Friday, February 20, 2009

பங்குசந்தையில் சரிவு

பங்குச்சந்தையில் , பங்கு வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது . மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 8915 புள்ளிகளில் துவங்கியது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 2748 புள்ளிகளில் துவங்கியது . வர்த்தக முடிவின் போது சென்செக்ஸ் 199 புள்ளிகள் குறைந்து 8843 புள்ளிகளில் முடிந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 52 புள்ளிகள் குறைந்து 2,736.45 புள்ளிகளில் முடிந்தது .
நன்றி : தினமலர்


Thursday, February 19, 2009

தனலட்சுமி வங்கி ஆன்-லைன் சேவை

ரிசர்வ் வங்கியின் 'துரித பணம் அனுப்பும் சேவை திட்டத்தின் கீழ், கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கி, 'தனம் எக்ஸ்பிரஸ்' என்ற 'ஆன்-லைன்' பணம் அனுப்பும் வசதியை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனலட்சுமி வங்கி, அபுதாபியில் உள்ள மிகப் பெரிய 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிவர்த்தனை மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அபுதாபியில் உள்ள ஒருவர், இந்தியாவில் எந்த வங்கியின் எந்த கிளைக்கும் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும். இந்த வங்கியின் கொச்சியில் உள்ள தொழில் நிதியக் கிளை இதன் ஒரு பிரத்யேக கேந்திரமாக விளங்கும். பிற வங்கியின் வாடிக்கையாளர்கள் (ஆர்.டி.ஜி. எஸ்.,) மற்றும் என்.இ.எப்.டி., மூலம் பணம் அனுப்பி வைக்கப் படும்.
நன்றி : தினமலர்


சுகுணா 'டெய்லி பிரஷ்' கிளை துவக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் 150 சுகுணா, 'டெய்லி பிரஷ்' நேரடி விற்பனை நிலையங்களை துவக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிக்கன் கோழி உற்பத்தியில் சிகரத்தை எட்டியுள்ள சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் சார்பில், சுகுணா 'டெய்லி பிரஷ்' என்ற பெயரில் நேரடி விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. கோவை ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் முதல் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுச்சேரி உட்பட பல நகரங்களிலும், 'டெய்லி பிரஷ்' கிளைகள் துவக்கப்பட்டன. தற்போது கேரளாவில் அங்கமாலி, திருச்சூர், எர்ணாகுளம், எளமாக்காரா என பல நகரங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்படாத சிக்கன்களை வாங்க விரும்பாத சிக்கன் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளாக இந்த விற்பனை நிலையங்கள் அமைந் துள்ளன. லாலி பப், லெக் பீஸ், கறி கட், முழுக்கோழி என எட்டு விதமான சிக்கன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அசைவப் பிரியர்களை முழுமையாக திருப்திபடுத்தும் வகையில், ப்ரோசன் சிக்கன், ஹோம் பைட்ஸ் போன்ற உடனடி தயாரிப்பு சிக்கன் வகைகளும் இங்கு உள்ளன. ஒவ்வொரு 'டெய்லிபிரஷ்' கடையிலும் தினமும் 4,000 கிலோ சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக டோர் டெலிவரி வசதியும் துவக்கப்பட்டிருப்பதாக இப்பிரிவின் துணை பொது மேலாளர் பிரியா தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 150 கடைகளைத் திறக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த கிளைகள் துவக்க முன் வரலாம் என்று இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை கீழே தள்ளியது இடைக்கால பட்ஜெட் : சேதுராமன் சாத்தப்பன்

பட்ஜெட், 600 புள்ளிக்கு மேல் வரை சந்தையில் இருந்து அள்ளிக் கொண்டு போய்விட்டது. இந்த வாரம் திங்கள் முதல் நேற்று வரை நஷ்ட வாரம் தான். என்ன செய்வது என்று தெரியாமல் முதலீட்டாளர்கள் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். சாண் ஏறி சாண் வழுக்காமல் முழம் வழுக்குகிறது. சந்தை 9,000த்திலேயே அல்லாடுகிறது. பட்ஜெட்டை அனைவரும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். நடக்கும் என்பார் நடக்காது என்பது போல ஆகிவிட்டது.
உலகளவில் ஏற்படும் தொய்வு, சந்தைகளின் இறக்கம், இங்கும் பிரதிபலித்தது. பட்ஜெட்டில் இன்னும் ஒரு பேக்கேஜ் வருமென அனைவரும் எதிர்பார்த்தனர்; அதுவும் வரவில்லை, வேறு எவ்விதமான நல்ல அறிவிப்புகளும் வரவில்லை. அது, சந்தையை திங்களன்றும் தாக்கியது, நேற்று முன்தினமும் இறக்கிச் சென்றது. திங்களன்று 329 புள்ளிகளும், நேற்று முன்தினம் 270 புள்ளிகளும் குறைந்தது. இந்தத் துறை தான் என்று இல்லாமல் அனைத்து துறைகளும் கீழே இறங்கியது.
கடந்த 30 ஆண்டுகளில் எப்போதெல்லாம் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் சந்தை கீழே இறங்கியே வந்திருக்கிறது. அதுபோல தற்போதும் இறங்கியுள்ளது. ஒரு வேளை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்திருக்குமோ என்னவோ? உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால், நேற்று துவக்கத்தில் சந்தை கீழேயே இருந்தது. இது தான் நல்ல சமயம் என்று வாங்குபவர்கள் இருந்ததால் சந்தை சிறிது மேலே சென்றது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 19 புள்ளிகள் கீழே சென்று 9,015 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5 புள்ளிகள் மேலே சென்று 2,776 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 9,000க்கு மேலேயே இருப்பது ஒரு சிறிய ஆறுதல். இறங்கும் சந்தையும், ஏறும் டாலர் மதிப்பும்: சந்தை இப்படி இறங்குவதால், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. 50 ரூபாயை தாண்டி பயமுறுத்துகிறது. ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இறக்குமதியாளர்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்திருந்தாலும் இன்னும் விலை குறையுமா என்று தான் பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். ஸ்டேட் பாங்க் 8 சதவீதத்தில் கடன் அளிக்கிறேன் என்றாலும் அது முதல் ஆண்டுக்கு மட்டும் தான் என்பது ஒரு சிறிய குறை. ஆதலால், நீண்ட கால கடன் எடுப்பவர்கள் முடிவு எடுப்பதில் சிரமப்படுகின்றனர். வீடுகளை கட்டி வைத்துள்ள கம்பெனிகள் தள்ளுபடி செய்து விற்கவும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. டி.எல்.எப்., முதல் கட்டமாக டில்லி மற்றும் பெங்களூரில் சிறிது தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது கட்டுமானத் துறையை பலப்படுத்தப் போகிறதா என்று பார்க்க வேண்டும்.
தங்கமே தங்கமே: எல்லையே இல்லை என்ற அளவிற்கு ஏறிக்கொண்டு செல்கிறது. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், ஹெட்ஜ் பண்ட் போன்று எங்கு முதலீடு செய்தாலும் தற்போது பெரிய வருமானம் கிடைக்காது என்று சரியாக தெரிந்ததால் உலகளவில் தங்கம் மேல் அனைவரும் கண் வைத்திருக்கின்றனர். அது விலையைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.
திருமணத்திற்கு பெண் வைத்திருப்பவர்கள் அடிமடியில் பயத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டில் 25 சதவீதம் லாபத்தை தந்திருந்தாலும், சமீபகாலத்தில் 36 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது என்றால் ஆச்சரியமாக இல்லை? விலை உடனடியாகக் குறையாவிட்டாலும் சிறிது நாட்கள் கழித்து குறைய வாய்ப்பு உண்டு. இவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்கள் இருக்கின்றனர் என்றால் இல்லை அதிகமாக இல்லை என்று தான் கூறவேண்டும். அத்தியாவசியமாக வாங்கத் தான் வேண்டும் என்பவர்களும், வேறு முதலீட்டு வாய்ப்புகள் இல்லை என்பதால் முதலீடு செய்பவர்களும் செய்கின்றனர். ஆனால், கூடும் விலையால் தங்கம் இறக்குமதி மிகவும் குறைந்து விட்டது. முன்பெல்லாம் தங்கம் விலை கூடும் போதெல்லாம் வரிசையில் நின்று விற்பவர்களும் இருப்பார்கள். தற்போது அதுவும் குறைந்து விட்டது. இந்த ஆண்டு அரசு நிறைய கடன் வாங்க இருப்பதாக வந்த செய்திகளும் சந்தையை கீழே இறக்க ஒரு காரணமாக இருந்தது. அதாவது, அப்படி அரசு கடன் வாங்கும் போது அது தற்போது குறந்து வரும் வட்டி விகிதங்களை கூட்டி விடும். அந்த பயத்தினாலும் சந்தைகள் சிறிது சரிந்தன என்று கூறலாம். இப்போது அனைவரும் பிரார்த்திப்பது ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை தான். கட்டாயம் வரவேண்டும், அது தான் சந்தையை நிமிர்த்தும் என்பது பலருடைய எண்ணம்.
நன்றி : தினமலர்


Wednesday, February 18, 2009

100 கோடி ரூபாய்க்கு வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைகள்: விலை குறையும் பொருட்கள் எவை?

