Saturday, January 2, 2010

நான்கு நகரங்களில் 3ஜி செல்போன் சேவை அறிமுகம்

கோவை, ஊட்டி, நாகை, குன்னூர் உள்ளிட்ட 4 நகரங்களில் பொங்கல் பண்டிகைக்குள் மூன்றாம் தலைமுறை(3ஜி) செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செல்போனில் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட 3ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை 2009ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். கடந்த நவம்பர் 20ல் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வந்தது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இச்சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் கீழ் வரும் இதர மாவட்டங்களிலும் இச்சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக கோவை, ஊட்டி, குன்னூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் பொங்கலுக்குள் அறிமுகம் செய்யப்படும் எனவும், அறிமுக விழா கோவையில் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நகரங்களை தவிர வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3ஜி செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஓசூர், கன்னியாகுமரி போன்ற தொழில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 15 நகரங்களிலும் 3ஜி சேவை அறிமுகம் ஆகிறது. அதற்கான கட்டமைப்பு பணிகளை சீனாவின் ஹுவாய் நிறுவனம் செய்து வருகிறது.
நன்றி : தினமலர்


வாசனை திரவியமாகும் திமிங்கலத்தின் எச்சம்: கிலோ ரூ.பல லட்சத்துக்கு விற்பனை

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது. வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும். அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். இதை ஆங்கிலத்தில் 'அம்பர்கிரிஸ் 'என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும். இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.
நன்றி : தினமலர்


Friday, January 1, 2010

ஆன்-லைன் சர்க்கரை வர்த்தக தடை தொடர்வதால் விலை குறையுமா?

சர்க்கரையின் விலை, ஒவ்வொரு 100 கி.கி.,க்கும் 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்து கொண்டே போகிறது. சர்க்கரையின் இத்தகைய விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்-லைன் வர்த்தக தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை 36 ரூபாயாக அதிகரித்த போது, கடந்த மே மாதம் 26ம் தேதி, சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்நிலையில், சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து முன்னணி வர்த்தக கமிஷன் தலைவர் பி.சி.கதுவா கூறியதாவது: தற்போதைய பயிர் சூழ்நிலையை ஆய்வு செய்ததில், சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்தை மீண்டும் துவக்குவது ஏற்றதல்ல என, கருதப்பட்டது. எனவே, சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பி.சி.கதுவா கூறினார். இதற்கிடையில், ஜனவரி மாதத்திற்காக, அரசு 14.30 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை வெளியிட்டுள்ளது. லெவி என்ற வரியில்லா சர்க்கரை, ஆலை உரிமையாளர்கள் மூலம் சந்தையில் விற்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆலையும் விற்கும் சர்க்கரையின் அளவை, மாத அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும். அந்த அடிப்படையில் டிசம்பர் மாதம், 13.92 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை அரசு வெளியிட்டது. ஆனால் கரும்பு உற்பத்தி அளவு குறைந்ததாலும், சர்க்கரை உற்பத்தி அளவு குறைந்திருப்பதாலும், அடுத்த சில மாதங்களுக்கு இரண்டு ரூபாய் வரை கிலோவுக்கு ஏற்றம் அல்லது இறக்கம் தொடரும்; விலை முன்பு போல குறையாது என்று மும்பையில் சர்க்கரை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


வலையுலகப் படைப்பாளிகள்!

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.

உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.

நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.

நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.

வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.

÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
கட்டுரையாளர் : எம். மணிகண்டன்
நன்றி : தினமணி

Thursday, December 31, 2009

புதிய முறையில் பணவீக்க விகிதம்

பணவீக்க விகிதம் விலைவாசியைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என்று சொல்லுவார்கள் . இது எந்த அளவு உண்மை?

கடந்த அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதேபோல், பணவீக்க விகிதத்தை அறிவிக்கும் கால அட்டவணையையும் மாற்றியுள்ளது. இதன்படி, உணவுப் பொருள்களின் விலைகள் அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்கிடும் நடைமுறை இந்தியாவில் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முறைப்படி, டிசம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க
விகிதம் 18.65 சதவீதமாக இருந்தது. புதிய முறை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், கடந்த பல மாதங்களாக உணவுப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்திருப்பது, பணவீக்க விகிதத்தில் பிரதிபலித்திருக்குமா என்பது சந்தேகமே!

