Thursday, December 24, 2009

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு

அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப் பது குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், அவைகள் விலை அதிகரிக்கும் . இந்த கூட்டத்தில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ்.பாரீக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோலியத் துறை குறிப்பாக அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆராய, இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களை கொடுக்காததால், இரண்டாவது காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கேட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.49 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.38 ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தொடர்பாக அரசின் விலை நிர்ணய கொள்கை குறித்து ஆய்வு செய்த குழு, அடுத்த மாதம் இறுதியில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


Wednesday, December 23, 2009

தொல்பொருள் தொலைநோக்கு!

சென்னை அண்ணா சாலையில் உள்ள கார்டைல் பில்டிங் ​(இப்போது பாரத் இன்சூரன்ஸ் பில்டிங்)​ ​ என்ற பழைமையான கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று ""பண்பாடு கலாசாரம் கட்டடங்கள் பாதுகாப்புக்கான இந்திய தேசிய அறநிலை ​(இன்டாக்)'' தொடர்ந்த வழக்கில்,​​ மூன்று மாதத்திற்குள் பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.​ இதுவரையிலும் தமிழ்நாட்டில் பண்பாட்டுச் சின்னப் ​ பாதுகாப்புக் ​ குழு இல்லை என்பதே வியப்பான விஷயம்.

நாட்டில் முக்கியமான பண்பாட்டுச் சின்னங்கள் இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.​ அதற்கு அடுத்த நிலையில் உள்ள சின்னங்கள் மாநில அரசின் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளன.​ இவை நீங்கலாக,​​ தனியாரிடத்திலும் அரசின் சொத்தாகவும் நிறைய பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெறாததால் அவரவர் பராமரிப்பில் நீடித்து வருகின்றன.​ ​ இதற்கு உதாரணமாக நிறைய சொல்ல முடியும்.​ சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மன்றோ சிலை போன்ற அக்காலத்துச் சிலைகள்,​​ சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் பில்டிங்,​​ சென்னை மாநிலக் கல்லூரியின் செனட் ஹால்,​​ சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்நிலையக் கட்டடங்கள்,​​ பல ஊர்களிலும் காணப்படும் மணிக்கூண்டுகள்,​​ டவுன்ஹால் கட்டடங்கள் என பலவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சென்னை ஸ்பென்சரும்,​​ மூர் மார்க்கெட்டும்கூட அற்புதமான பண்பாட்டுச் சின்னங்கள்தான்.​ ஆனால் அந்தக் கட்டடங்கள் இரண்டுமே-​ மாய யதார்த்த கதைகளில் வரும் குணச்சித்திரங்கள் போல-​ ஏதோ ஓர் ஏக்கத்தில் யாருமே அறியாத காரணங்களுக்காக தங்களைத் தாங்களே தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டன.​ ​(அதை வேறு எப்படிச் சொல்வது?)

தனியார் உடைமை என்றாலும் அரசின் சொத்து என்றாலும் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகளை வெளிநாட்டினருக்கு விற்க முடியாது.​ ஏனென்றால்,​​ அவை பழமைப்பொருள் சட்ட திட்டங்களுக்குள் வந்து விடுவதால்,​​ சொந்த உடைமை என்று உரிமை கோரலாமே தவிர,​​ அதை வேறு யாருக்கும் விற்க முடியாது.​ இதேபோன்று நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கும் முன்பாக தொல்பொருள் துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.​ ​ இத்தகைய கட்டடங்கள் தனித்தன்மை வாய்ந்தவை அல்ல,​​ அதேபோன்ற,​​ அதைவிடவும் சிறப்பான கட்டடங்கள் நாட்டில் இருக்கின்றன என்று தொல்பொருள் துறை கருதினால் மட்டுமே,​​ அந்தக் கட்டடம் இடிக்கப்படுவதில் ஆட்சேபணை இல்லை என்று சான்று தரப்படுகிறது என தொல்பொருள் துறையினர் கூறினாலும்,​​ நடைமுறையில் இது ​ இல்லை.​ ​

ஒரு கட்டடத்தின் அமைப்பும்,​​ கலையுணர்வும்,​​ தொழில்நுட்பமும் காலத்தைப் பிரதிபலிப்பவை.​ ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பாணி ​(ஸ்டைல்)​ அல்லது மோஸ்தர் இருக்கிறது.​ அதைக் கொண்டு அது எந்த ஆண்டுக்குரியது என்பதை எளிதில் காணவும்,​​ அதன் கலை நுட்பத்தை ரசிக்கவும் முடியும்.​ ஆனால்,​​ அந்த கட்டடங்களை இடித்துவிட்டு,​​ நவீன காலத்துக்கேற்ப புதிய பல அடுக்கு மாடிக் கட்டடத்தை உருவாக்கி,​​ நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்பதே பிரதான நோக்கமாக மாறும்போது,​​ பண்பாட்டுச் சின்னம் என்ற உணர்வே இல்லாமல் போகிறது.​ பழைய கட்டடங்கள் நகரின் மையப்பகுதியில் இடத்தை அடைத்துக்கொண்டு நிற்பதாக நினைக்கிறார்கள்.​ வாதிடுகிறார்கள்.​ இடித்துவிடத் துடிக்கிறார்கள்.​ மற்ற நாடுகளிலோ பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.​ அதற்காக நிதி ஒதுக்குகிறார்கள்.

தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பண்பாட்டுச் சின்னங்களைக்கூட நம்மைப்போல அலட்சியமாகப் பராமரிப்போர் வேறு யாரும் இருக்க முடியாது.​ தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயில்,​​ கங்கைகொண்ட சோழபுரம்,​​ தாராசுரம் போன்ற கோயில்கள் வேண்டுமானால் அதிக அக்கறையுடன் நன்கு பராமரிக்கப்படலாம்.​ அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்மரம் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது?​ அல்லது,​​ திருச்சி நகரின் நடுவே இருக்கும் மெயின்கார்டு கேட் எந்த அளவுக்குப் பராமரிக்கப்படுகிறது?

ஒரு பண்பாட்டுச் சின்னத்தைச் சுற்றிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.​ 200 மீட்டர் தொலைவுக்குத் தேவையில்லாமல் ஆக்கிரமிப்புகள் இருக்கக்கூடாது என்று சட்டம் சொன்னாலும்,​​ மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள கடைகளை அகற்றவே முடியவில்லை.​ இன்றுவரையிலும்.​ அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கே இந்த நிலைமை என்றால் பட்டியலில் இடம்பெறாத பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை.​ ​

அண்ணா,​​ பெரியார்,​​ ராஜாஜி போன்ற தலைவர்கள் மற்றும் மகாகவி பாரதியார்,​​ வஉசி போன்றோர் வாழ்ந்த இல்லங்களும்,​​ சிறையில் வஉசி இழுத்த செக்கும்,​​ ​ காந்தியின் கடிதங்களும் அவர்களின் ஆளுமையை மீட்டெடுக்க உதவுவதைப் போலவே,​​ கட்டடங்களும் சிலைகளும் சிற்பங்களும் அவை உருவான காலத்தையும் கலையையும் மீட்டெடுக்க உதவுகின்றன.​ ​

தமிழக அரசு அமைக்கவுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புக் குழு,​​ மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராத,​​ ஆனால் பழமை மற்றும் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கட்டடங்கள்,​​ ஓவியங்கள்,​​ சிலைகள்,​​ மரச்சிற்பங்கள்,​​ தேர்கள் போன்ற எவையெல்லாம் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடவும்,​​ இவற்றை இடித்தல் அல்லது விற்பனை செய்தல் போன்றவை பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புக் குழுவின் தடையில்லாச் சான்று பெறாமல் நடத்த முடியாது என்ற நிலைமையும் தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும்.

இதுபோன்ற குழுக்களில் பண்பாட்டுச் சின்னங்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையே இல்லாத அதிகாரிகளும்,​​ ஆளும் கட்சிக்கு வேண்டிய அல்லது சார்ந்தவர்களும் மட்டுமே இடம்பெறுவார்களேயானால்,​​ அப்படி ஒரு குழு அமைத்தும் பயனில்லை.​ தகுதியானவர்களைத் தரம் கண்டு தேர்ந்தெடுத்து குழு அமைக்கப்பட்டால் மட்டுமே பண்பாட்டுச் சின்னப் பாதுகாப்புக் குழுவுக்கு அர்த்தமிருக்கும்!
நன்றி : தினமணி

சூழல் மாறும்; செயல்படுவோம்!

இனவிடுதலைக்காகவும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடியவர்கள் எல்லோரும் அவர்களது வாழ்நாளிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மையான போராளிகள் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அதுவும் ஆயுதப் போராட்டம் என்றால், வாழும் காலத்தில் இலக்கை எட்டும் வாய்ப்பு மிகவும் அரிது. அப்படிப்பட்டதொரு நிலைதான் ஈழத்துக்காகப் போராடியவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போராட்டம் முடிந்து போனதற்கான அடையாளம் இல்லை. சமகால ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம் அவ்வளவுதான்.

÷விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதால், ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைக் காட்டி, போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிடம் நிரந்தரமானதல்ல என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் இலங்கை அரசுக்கே கூட அந்த அச்ச உணர்வு உண்டு. ஆனால் எந்த வகையான போராட்டம் இனி தொடரப்போகிறது? போராட்டத்துக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பன போன்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழ் பேசும் அனைவரிடமும் இருக்கிறது.

÷எப்படியும் விடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் காத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம்.

÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் உச்ச நாள்களில் நடந்த மர்மங்களே இன்று வரைக்கும் விலகாத நிலையில், நாள்தோறும் புதிய கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் தார்மிக ரீதியாகத் தமிழர்களுக்கு ஆதரவானவை போன்று தோன்றினாலும், இன விடுதலைக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் பணியைத்தான் அவை செய்கின்றன. தமிழர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

÷போராட்டக்காரர்கள் பிரிந்து கிடப்பதாகவும், சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசியவிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் என்று கூறி வருபவர்களை யாரும் நம்ப வேண்டாம் அவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என்பன போன்ற அறிவுரைகளும் நடமாடுகின்றன. சில ஊடகங்கள் ஒரு தரப்பை நல்லவர்களாகவும், மற்றவர்களை மோசக்காரர்களாகவும் காட்டுகின்றன.

÷ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள், இன்று துரோகிகளாகவும், இலங்கை அரசின் கைப்பாவைகளாகவும் மாறி இருக்கிறார்கள். ராணுவத்துக்குத் தலைமையேற்று பயங்கரமான சித்திரவதைக் கொலைகளை அரங்கேற்றியவர்கள் ஆபத்பாந்தவர்களாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்கள். மக்களைக் குழப்புவதற்காக நடத்தப்படும் இந்த ராஜதந்திர விளையாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளும் சிலரின் பேனாக்களும்கூட சிக்கிக் கொண்டிருக்கின்றன.

÷இந்தக் குழப்பமான சூழலைக் கண்டு தமிழர்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. உலகின் எல்லா வகையான விடுதலைப் போராட்டங்களிலும் வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்குக்கூட இது பொருந்தும். ஈழத் தமிழர் போராட்டம் அடுத்த நிலைக்கு உருமாற வேண்டிய நேரம் இது. அரசியல் ரீதியாகவோ வேறு வழியிலோ ஒரு சீரிய தலைமையின்கீழ் தமிழர்கள் ஒன்றுபடும்வரை இந்தக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

÷ஆனால், ஈழத்திலும் அது தொடர்பாக உலகமெங்கும் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு கருத்து மோதல்களையும் அலசி ஆராய்ந்து, அவசரப்பட்டு ஒவ்வொருவரையும் துரோகிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் முத்திரை குத்துவது, புதிய தலைமை உருவாவதைத் தாமதப்படுத்துவதற்குத்தான் உதவும். இந்த விஷயத்தில் புலனாய்வு செய்வது இப்போதைக்கு அவசியமே இல்லை. ஊகங்களை வெளியிடுவதையும், கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவதையும், தவிர்த்தாலே, போராட்டம் அடுத்தகட்டத்துக்கு விரைவாக முன்னேறும்.

÷அதிபர் தேர்தல் சமீபித்திருக்கும் இந்த வேளையில், பொன்சேகாவுக்கு சில தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சில கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. இதில் எது தவறு, எது சரியென்று கூறுவதற்கில்லை.

÷தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் இப்போது நமக்குத் தெரியாது. நல்லதும் நடக்கலாம், தீயதும் நடக்கலாம். இந்தச் சூழலில் தமிழ்க்கட்சிகளை தமிழர் ஆதரவு ஊடகங்களும் உலகெங்கும் வசிக்கும் போராட்டக்காரர்களும் விமர்சிப்பது, தமிழர்களுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும். ஒன்றுபடுவதைத் தாமதப்படுத்தும். எல்லோரும் தங்களது பொறுப்புணர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை இப்போது தவிர்க்கலாம்.

÷சொந்த மண்ணில் முள்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களை, மறு குடியமர்த்தும் பணிகளை வலியுறுத்துவது ஒன்றே தமிழ் அரசியல்கட்சிகளும் போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோரும் இப்போதைக்குச் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். மற்ற வேலைகளைப் பிறகு பார்க்கலாம். சூழல் மாறும்.
கட்டுரையாளர் : எம்.மணிகண்டன்
நன்றி : தினமணி

புதிய வருமான வரி பூதம்: சம்பளத்தை தாண்டி பெறப்படும் எல்லாவற்றுக்கும் வரி; வாடகை முதல் குட்டீஸ் கல்விச் சலுகை வரை பிடிப்பு

மாதச் சம்பளம் வாங்குவோர் தலையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வருமான வரி 'இடி' விழுந்துள்ளது. ஆம்! சம்பளத்தில் பெறும் வாடகைப்படி, கார், பைக் சலுகை போன்ற சலுகைகளுக்கும் வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பளத்தில், அடிப்படை சம் பளம் , அகவிலைப்படி மட்டும் அல்ல, உதிரிச் சலுகைகள் என்பது தகவல் தொழில்நுட்ப கம் பெனிகள் வருகைக்குப் பின் அதிகரித்தன. இம்மாதிரி சலுகைகள் தருவதற்கு வரிவிலக்கு இருந் தது. ஆனால், உடனடியாக இதன் மீதான நேரடி வரிவிதிப்பு அமலாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகபட்சம் சம்பளம் பெறுபவராக இருந்தால், சம்பளத்தில் 31 சதவீதம் வரை வரியாக கட்ட நேரிடும்.

இந்த புதிய வருமானவரி 'பூதம்' திடீரென இப்போது ஓசைப் படாமல் நுழைந்து விட்டது. கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்தே முன்தேதியிட்டு வரி பிடித்தம் செய்ய, வருமான வரித் துறை உத்தரவிட்டு விட்டதால், ஒராண்டு முழுக்க போடப்படும் வரியை, வரும் மூன்றே மாதங்களில் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கம்பெனிகளுக்கு இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் அனுப்பி விட் டது. மூன்று மாத சம்பளத்தொகையில் ஓராண்டு வரியை பிடித்து விடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தில் இருந்தே, தனியார் கம்பெனி ஊழியர்கள் பலருக்கும் வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும்.
கடந்த பட்ஜெட்டை சமர்ப் பித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு அதிரடி இன்ப அதிர்ச்சியை தந்தார். அதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், 'உதிரி சலுகைகள் ஆதாய வரி' ( பிரிஞ்ச் பெனிபிட்டாக்ஸ்)என்று ஒரு வரியை போட்டிருந்தார். அதை பிரணாப் நீக்கினார். ஒருவர் பெறும் சம்பளத்தில் சேரும் இதர சலுகைகள் மீதான வரி. இதை பிரணாப் ரத்து செய்ததும், தனியார் நிறுவன ஊழியர் கள், அதிகாரிகள் பெரும் சந்தோஷப்பட்டனர். ஆனால், அது நிலைக்கவில்லை. இப்போது தான் அதன் உண்மையான சுயரூபம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதன் விளைவு என்ன தெரியுமா? மொத்த சம்பளத்தில் வாங்கும் சலுகைப் பணம் எல்லாவற்றுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது தான். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தரப்படும் சில சலுகைகளை கம் பெனி ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் வரி கட்ட வேண்டும் என்பதால், அதில் இருந்து தப்பிக்க, ஊழியர்களிடமே வரி பிடித்தம் செய்கிறது. மாதச் சம்பளத்தில், டி.டி.எஸ்., பிடிக் கப்பட்டு விடுகிறது. ஆனால், வரி பிடித்தம் செய்ய வேண்டாம் என்று நினைத்து, தனியார் நிறுவனங்கள் தரும் இதர சலுகைகளுக்கு வரி பிடிப்பதில்லை. இனி அதற்கும் பிடிக்க வேண்டும் என்பது தான், வரி ஆணையத்தின் குறிக்கோள். அதை இப்போது நிறைவேற்றி உள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.டி.பி.டி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வரி விகிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பின் சில அம்சங்கள்:

* கம்பெனி தரும் கார், அதை ஓட்ட நியமிக்கப்படும் டிரைவருக்கு தரும் சம்பளம் போன் றவை இதுவரை கம்பெனியே ஏற்று வந்தது; இனி இதற்கும் வரி உண்டு.

* சிறிய கார்கள் பயன்படுத்துவோரை விட, பெரிய கார்களை பயன்படுத்துவோருக்கு அதிக வரி பிடித்தம் செய்யப்படும்.

* வாடகைப்படியில் நகரங்களுக்கு ஏற்ப வரி பிடித்தம் செய்யப்படுகிறது. 7.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சம்பளத்தில் கணக்கிட்டு அதற்கு வரி பிடிக்கப்படும்.

* கம்பெனி தரும் கிரெடிட் கார்டு சலுகை, கம்பெனி பங்குகளை ஊழியர்களுக்கு சலுகை விலையில் தரும் 'எஸாப்' சலுகைக்கும் கூட வரி உண்டு.

* குழந்தைகளுக்கு படிப்பு உட்பட கட்டண சலுகையை கம்பெனி தந்தால், அதற்கும் வரி உண்டு.

* விடுமுறை கால, சுற்றுலாச் செலவுகளை கம்பெனி ஏற்றாலும் அதற்கும் வரி பிடிக்கப் படும்.

* சென்னை உட்பட பெரிய நகரங்களில் வாடகைப்படி அதிகபட்சமாக 15சதவீத அடிப்படையில் தான் வரி வசூலிக்கப்படும்.

* கிளப்களில் உறுப்பினராக இருந்தாலும், அந்த கட்டணத் துக்கும் வரி பிடித்தம் உண்டு.

இந்த வரிப்பிடித்தம் பற்றி இப்போது தான் தெளிவுபடுத் தப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து விட்டதால், இந்த மாதத்தில் இருந்து மார்ச் வரை மூன்று மாதங்களின் சம் பளத்தில், மற்ற எட்டு மாதங்களுக்கும் சேர்த்து வரி பிடிக்கப்படும்.அதேசமயம் கிராக்கிப்படி மற்றும் பிராவிடண்ட் பண்டுகளுக்கு கட்டப்படும் பணம் வரியில் இருந்து தப்பியது. ஏற்கனவே, எப்.பி.டி.,யில் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விட, ஒருவர் இந்த புதிய வரி விதிப்பில் அதிகமாகவே செலுத்த வேண்டியிருக்கிறது. முன்பு சிதம்பரம் அமைச்சராக இருந்து அமல்படுத்தியதை விட, அதிக அளவு பிடித்தம் இந்த புது உத்தரவால் அமலாகிறது. கிட்டத்தட்ட 31 சதவீதம் வரை சம்பளத்தில் அதிகபட்சமாக இழக்க வேண்டியதிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
நன்றி : தினமலர்

Tuesday, December 22, 2009

தமிழர்களுக்கு மூடப்படும் மத்திய அரசின் கதவுகள்

மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகை தரப்படுகிறது,​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.​ ​

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ ​

அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​ ​

மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​
கட்டுரையாளர் : தில்லை நாகசாமி
நன்றி : தினமணி

சொந்தமாக இரண்டு காரா? கூடுதல் வரி கட்டணும்

தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் கார்களின் பங்கு 30 சதவீதம், இருசக்கர வாகனங்களின் பங்கு 62 சதவீதம் என கவலை தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஷ் பாவா, நீதிபதிகளிடம் தெரிவித்ததாவது;
டில்லியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர், ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். வாகன நெரிசலுக்கு இதுவே முக்கிய காரணம். எனவே, வாகன பதிவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு, சாலை வரி, பார்க்கிங் சார்ஜ் உள்பட பல வழிகளில் கூடுதல் வரி விதிப்பது பற்றி மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.
இவ்வாறு விகாஷ் பாவா தெரிவித்தார். இதையடுத்து இதற்கு தகுந்தவாறு ஒரு சட்டத்திருத்தம் கொண்ட வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி : தினமலர்


விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

'உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.

இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், கடந்த 18ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி உள்ளார். இதனால், நிதிக் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கையை, அடுத்த மாதம் 29ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், அரசு செயலற்று இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இவ்விவகாரத்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம், முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலான் கருத்து தெரிவிக்கையில், 'அதிகப் பணப்புழக்கத்தை உறிஞ்சி எடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், விலைவாசி குறையும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும், வியட்னாமும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை சமீபத்தில் குறைத்திருப்பதையும் நிதித்துறையும் ரிசர்வ் வங்கியும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்