Sunday, September 14, 2008

சிறிய ரக கார்கள் உற்பத்தியில் சாதிக்கப் போகிறது இந்தியா

'சிறிய ரக கார்கள் உற்பத்தியில், 2013ம் ஆண்டில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும்' என, அமெரிக்காவைச் சேர்ந்த, 'குலோபல் இன்சைட்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம் கூறியுள்ளதாவது: வரும் 2013ம் ஆண்டில், சிறிய ரக கார்கள் உற்பத்தியில் இந்தியா பெரிய சாதனை படைக்கும். உலகில் தயாராகும் மொத்த கார்களில் 31 சதவீதம், அப்போது இந்தியாவில் உற்பத்தியாகும். தொழில்நுட்ப திறன், குறைவான செலவு, நிலையான பொருளாதாரம், சிறிய ரக கார்கள் உற்பத்திக்கு ஏற்ற அரசின் கொள்கைகள் உட்பட பல சாதகமான அம்சங்களால் இந்தியா இந்த நிலையை எட்டும். இந்தியாவில் கடந்த ஆண்டு 10 லட்சம் சிறிய ரக கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. உலக அளவில் சிறிய கார்கள் உற்பத்தி, 2013ம் ஆண்டில், 50 லட்சமாக அதிகரிக்கும். அப்போது, கார் உற்பத்தியில் 10வது இடத்தில் உள்ள இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும். சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும். மேலும், இந்தியாவிலிருந்து தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் சிறிய ரக கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2013ம் ஆண்டில், 10 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும். மேலும், ஆசியாவிலேயே சிறிய ரக கார்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். ஜப்பான், கொரியா, தாய்லாந்து மற்றும் சீனா போன்றவை இடம் பெற்றுள்ள பட்டியலில் இந்தியாவும் சேரும். இவ்வாறு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


இந்தியாவில் எதிரொலித்தது அமெரிக்க சந்தையின் வீழ்ச்சி

மூன்றாவது வாரமாக பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் 12.10 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. வியாழனன்று பேரலுக்கு 100 டாலருக்கு கீழேயும் வந்து பின்னர் சிறிது மேலே சென்றது. இருந்தாலும் சந்தை மேலே எழும்பவில்லை. காரணம் மறுபடியும் அமெரிக்காவில் நிறுவனங்கள் வங்கிகள் கொடுத்த கடன்களில் வராக்கடன் அதிகமாகிக்கொண்டே போவது தான்.
சமீபத்திய நிகழ்வான லேமென் பிரதர்ஸ் நஷ்டமான மூன்று பில்லியன் டாலர்கள் (அதாவது 12,000 கோடி அளவு) சந்தையையும் ஆட்டி பார்த்தது. அதே சமயம் அந்தக் கம்பெனியையும் ஆட்டிப் பார்த்தது.
உலகத்தின் மிகச்சிறந்த கம்பெனிகளில் ஒன்றாக கருதப்பட்ட லேமென் பிரதர்ஸ் நிலைமையே இப்படி இருக்கும் போது மற்ற அமெரிக்க கம்பெனிகளின் நிலைமை என்ன ஆகும்? உலகளவில் சந்தை வியாழன், வெள்ளி இரண்டு நாட்களாகவே விழுந்து வந்தது. குறிப்பாக அமெரிக்க சந்தைகளின் பாதிப்பு தான். அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக விழுந்து கொண்டிருக்கிறது. ஆதலால் வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 338 புள்ளிகளையும், வெள்ளியன்று 185 புள்ளிகளையும் இழந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 14138 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4228 புள்ளிகளுட னும் முடிவடைந்தது. 14,000 க்கும் கீழே செல்லாமல் இருப்பது தான் ஒரே ஆறுதல். வெள்ளியன்று காலையில் சந்தை அதிக புள்ளிகள் இழந்திருந்தது. இழந்த புள்ளிகளை திரும்பப் பெற்றது.
ஏன் சாப்ட்வேர் பங்குகள் வெள்ளியன்று மிகவும் கீழே விழுந்தது? : இந்தியாவில் டாலர் மதிப்பு கூடி ரூபாயின் மதிப்பு அதிவேகமாக ஒவ்வொரு தினமும் குறைந்து வரும் வேளையில் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு கொண்டாட்ட மாக தானே இருக்க வேண்டும். பின் ஏன் வெள்ளியன்று அதன் பங்குகள் கீழே விழுந்தன என்று பலர் புரியாமல் இருந்தனர். காரணம் என்னவென்றால் வியாழனன்று அமெரிக்காவில் ஏற்பட்ட அடியில் அங்கு பட்டியலிடப் பட்டிருந்த இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளின் அமெரிக்க டெபாசிட்டரி ரிசிப்ட்களின் விலைகள் குறைந்தன.
அதன் பாதிப்பு வெள்ளியன்று இந்தியாவிலும் இருந்தது. ஆதலால் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் இங்கு விழுந்தன. இதுவும் வெள்ளியன்று பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். திருவிழாக் காலங்களும், தங்கமும்
தீபாவளி என்றதும் கொண்டாட்டம் தான் ஞாபகம் வரும். அதிலும் குறிப்பாக பலரும் தங்கம் வாங்க முற்படுவர். தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவது ஒரு நல்ல செய்தி. எது வரை குறையும் என்று தெரியாததால் பலரும் தற்போது வாங்குவதா அல்லது சிறிது காத்திருப்பதா என்று யோசிக்கத்தொடங்கி உள்ளனர். இது போல சந்தைகளில் முடிவுகள் எடுப்பது கடினம். இருந்தாலும் தற்போது குறைந்து இருப்பதால் தேவையில் பாதியை வாங்குவது உத்தமம். பணவீக்க டேட்டா தற்போது வாரா வாரம் வரும் பணவீக்க சதவீதம் இனிமேல் மாதம் ஒரு முறை வெளியிடலமா என்று யோசனையில் அரசு இருந்து வருகிறது. மக்கள் வாரா வாரம் பயப்படாமல் மாதம் ஒரு முறை பயந்தால் போதுமா?
புதிய வெளியீடுகள் : செபியின் புதிய விதிகளின் படி வெளிவந்துள்ள முதல் புதிய வெளியீடான 20 மைக்ரான் புதனன்று மாலை வரை 42.9 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு கிட்டதட்ட 10 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் செபியின் புதிய விதிகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அப்ளை செய்துள்ளனர் என்றே கருத வேண்டும். சிறிய முதலீட்டாளர்கள் புதிய வெளியீடுகள் சந்தைக்கு திரும்பி வந்தது மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை. எல்லா நாடுகளிலும் சந்தை நிலைமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. பங்குசந்தையை பணம் காய்க்கும் மரமாக பார்த்தவர்கள், தற்போது அதை இலையுதிர் காலமாக பார்க்க வேண்டிய காலமாகிவிட்டது.
அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும்.
சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


Saturday, September 13, 2008

ரூ.24 ஆயிரம் கோடி காப்பீடு : 'இன்போசிஸ்' அறிவிப்பு

இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தனது ஊழியர்களுக்காக, ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 97 ஆயிரம் ஊழியர்களுக்காக, ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பிலான குழு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. எல்.ஐ.சி., மேலாண்மை இயக்குனர் தாமஸ் மாத்யூ கூறுகையில்,'குழு காப்பீட்டு திட்டங்களிலேயே மிக அதிக மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை இன்போசிஸ் அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக மதிப்பிலான காப்பீடு என்றும் இதைக் கூறலாம். இந்தியாவை பொறுத்தவரை இதனை அதிகமான தொகைக்கு குழு காப்பீட்டு திட்டங்களை வேறு எந்த நிறுவனமும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
நன்றி : தினமலர்


இன்றும் வீழ்ச்சியில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் பங்கு சந்தை வீழ்ச்சியைத்தான் சந்தித்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 323.48 புள்ளிகள் ( 2.26 சதவீதம் ) குறைந்து 14,000.81 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 61.85 புள்ளிகள் ( 1.44 சதவீதம் ) குறைந்து 4,228.45 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃராஸ்டரச்சர் - 6.33 சதவீதம், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் - 6.09 சதவீதம், ஐ சி ஐ சி ஐ பேங்க் - 4.92 சதவீதம், ஹெச்.டி.எப்.சி.பேங்க் - 3.84 சதவீதம், டி.எல்.எப். - 3.81 சதவீதம், ஹெச்.சி.எல்., டெக் - 3.76 சதவீதம் குறைந்திருந்தது. இருந்தாலும் மாருதி சுசுகி, பெல், ஹெச்.யு.எல்., பார்தி ஏர்டெல், பங்குகள் விலை உயர்ந்திருந்தன.
நன்றி ; தினமலர்


Friday, September 12, 2008

விலையை குறைக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக பேரலுக்கு 100 டாலரை ஒட்டியே இருந்து வரும் கச்சா எண்ணெய் விலை, கடந்த வியாழன் அன்று 98 டாலருக்கு கூட வந்தது. விலை குறைந்து வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்காக உடனடியாக இங்கு பெட்ரோலுக்கான விலையை குறைப்பதாக இல்லை என்றார் முரளி தியோரா. கச்சா எண்ணெய் விலை இதை விடவும் குறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பெட்ரோலிய துறை செயலர் பாண்டே தெரிவித்தார். சர்வதேச சந்தையில் பேரலுக்கு 147 டாலர் வரை இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒன்றரை மாதங்களாக குறைந்துகொண்டே வந்து இப்போது 100 டாலரை ஒட்டி இருக்கிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை சராசரியாக 95.47 டாலராக இருக்கிறது. இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்றார் பாண்டே. கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு முன் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அது இப்போது ரூ.400 கோடியாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பிரன்ட் குரூட் ஆயில் விலை 100 டாலருக்கும் கீழே போனது

அமெரிக்காவில் அதிகம் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியான மெக்ஸிகோ வளைகுடாவை, ஐக் என்ற சூறாவளி தாக்கும் அபாயம் இருந்த போதிலும் லண்டணின் ஐ.சி.இ., பியூச்சர் யூரோப் எக்ஸ்சேஞ்சில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே சென்றிருக்கிறது. நேற்று வியாழக்கிழமை பிரன்ட் குரூட் ஆயில் விலை 1.17 டாலர் ( அல்லது 1.2 சதவீதம் ) குறைந்து 97.80 டாலராக இருந்தது. கடந்த மார்ச் 5 ம் தேதிக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு விலை குறைந்திருக்கிறது. இதே பிரன்ட் குரூட் ஆயில் விலை நியுயார்க் மெர்க்கன்டைல் சந்தையில் 1.73 டாலர் குறைந்து 100.85 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்தது

ஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 12.34 சதவீதமாக இருந்தது. 0.24 சதவீதம் குறைந்திருக்கிறது.மூன்றாவது வாரமாக பணவீக்கம் குறைந்திருந்தாலும் முக்கிய 30 பொருட்களின் விலை கூடித்தான் இருக்கிறது என்று நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் உள்பட சில உணவுப் பொருட்கள், மக்காசோளம், வாசனை திரவியங்கள், பழங்கள் போன்றவற்றின் விலை குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்