மத்திய அரசு செய்துள்ள மாற்றம் என்ன? எல்லா பொருள்களின் மொத்த விலையின் அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட்டு, அதை அரசு வாராவாரம் அறிவித்துக் கொண்டிருந்தது. அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தை மாதம் ஒருமுறை அறிவிக்கிறது. இது ஒரு மாற்றம்.

இரண்டாவது மற்றும் முக்கியமான மாற்றம் என்னவெனில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைப் பொருள்களின் மொத்த விலை அடிப்படையில், பணவீக்க விகிதம் வாரம்தோறும் அறிவிக்கப்படுகிறது.

முன்னதாக என்ன நடந்தது என்றால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம், தனியாகத் தெரியாமல், அது பல்வேறு பொருள்களின் விலை ஏற்றத்தில் இரண்டறக் கலந்து மூழ்கிப் போனது.

புதிய மாற்றத்தினால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் இனி தனியாக, தெளிவாகத் தெரிய வழி பிறந்துள்ளது. அந்தவகையில், புதிய மாற்றம் வரவேற்கப்பட வேண்டும். அதேநேரம், ""மொத்தவிலை அடிப்படையே'' தொடர்கிறது என்பதால் ஏமாற்றம் ஏற்படுகிறது.

உலகில் பெரும்பான்மையான நாடுகள் மொத்த விலையிலிருந்து மாறி சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிடத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இன்னமும் மொத்த விலை அடிப்படையில்தான் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது.

மக்கள் பொருள்களை வாங்குவது சில்லறை விலையில் தானே? சில்லறை விலையில் எப்போதுமே விலை கூடுதல்தான்! ஆகையால்தான், பணவீக்க விகிதம் குறைந்துள்ள காலங்களில்கூட, சந்தையில் விலைகள் குறையவில்லையே, ஏன்? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இதனால் அரசு சார்ந்த புள்ளிவிவரம் என்றாலே, மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.

இதுபோதாது என்பதுபோல், இந்தியாவில் வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையில் கணக்கிடும்போதுகூட, நான்கு வகையில் கணக்கிடப்படுகின்றன.

உதாரணமாக, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு விதம்; கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேறு விதம் - எனப் பல விதங்களில் கணக்கிடுகிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடுகையில், உணவுப் பொருள்களுக்கு 69.2 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடும்போது, உணவுப் பொருள்களுக்கு 66.8 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது.

அதாவது, 100-ல் 69.2 பங்குகள்; 100-ல் 66.8 பங்குகள் உணவுப் பண்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

இப்படி பல வகையில் கணக்கிடப்படும் வழிமுறைகளில், மொத்த விலையில் கணக்கிடப்பட்டு வந்த வழிமுறையை மட்டும் தான் தற்போது மேலே கூறிய வகையில் மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

÷இந்த மாற்றத்தின் பயனாக ஓரளவு தெளிவு ஏற்பட்டிருந்தாலும், முழுமையான தெளிவு ஏற்பட வேண்டும் எனில், மேலும் சில மாற்றங்கள் தேவை.

தற்போதைய வழிமுறைகள் 1942-ம் ஆண்டு முதல் ஏறக்குறைய அதே வடிவில் தொடர்கின்றன.

தற்போதைய முதல் தேவை, மொத்த விலையில் அல்லாமல் சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட வேண்டும்.

உலகில் பல நாடுகளுக்கு இது சாத்தியம் என்றால் இந்தியாவுக்கும் அது சாத்தியமே. பாரத ரிசர்வ் வங்கி இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, பொருள்களை வகைப்படுத்துவதிலும், அவற்றுக்கு வழங்கும் "வெயிட்டேஜ்'லும் சீர்திருத்தம் தேவை. விலைவாசிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று, அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 உணவுப் பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 22 சதவீத "வெயிட்டேஜ்' பெறுகின்றன. அதாவது 100-ல் 22 பங்குகள் உணவுப் பண்டங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.

இரண்டாவதாக, பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 14 சதவீத "வெயிட்டேஜ்' அல்லது பங்குகள் பெறுகின்றன.

மூன்றாவதாக, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் 318 பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 64 பங்குகள் பெறுகின்றன.

இவ்வாறு மக்களால் பயன்படுத்தப்படும் 435 பொருள்களின் விலைகளைக் கணக்கெடுத்து மொத்த விலைவாசி பற்றிய விவரம் கணக்கிடப்படுகிறது.

இதற்கு அடிப்படை ஆண்டு என 1993-94-ம் ஆண்டு கருதப்படுகிறது. அந்த ஆண்டு என்ன விலைவாசி நிலவரமோ அதை 100 என வைத்துக்கொண்டு, தற்போதைய விலைவாசி ஏற்ற, இறக்கம் கணக்கிடப்படுகிறது.

ஓராண்டு காலத்தில் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை அந்த ஆண்டின் பணவீக்கத்தின் அளவுகோலாக வைக்கிறார்கள்.

தற்போது புதிய முறைப்படி, உணவுப் பண்டங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இணைத்து அவற்றின் பணவீக்க விகிதத்தை மொத்த விலை அடிப்படையில் வாராவாரம் அறிவிக்கிறார்கள். தொழிற்கூடங்களில் தயாரிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பணவீக்கத்தை, மொத்த விலைகளின் அடிப்படையில், மாதாமாதம் அறிவிக்கிறார்கள்.

உணவுப் பண்டங்களுக்கு தற்போது தரப்படும் 22 பங்குகள் (வெயிட்டேஜ்) மிகவும் குறைவு. இது கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைநிலை பிரதிபலிக்கும்.

அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் வேகமாக மாறி உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, தற்போதுள்ள 98 உணவுப் பொருள்களை மறு ஆய்வு செய்து, மாறியு ள்ள சூழலுக்கு ஏற்பத் திருத்தி அமைக்க வேண்டும்.

ஆக, மொத்த விலை அடிப்படையிலிருந்து சில்லறை விலைகள் அடிப்படைக்கு மாறுவது; உணவுப் பொருள்களுக்கு கூடுதல் "வெயிட்டேஜ்' வழங்குவது மற்றும் உணவுப் பொருள்களின் பட்டியலில் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது ஆகிய மூன்று அம்சங்களிலும் ஒரே நேரத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டால்தான், பணவீக்க விகிதம் விலைவாசியின் நிலைக்கண்ணாடியாக அமையும்; அத்துடன் அரசின் புள்ளிவிவரங்களில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி


உணவு பணவீக்கம் 19.83%ஆக அதிகரிப்பு

டிசம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 19.83 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் மற்றும் உருளைகிழக்கின் விலை அதிகரித்து இருப்பதே, பணவீக்க உயர்விற்கு காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில்(கடைசியாக) உணவுப் பொருளுக்கான பணவீக்கம் 18.65 சதவீதமாக இருந்தது.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் உருளைக்கிழங்கின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது, பருப்பு வகைகளின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 40.75 சதவீதமும், காய்கறிகளின் விலை 46.7 சதவீதமும் அதிகரித்துள்ளன. அரிசி விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருள் அல்லாத ரப்பர் மூலப்பொருள் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
நன்றி : தினமலர்

பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவு பொருட்கள் விலை உயர்வு : பிரபல நிறுவனங்கள் முடிவு

சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால், பிரபல நிறுவனங்களின் பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்த, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி.,) தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே மற்றும் குஜராத்

கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எப்.,) போன்றவை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. உணவுப் பொருட்கள் பணவீக்கம் கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவாக, தற்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க பிரிட்டானியா நிறுவனம், தங்கள் தயாரிப்பு பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப்பொருட்களின் விலையை, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், பார்லே நிறுவனம், 'பார்லி ஜி' (88 கிராமின்) விலையை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேபோன்று பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து,

அமுல் நிறுவனம், தயாரிப்புகளின் விலையை பிரிவு வாரியாக 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மற்றொரு பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., அடுத்த இரண்டு வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இத்துறையில் உள்ள பிற பெரிய நிறுவனங்கள், தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி

கூறுகையில், 'எங்களின் அனைத்து பிராண்டுகளின் விலையையும், 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சமீபத்தில் அதிகரித்துள்ளோம். நாங்கள் லாபகரமான வளர்ச்சியையே எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இதுகுறித்து, குஜராத் கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, தயாரிப்புகளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். 100 கிராம் வெண்ணெயின் விலையை 23 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளோம். சமீபத்தில், எங்கள் அனைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனினும், 'தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை' என, டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்