தமிழக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய்க்கு வரிவிலக்கு மற்றும் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பு: கடந்த மூன்று ஆண்டுகளில் மின் கட்டணமும், பஸ் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. கடந்த மூன்று பட்ஜெட்களில் பல பொருட்களின் மீதான விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிக்கு விலக்கு அளித்தும், வரியைக் குறைத்தும் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டிலும் அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில் வரி விலக்கு, வரி குறைப்புகள் செய்ய அரசு கருதியுள்ளது.
மதிப்புக் கூட்டு வரியில் பின்வரும் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன:
* மிளகு மற்றும் சீரகத்திற்கு விற்றுமுதல் நிபந்தனையுடன் வரிவிலக்கு அளிக்கப்படும்.
* பருப்பு, பயிறு மற்றும் பட்டாணிக்கு கொள்முதல் வரியிலிருந்து 1.1.2007 முதல் விலக்களிக்கப்படும்.
* கையால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டிக்கு தற் போது 12.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இப்பொருளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
* கையால் தயாரிக்கப்படும் தகர டின்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
* வணிகச் சின்னமிட்ட நெய், ஊறுகாய் மீது தற்போது விதிக்கப்படும் 12.5 சதவீத வரி 4 சதவீதமாக குறைக்கப்படும்.
* கையால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டகம், உலர்ந்த திராட்சை, சலவைத் தண்ணீர், இணைப்பான்களாக பயன்படுத்தப்படும் குண்டூசி, ஊக்கு, ஜெம் கிளிப், அடையாள அட்டை கிளிப், தேர்வு அட்டை கிளிப், ரப்பர் பேண்ட், ஸ்டேப்ளர் பின், ஐ-பாட், எம்.பி.,-3, எம்.பி.,-4 ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் 12.5 சதவீத வரி 4 சதவீதமாக குறைக்கப்படும்.
* சேலம் சேகோசெர்வ் மூலம் விற்கப்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மீதான வரி 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைத்து விதிக்கப்படும்.
ண செங்கல் உற்பத்தியாளர்கள் எளிய முறையில் வரி செலுத்த வசதியாக, செங்கல் சூளை அடுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
* வணிகர்கள் கோரிக்கையை ஏற்று, 1.4.2006 முதல் 31.12.2006 வரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத் தின் கீழ் உண்டான விற்பனைத் தொகையை சேர்த்து கணக்கிட்டு, மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் ஆண்டு மொத்த விற்பனைத் தொகைøயாகக் கருதி மதிப்புக் கூட்டு வரி விதிப்பு செய்யப்படும்.
* இது மேற்குறிப்பிட்ட காலத்தில் மதிப்புக் கூட்டு வரி வசூலித்த வணிகர்களுக்கு மட்டும் பொருந்தும். இதனால், 10 ஆயிரம் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயன்பெறுவர்.
* 'வாட்' வரி விதிப்பை எளிமைப்படுத்த, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 மற்றும் அதன் விதிகளில் தேவையான உரிய திருத்தங் கள் மேற்கொள்ளப்படும்.இது குறித்த விவரங்கள் வணிகவரித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படும். இந்த வரிவிலக்கு மற்றும் வரிக் குறைப்பு சலுகைகள் 1.4.2009ல் இருந்து அமல்படுத்தப்படும். இச்சலுகைகளால் அரசுக்கு 100 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும்.
நன்றி : தினமலர்


Tuesday, February 17, 2009

பங்கு சந்தையில் தொடர்ந்து சரிவு

பங்கு சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் பங்குகள் அதிக அளவில் விற்கும் போக்கு காணப்பட்டது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு இறங்கி விட்டது. நிப்டி 2,800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 600 புள்ளிகளையும் நிப்டி 175 புள்ளிகளையும் இழந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்டிபிசி, இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டி.சி.எஸ்., ஹெச்.டி.எப்.சி.பேங்க் போன்றவைகள் அதிகம் நஷ்டமடைந்திருக்கின்றன. இன்று மும்பை பங்கு சந்தையில் நிப்டி 270.45 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 9,035.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 78.00 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 2,770.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

புதுச்சேரி விமான நிலையம் செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகும் : குர்ஜார்

இந்த வருடம் மார்ச் மாதம் செயல்படுவதாக இருந்த புதுச்சேரி விமான நிலையம், செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கோவிந்த சிங் குர்ஜார் தெரிவித்தார். தற்போது கட்டப்பட்டு வரும் புதுச்சேரி விமான நிலையம், முன்பு போடப்பட்ட திட்டப்படி, வரும் மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட வேண்டும். ஆனால் அங்கு வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்று அவர் தெரிவித்தார். எதிர்பார்த்தபடி அங்கு வேலைகள் முடியாமல் இருக்கிறது என்றார் அவர். ரன்வேயை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்ன அவர், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்களை இயக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஆர்வமாக இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்