இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளால் இரண்டு நாடுகளுக்கிடையே, பதட்டம் அதிகமாகி வருவதால், பங்குச் சந்தையில் அதன் பாதிப்பு திங்களன்று தெளிவாகத் தெரிந்தது. சந்தையில் பங்குகள் எல்லாம் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, வங்கிப் பங்குகள் அதிகம் கீழே சென்றன. சந்தை 171 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதி நெருங்குவதாலும், லாப நோக்கில் ப்ளு சிப் பங்குகள் விற்கப்பட்டதாலும் நேற்று முன்தினம் சந்தை பெரிய சரிவை சந்தித்தது. சத்யம் கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகி விட்டார் என்ற வதந்தி வரவும், அக்கம்பெனியின் பங்குகள் மேலும் சரிந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான விலை என்ற அளவை எட்டியது. அன்றைய தினம் சந்தை 241 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்றும் இறக்கமாகவே இருந்தது. உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால் இந்தியாவிலும் அதற்கு விதிவிலக்காக இல்லாமல் கீழேயே இருந்தது. மொத்தமாக இந்த வாரத் துவக்கம் பங்குச் சந்தைக்கு ஒரு நஷ்ட வாரமாகவே இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 118 புள்ளிகள் குறைந்து 9,568 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 51 புள்ளிகள் குறைந்து 2,926 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கூடிவந்த கட்டுமானத்துறை, தற்போது, பங்குச் சந்தையில் மிகவும் அடி வாங்கி வருகிறது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும் அளவிற்கு வந்து விட்டன. இது, சந்தையில் வீடுகளின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த செய்திகளால் நேற்று கட்டுமானத் துறையின் பங்குகள் கட்டுமானமே இல்லாமல் கீழே சரிந்தன. குறிப்பாக யுனிடெக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் கீழே சென்றது. கம்பெனிகளில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தொய்வால், கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கியிருக்கும் கடன்களை கட்டுவதில் தாமதமாகலாம். ரிசர்வ் வங்கியின் தற்போதுள்ள விதிகளின் படி, ஒரு கம்பெனி தவணையை 90 நாட்களுக்குள் கட்டாவிடில் அந்த தவணை வராக்கடன் என்று வங்கிகள் வைக்க வேண்டும். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் 90 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலம் என்றும் அதை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் உயரும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அது, வங்கிகளின் லாபத்தை பாதிக்கும்.
கடந்தாண்டில் புதிய வெளியீடுகளில் பலரும் லாபங்கள் சம்பாதித்தனர். 40 ஆயிரம் கோடி ரூபாயை புதிய வெளியீடுகள் மூலம் கம்பெனிகள் திரட்டின. ஆனால், இந்த ஆண்டு நடந்தது என்ன? புதிய வெளியீடுகள் மூலம் பணம் திரட்டவே கம்பெனிகள் பயந்தன. ஏனெனில், சந்தையின் நிலை அப்படி இருந்தது. 2008ல் கம்பெனிகள் புதிய வெளியீடுகள் மூலம் திரட்டிய பணம் 19 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக குறைந்தது. சிட்டி வங்கியின் சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் கம்பெனியை விப்ரோ 127 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் விப்ரோவிற்கு இது குறைவான விலைக்கு கிடைத்த ஒரு கம்பெனி எனக்கூட கூறலாம். ஏனெனில், 500 மில்லியன் ஆர்டர்களுடன் கம்பெனி கிடைத்துள்ளது. அதுவும் வங்கித்துறை சம்பந்தப்பட்ட வேலைகள். விப்ரோ வங்கித் துறையில் ஆழமாக கால்பதிக்க இது மிகவும் உயயோகமாக இருக்கும்.
நாளை எப்படி இருக்கும்? இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளை பொதுவாகவே பல நாடுகளிலும் சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கிறது. ஆதலால், இந்திய சந்தைகள், தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டியிருக்கும். எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சந்தை கரடிகளின் பக்கம் சென்று விட்டதா? இல்லை இன்னும் காளைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று. நிலைமையை சரி செய்ய அரசு, ரிசர்வ் வங்கி மூலமாக இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் அல்லது மேலும் ஏதாவது பேக்கேஜ்களை அறிவிக்கலாம். இவையும் சந்தையை நிலைபெற வைக்க உதவும்.
இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு உயர்வு? இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக கூட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சாதகமாக முடியும் பட்சத்தில் புதிய பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வரலாம். மேலும், வெளிநாட்டு முதலீடு நிறைய உள்ளே வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் உள்ள இந்தியாவில் இன்சூரன்ஸ் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உலகளவில் உள்ள கம்பெனிகள் உணர்ந்துள்ளன. மேலும், போட்டி இருப்பதால் பிரிமியங்கள் குறையும் வாய்ப்புகளும் உள்ளன. சென்டிமென்டாக சமீபகாலமாகவே சந்தை 10,000த்தை தாண்ட நினைக்கும் போது கரடிகள் இழுத்து கீழே தள்ளுவது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, லாப நோக்கில் விற்பவர்கள் அதிகமாகி சந்தை கீழே வந்து விடுகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment