Friday, December 26, 2008

தொடர்ந்து சரிந்து வரும் பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு சந்தை சரிந்துள்ளது. இன்று நிப்டி 2900 புள்ளிகளுக்கு கீழேயும், சென்செக்ஸ் 9500 புள்ளிகளுக்கு கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. இன்று வர்த்தகம் துவங்கி சுமார் 3 மணி நேரம் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதியத்திற்கு மேல் குறைய துவங்கியது. மதியத்திற்கு மேல் சந்தை சரிந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் குறைந்திருக்கிறது என்று வந்த செய்தியாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயம் இருப்பதாலும் சந்தை சரிந்து விட்டது என்கிறார்கள். மூன்றாவது காலாண்டில் அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் 22.4 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயமும் இன்று அதிகரித்திருக்கிறது. இந்திய முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள்.இதெல்லாம் பங்கு சந்தையை மதியத்திற்கு மேல் அதிகம் பாதித்திருக்கிறது. ஆயில், பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், மெட்டல், டெக்னாலஜி, பவர் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் இறங்கி இருந்தன. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் டெக்னாலஜிஸ், எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ பேங்க், பெல், எல் அண்ட் டி, செய்ல், விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டி.எல்.எஃப்., ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 239.80 புள்ளிகள் ( 2.51 சதவீதம் ) குறைந்து 9,328.92 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.60 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) குறைந்து 2,857.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


மும்பை நட்சத்திர ஓட்டல்களில் குறைந்து போன 'புக்கிங்'

பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், மும்பை நட்சத்திர ஓட்டல்களில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் எண் ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் வரலாறு காணாத அள விற்கு உயர்ந்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி, மும் பையில், பாக்., பயங்கரவாதிகள், பல நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், 180க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, நட்சத்திர ஓட் டல்கள் மூடப்பட்டு, கடந்த 21ம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட் டன. இந்நிலையில், நட்சத்திர ஓட் டல்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிறிஸ்துமஸ் மற் றும் புத்தாண்டு கொண்டாட் டங்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு குறைந்துவிட்டதாக ஓட்டல் சங்க செயலர் கோர்தே தெரிவித்துள்ளார். மும்பையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர், மும்பை நட்சத் திர ஓட்டல்களில் 30 முதல் 40 சதவீதத்துக்கு 'புக்கிங்' குறைந்துவிட்டது. இதன் காரணமாக, ஓட்டலில் பல அறைகள் காலியாக உள்ளன. அதிகமான ஆடம்பர ஓட்டல் களைக் கொண்டுள்ள கோவாவிலும், இதே நிலை தான் காணப் படுகிறது. தாஜ் ஓட்டலில் மொத்தமுள்ள 268 அறைகளில் 150 அறைகள் பழுது பார்க்கப்பட்டன. இருப் பினும், 56 சதவீத அறைகளே 'புக்கிங்' செய்யப்பட்டன. இவ் வாறு கோர்தே கூறினார். மொத்தம் 550 அறைகளைக் கொண்ட டிரைடென்ட் ஓட்டலில் 16 சதவீத அறைகளே நிரம்பியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 95 அறைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என, அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடற்கரை அருகில் கட்டப் பட்டுள்ள ஓட்டல்களிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட் டங்களை முன்னிட்டு நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை குறைந்த அளவிலேயே இருக் கும் என, ரிட்ஸ் ஓட்டல் பொதுமேலாளர் ஆனந்த் பட் கூறினார். மும்பை சம்பவத்தை தொடர்ந்து, இந்தியர் தரப்பில் 50 முதல் 60 சதவீத புக்கிங்கும், வெளிநாட்டவர் தரப்பில் 30 சதவீத புக்கிங்குகளும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார். புத்தாண்டு கொண்டாட்டங் கள் மட்டுமின்றி, ஓட்டல் வாடகையும் பெருமளவில் குறைந்து போய்விட்டதாகவும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும், குறைந்து விட்டதாகவும், இந்திய டிராவல் ஏஜென்ட்கள் சங்க நிர்வாக கமிட்டியின் கவுரவ பொருளாளர் இக்பால் முல்லா கூறினார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட மும்பை நட்சத் திர ஓட்டல்கள், தங்களது பழைய நிலையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்களாகும் என, ஓட் டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Thursday, December 25, 2008

வீட்டு கடனுதவி சிறப்பு திட்டம் : கார்ப்பரேஷன் வங்கி அறிமுகம்

கார்ப்பரேஷன் வங்கி, வீட்டுக் கடனுதவி சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டுக் கடனுதவி சிறப்பு திட்டப்படி, 20 ஆண்டு காலவரையில், ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 8.5 சதவீத வட்டியும், ஐந்து லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும், கடனுக்கு 9.25 சதவீத வட்டியும் விதிக்கப்படும். இத்திட்டத்தில் கடன் வாங்குவோர் செலுத்த வேண்டிய முன்பணமாக, ஐந்து லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 10 சதவீதமும், ஐந்து முதல் 20 லட்ச ரூபாய்க்குள் வாங்கும் கடனுக்கு 15 சதவீதமும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இம்மாதம் 17ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை வாங்கும் கடனுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
நன்றி :தினமலர்


போர் மேகம் சூழ்ந்துள்ளதால் சரிகிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளால் இரண்டு நாடுகளுக்கிடையே, பதட்டம் அதிகமாகி வருவதால், பங்குச் சந்தையில் அதன் பாதிப்பு திங்களன்று தெளிவாகத் தெரிந்தது. சந்தையில் பங்குகள் எல்லாம் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, வங்கிப் பங்குகள் அதிகம் கீழே சென்றன. சந்தை 171 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதி நெருங்குவதாலும், லாப நோக்கில் ப்ளு சிப் பங்குகள் விற்கப்பட்டதாலும் நேற்று முன்தினம் சந்தை பெரிய சரிவை சந்தித்தது. சத்யம் கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகி விட்டார் என்ற வதந்தி வரவும், அக்கம்பெனியின் பங்குகள் மேலும் சரிந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான விலை என்ற அளவை எட்டியது. அன்றைய தினம் சந்தை 241 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்றும் இறக்கமாகவே இருந்தது. உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால் இந்தியாவிலும் அதற்கு விதிவிலக்காக இல்லாமல் கீழேயே இருந்தது. மொத்தமாக இந்த வாரத் துவக்கம் பங்குச் சந்தைக்கு ஒரு நஷ்ட வாரமாகவே இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 118 புள்ளிகள் குறைந்து 9,568 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 51 புள்ளிகள் குறைந்து 2,926 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கூடிவந்த கட்டுமானத்துறை, தற்போது, பங்குச் சந்தையில் மிகவும் அடி வாங்கி வருகிறது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும் அளவிற்கு வந்து விட்டன. இது, சந்தையில் வீடுகளின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த செய்திகளால் நேற்று கட்டுமானத் துறையின் பங்குகள் கட்டுமானமே இல்லாமல் கீழே சரிந்தன. குறிப்பாக யுனிடெக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் கீழே சென்றது. கம்பெனிகளில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தொய்வால், கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கியிருக்கும் கடன்களை கட்டுவதில் தாமதமாகலாம். ரிசர்வ் வங்கியின் தற்போதுள்ள விதிகளின் படி, ஒரு கம்பெனி தவணையை 90 நாட்களுக்குள் கட்டாவிடில் அந்த தவணை வராக்கடன் என்று வங்கிகள் வைக்க வேண்டும். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் 90 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலம் என்றும் அதை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் உயரும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அது, வங்கிகளின் லாபத்தை பாதிக்கும்.
கடந்தாண்டில் புதிய வெளியீடுகளில் பலரும் லாபங்கள் சம்பாதித்தனர். 40 ஆயிரம் கோடி ரூபாயை புதிய வெளியீடுகள் மூலம் கம்பெனிகள் திரட்டின. ஆனால், இந்த ஆண்டு நடந்தது என்ன? புதிய வெளியீடுகள் மூலம் பணம் திரட்டவே கம்பெனிகள் பயந்தன. ஏனெனில், சந்தையின் நிலை அப்படி இருந்தது. 2008ல் கம்பெனிகள் புதிய வெளியீடுகள் மூலம் திரட்டிய பணம் 19 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக குறைந்தது. சிட்டி வங்கியின் சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் கம்பெனியை விப்ரோ 127 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் விப்ரோவிற்கு இது குறைவான விலைக்கு கிடைத்த ஒரு கம்பெனி எனக்கூட கூறலாம். ஏனெனில், 500 மில்லியன் ஆர்டர்களுடன் கம்பெனி கிடைத்துள்ளது. அதுவும் வங்கித்துறை சம்பந்தப்பட்ட வேலைகள். விப்ரோ வங்கித் துறையில் ஆழமாக கால்பதிக்க இது மிகவும் உயயோகமாக இருக்கும்.
நாளை எப்படி இருக்கும்? இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளை பொதுவாகவே பல நாடுகளிலும் சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கிறது. ஆதலால், இந்திய சந்தைகள், தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டியிருக்கும். எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சந்தை கரடிகளின் பக்கம் சென்று விட்டதா? இல்லை இன்னும் காளைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று. நிலைமையை சரி செய்ய அரசு, ரிசர்வ் வங்கி மூலமாக இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் அல்லது மேலும் ஏதாவது பேக்கேஜ்களை அறிவிக்கலாம். இவையும் சந்தையை நிலைபெற வைக்க உதவும்.
இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு உயர்வு? இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக கூட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சாதகமாக முடியும் பட்சத்தில் புதிய பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வரலாம். மேலும், வெளிநாட்டு முதலீடு நிறைய உள்ளே வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் உள்ள இந்தியாவில் இன்சூரன்ஸ் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உலகளவில் உள்ள கம்பெனிகள் உணர்ந்துள்ளன. மேலும், போட்டி இருப்பதால் பிரிமியங்கள் குறையும் வாய்ப்புகளும் உள்ளன. சென்டிமென்டாக சமீபகாலமாகவே சந்தை 10,000த்தை தாண்ட நினைக்கும் போது கரடிகள் இழுத்து கீழே தள்ளுவது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, லாப நோக்கில் விற்பவர்கள் அதிகமாகி சந்தை கீழே வந்து விடுகிறது.
நன்றி : தினமலர்


சிமென்ட் விலையை குறைக்க தொழிற்சாலைகள் முடிவு

கலால் வரியை குறைப் பதாக அறிவித்துள்ளதையடுத்து, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் ஆலைகள் முன்வந்துள் ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், சிமென்ட் தேவையும் குறைந்தது. கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி பல துறைகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தது. குறிப்பாக, சிமென்ட் மீது இதுவரை விதிக்கப்பட்ட 12 சதவீத கலால் வரி, 8 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்தது. கலால் வரி குறைப்பு காரணமாக, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் நிறுவனங்கள் முனவந்துள் ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு, நான்கு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, December 24, 2008

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்

அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமலர்


Tuesday, December 23, 2008

பொது தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படலாம் என, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தேர்தல் அறிவிப்பு
களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இப்போது விலையைக் குறைத்தால், கச்சா எண்ணெய் விலை கூடும் போது மீண்டும் விலையைக் கூட்ட முடியாது என்பதால், தற்போதைக்கு விலைக் குறைப்புக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு உயரதிகாரி கூறினார்.
இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. இதன் பின்னும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9.98 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 1.03 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாபம் 11.48 ரூபாய் மற்றும் 2.92 ரூபாயாக உயரும்.இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டருக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 148.38 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
நன்றி : தினமலர்