Friday, January 1, 2010

ஆன்-லைன் சர்க்கரை வர்த்தக தடை தொடர்வதால் விலை குறையுமா?

சர்க்கரையின் விலை, ஒவ்வொரு 100 கி.கி.,க்கும் 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்து கொண்டே போகிறது. சர்க்கரையின் இத்தகைய விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்-லைன் வர்த்தக தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை 36 ரூபாயாக அதிகரித்த போது, கடந்த மே மாதம் 26ம் தேதி, சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்நிலையில், சர்க்கரையின் ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடையை வரும் செப்டம்பர் மாதம் வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து முன்னணி வர்த்தக கமிஷன் தலைவர் பி.சி.கதுவா கூறியதாவது: தற்போதைய பயிர் சூழ்நிலையை ஆய்வு செய்ததில், சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்தை மீண்டும் துவக்குவது ஏற்றதல்ல என, கருதப்பட்டது. எனவே, சர்க்கரை ஆன்-லைன் வர்த்தகத்திற்கான தடை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பி.சி.கதுவா கூறினார். இதற்கிடையில், ஜனவரி மாதத்திற்காக, அரசு 14.30 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை வெளியிட்டுள்ளது. லெவி என்ற வரியில்லா சர்க்கரை, ஆலை உரிமையாளர்கள் மூலம் சந்தையில் விற்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆலையும் விற்கும் சர்க்கரையின் அளவை, மாத அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும். அந்த அடிப்படையில் டிசம்பர் மாதம், 13.92 லட்சம் டன் வரியில்லா சர்க்கரையை அரசு வெளியிட்டது. ஆனால் கரும்பு உற்பத்தி அளவு குறைந்ததாலும், சர்க்கரை உற்பத்தி அளவு குறைந்திருப்பதாலும், அடுத்த சில மாதங்களுக்கு இரண்டு ரூபாய் வரை கிலோவுக்கு ஏற்றம் அல்லது இறக்கம் தொடரும்; விலை முன்பு போல குறையாது என்று மும்பையில் சர்க்கரை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


No comments: