நன்றி : தினமலர்
Wednesday, December 24, 2008
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்
அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment