோய்கள் பரவலாக ஒரே நேரத்தில் ஏற்பட்டு, உலகம் முழுவதும் மக்கள் இறந்தார்கள் என்பதைக் குறிப்பிடும் சில ஆய்வாளர்கள், வான் வழியாகவும், இடம்பெயரும் பறவைகள் மூலமும் கிருமிகள் பரவிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
ஆகவே இந்தியாவின் மீது மட்டும், குறி வைத்து இத்தகைய குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் அள்ளி வீசிவிட்டுப் போவதற்குக் காரணம், இந்தியாவில் ஏற்பட்டுவரும் மருத்துவ வளர்ச்சிதான். குறிப்பாக, மருத்துவப் பயணமாக இந்தியா வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மருத்துவ வசதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டுக்கு இணையாக உள்ளது. அதேவேளையில் மருத்துவச் செலவுகள் குறைவு. உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால், 30,000 அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால் இந்தியாவில் 6,000 அமெரிக்க டாலர் (3 லட்சம் ரூபாய்) செலவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முடியும். ஆகவே இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பெருநகரங்களில் தற்போது புதிது புதிதாகத் தொடங்கப்படும் பல மருத்துவமனைகள் இத்தகைய வெளிநாட்டு நோயாளிகளுக்காகவே, ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்துக்கு மருத்துவமனையை நிர்வகிக்கின்றன. நோயாளிகளைத் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வர, பிரசாரம் செய்ய ஏஜன்டுகளையும்கூட பல நாடுகளிலும் பயன்படுத்துகின்றன.
இந்தியாவில், வெளிநாட்டினரின் மருத்துவப் பயணத்தால் கிடைக்கும் வருவாய் 5,000 கோடி ரூபாயாக உள்ளது. 2012-ம் ஆண்டில் இந்த அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 10,000 கோடி ரூபாய்) உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வளர்ந்த நாடுகளின் மருத்துவக்கூடங்களின் லாபம் குறைந்து விடுகிறது. அந்நாட்டு அரசுக்கும் கணிசமான வருவாய் குறைகிறது. ஆகவே, இவை வெளிநாட்டினரை அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறுகள்.
இந்த அவதூறுகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவின் நியாயமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் அன்னிய சக்திகள். இன்னொருபுறம் நமது வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆதாயம் பெற முயலும் இடைத்தரகர்களும், அரசியல்வாதிகளும். உலகம் "சூப்பர்-பக்' பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். இந்தியாவை அச்சுறுத்தும் "சூப்பர் பக்'குகள் ஒன்றா, இரண்டா... நாமல்லவா பயப்பட வேண்டியிருக்கிறது!
நன்றி : தினமணி
Saturday, August 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment