சமீபத்திய நிகழ்வான லேமென் பிரதர்ஸ் நஷ்டமான மூன்று பில்லியன் டாலர்கள் (அதாவது 12,000 கோடி அளவு) சந்தையையும் ஆட்டி பார்த்தது. அதே சமயம் அந்தக் கம்பெனியையும் ஆட்டிப் பார்த்தது.
உலகத்தின் மிகச்சிறந்த கம்பெனிகளில் ஒன்றாக கருதப்பட்ட லேமென் பிரதர்ஸ் நிலைமையே இப்படி இருக்கும் போது மற்ற அமெரிக்க கம்பெனிகளின் நிலைமை என்ன ஆகும்? உலகளவில் சந்தை வியாழன், வெள்ளி இரண்டு நாட்களாகவே விழுந்து வந்தது. குறிப்பாக அமெரிக்க சந்தைகளின் பாதிப்பு தான். அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக விழுந்து கொண்டிருக்கிறது. ஆதலால் வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 338 புள்ளிகளையும், வெள்ளியன்று 185 புள்ளிகளையும் இழந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 14138 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4228 புள்ளிகளுட னும் முடிவடைந்தது. 14,000 க்கும் கீழே செல்லாமல் இருப்பது தான் ஒரே ஆறுதல். வெள்ளியன்று காலையில் சந்தை அதிக புள்ளிகள் இழந்திருந்தது. இழந்த புள்ளிகளை திரும்பப் பெற்றது.
ஏன் சாப்ட்வேர் பங்குகள் வெள்ளியன்று மிகவும் கீழே விழுந்தது? : இந்தியாவில் டாலர் மதிப்பு கூடி ரூபாயின் மதிப்பு அதிவேகமாக ஒவ்வொரு தினமும் குறைந்து வரும் வேளையில் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு கொண்டாட்ட மாக தானே இருக்க வேண்டும். பின் ஏன் வெள்ளியன்று அதன் பங்குகள் கீழே விழுந்தன என்று பலர் புரியாமல் இருந்தனர். காரணம் என்னவென்றால் வியாழனன்று அமெரிக்காவில் ஏற்பட்ட அடியில் அங்கு பட்டியலிடப் பட்டிருந்த இந்திய சாப்ட்வேர் கம்பெனிகளின் அமெரிக்க டெபாசிட்டரி ரிசிப்ட்களின் விலைகள் குறைந்தன.
அதன் பாதிப்பு வெள்ளியன்று இந்தியாவிலும் இருந்தது. ஆதலால் சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் இங்கு விழுந்தன. இதுவும் வெள்ளியன்று பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். திருவிழாக் காலங்களும், தங்கமும்
தீபாவளி என்றதும் கொண்டாட்டம் தான் ஞாபகம் வரும். அதிலும் குறிப்பாக பலரும் தங்கம் வாங்க முற்படுவர். தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவது ஒரு நல்ல செய்தி. எது வரை குறையும் என்று தெரியாததால் பலரும் தற்போது வாங்குவதா அல்லது சிறிது காத்திருப்பதா என்று யோசிக்கத்தொடங்கி உள்ளனர். இது போல சந்தைகளில் முடிவுகள் எடுப்பது கடினம். இருந்தாலும் தற்போது குறைந்து இருப்பதால் தேவையில் பாதியை வாங்குவது உத்தமம். பணவீக்க டேட்டா தற்போது வாரா வாரம் வரும் பணவீக்க சதவீதம் இனிமேல் மாதம் ஒரு முறை வெளியிடலமா என்று யோசனையில் அரசு இருந்து வருகிறது. மக்கள் வாரா வாரம் பயப்படாமல் மாதம் ஒரு முறை பயந்தால் போதுமா?
புதிய வெளியீடுகள் : செபியின் புதிய விதிகளின் படி வெளிவந்துள்ள முதல் புதிய வெளியீடான 20 மைக்ரான் புதனன்று மாலை வரை 42.9 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு கிட்டதட்ட 10 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் செபியின் புதிய விதிகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அப்ளை செய்துள்ளனர் என்றே கருத வேண்டும். சிறிய முதலீட்டாளர்கள் புதிய வெளியீடுகள் சந்தைக்கு திரும்பி வந்தது மகிழ்ச்சியான செய்தி ஆகும்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை. எல்லா நாடுகளிலும் சந்தை நிலைமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. பங்குசந்தையை பணம் காய்க்கும் மரமாக பார்த்தவர்கள், தற்போது அதை இலையுதிர் காலமாக பார்க்க வேண்டிய காலமாகிவிட்டது.
அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும்.
சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment