Thursday, December 25, 2008

போர் மேகம் சூழ்ந்துள்ளதால் சரிகிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகளால் இரண்டு நாடுகளுக்கிடையே, பதட்டம் அதிகமாகி வருவதால், பங்குச் சந்தையில் அதன் பாதிப்பு திங்களன்று தெளிவாகத் தெரிந்தது. சந்தையில் பங்குகள் எல்லாம் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, வங்கிப் பங்குகள் அதிகம் கீழே சென்றன. சந்தை 171 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதி நெருங்குவதாலும், லாப நோக்கில் ப்ளு சிப் பங்குகள் விற்கப்பட்டதாலும் நேற்று முன்தினம் சந்தை பெரிய சரிவை சந்தித்தது. சத்யம் கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகி விட்டார் என்ற வதந்தி வரவும், அக்கம்பெனியின் பங்குகள் மேலும் சரிந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான விலை என்ற அளவை எட்டியது. அன்றைய தினம் சந்தை 241 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்றும் இறக்கமாகவே இருந்தது. உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால் இந்தியாவிலும் அதற்கு விதிவிலக்காக இல்லாமல் கீழேயே இருந்தது. மொத்தமாக இந்த வாரத் துவக்கம் பங்குச் சந்தைக்கு ஒரு நஷ்ட வாரமாகவே இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 118 புள்ளிகள் குறைந்து 9,568 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 51 புள்ளிகள் குறைந்து 2,926 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக கூடிவந்த கட்டுமானத்துறை, தற்போது, பங்குச் சந்தையில் மிகவும் அடி வாங்கி வருகிறது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும் அளவிற்கு வந்து விட்டன. இது, சந்தையில் வீடுகளின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த செய்திகளால் நேற்று கட்டுமானத் துறையின் பங்குகள் கட்டுமானமே இல்லாமல் கீழே சரிந்தன. குறிப்பாக யுனிடெக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் கீழே சென்றது. கம்பெனிகளில் தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தொய்வால், கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கியிருக்கும் கடன்களை கட்டுவதில் தாமதமாகலாம். ரிசர்வ் வங்கியின் தற்போதுள்ள விதிகளின் படி, ஒரு கம்பெனி தவணையை 90 நாட்களுக்குள் கட்டாவிடில் அந்த தவணை வராக்கடன் என்று வங்கிகள் வைக்க வேண்டும். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் 90 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலம் என்றும் அதை 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் உயரும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அது, வங்கிகளின் லாபத்தை பாதிக்கும்.
கடந்தாண்டில் புதிய வெளியீடுகளில் பலரும் லாபங்கள் சம்பாதித்தனர். 40 ஆயிரம் கோடி ரூபாயை புதிய வெளியீடுகள் மூலம் கம்பெனிகள் திரட்டின. ஆனால், இந்த ஆண்டு நடந்தது என்ன? புதிய வெளியீடுகள் மூலம் பணம் திரட்டவே கம்பெனிகள் பயந்தன. ஏனெனில், சந்தையின் நிலை அப்படி இருந்தது. 2008ல் கம்பெனிகள் புதிய வெளியீடுகள் மூலம் திரட்டிய பணம் 19 ஆயிரத்து 360 கோடி ரூபாயாக குறைந்தது. சிட்டி வங்கியின் சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் கம்பெனியை விப்ரோ 127 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் விப்ரோவிற்கு இது குறைவான விலைக்கு கிடைத்த ஒரு கம்பெனி எனக்கூட கூறலாம். ஏனெனில், 500 மில்லியன் ஆர்டர்களுடன் கம்பெனி கிடைத்துள்ளது. அதுவும் வங்கித்துறை சம்பந்தப்பட்ட வேலைகள். விப்ரோ வங்கித் துறையில் ஆழமாக கால்பதிக்க இது மிகவும் உயயோகமாக இருக்கும்.
நாளை எப்படி இருக்கும்? இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளை பொதுவாகவே பல நாடுகளிலும் சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கிறது. ஆதலால், இந்திய சந்தைகள், தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டியிருக்கும். எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சந்தை கரடிகளின் பக்கம் சென்று விட்டதா? இல்லை இன்னும் காளைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று. நிலைமையை சரி செய்ய அரசு, ரிசர்வ் வங்கி மூலமாக இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம் அல்லது மேலும் ஏதாவது பேக்கேஜ்களை அறிவிக்கலாம். இவையும் சந்தையை நிலைபெற வைக்க உதவும்.
இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு உயர்வு? இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக கூட்டுவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சாதகமாக முடியும் பட்சத்தில் புதிய பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வரலாம். மேலும், வெளிநாட்டு முதலீடு நிறைய உள்ளே வரும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் உள்ள இந்தியாவில் இன்சூரன்ஸ் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உலகளவில் உள்ள கம்பெனிகள் உணர்ந்துள்ளன. மேலும், போட்டி இருப்பதால் பிரிமியங்கள் குறையும் வாய்ப்புகளும் உள்ளன. சென்டிமென்டாக சமீபகாலமாகவே சந்தை 10,000த்தை தாண்ட நினைக்கும் போது கரடிகள் இழுத்து கீழே தள்ளுவது நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, லாப நோக்கில் விற்பவர்கள் அதிகமாகி சந்தை கீழே வந்து விடுகிறது.
நன்றி : தினமலர்


சிமென்ட் விலையை குறைக்க தொழிற்சாலைகள் முடிவு

கலால் வரியை குறைப் பதாக அறிவித்துள்ளதையடுத்து, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் ஆலைகள் முன்வந்துள் ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், சிமென்ட் தேவையும் குறைந்தது. கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் சிமென்ட் விலை குறைக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி பல துறைகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தது. குறிப்பாக, சிமென்ட் மீது இதுவரை விதிக்கப்பட்ட 12 சதவீத கலால் வரி, 8 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்தது. கலால் வரி குறைப்பு காரணமாக, சிமென்ட் விலையைக் குறைக்க சிமென்ட் நிறுவனங்கள் முனவந்துள் ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு, நான்கு ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, December 24, 2008

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்

அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமலர்


Tuesday, December 23, 2008

பொது தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படலாம் என, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தேர்தல் அறிவிப்பு
களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இப்போது விலையைக் குறைத்தால், கச்சா எண்ணெய் விலை கூடும் போது மீண்டும் விலையைக் கூட்ட முடியாது என்பதால், தற்போதைக்கு விலைக் குறைப்புக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு உயரதிகாரி கூறினார்.
இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. இதன் பின்னும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9.98 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 1.03 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாபம் 11.48 ரூபாய் மற்றும் 2.92 ரூபாயாக உயரும்.இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டருக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 148.38 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
நன்றி : தினமலர்


Sunday, December 21, 2008

பங்குச் சந்தை மெதுவாக மேலெழும்ப காரணம் என்ன?

குறைந்து வரும் பணவீக்கம், வியாழனன்று சந்தை ஜம்மென ஒரு தூக்கு தூக்கிச் சென்றது. வங்கிப் பங்குகள் குறிப்பாக மேலே சென்றன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 9 சதவீதத்திற்கும் மேலாகவும் சென்றது.
வெள்ளியன்று பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்கள் குறைப்பு, பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மேலும், கீழுமாக இருந்த சந்தையை வெள்ளியன்று மேலே தூக்கி நிறுத்தின. வியாழனன்று 361 புள்ளிகளும், வெள்ளியன்று 23 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தை கூடியது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 23 புள்ளிகள் கூடி 10,099 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 16 புள்ளிகள் கூடி 3,077 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தை 10,000 புள்ளிகளுக்கும் மேலாகவும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் மேலாகவும் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.
பரவலாக வாங்குவதும் நடக்கிறது. அதாவது நல்ல பங்குகள், குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற எண்ணத்தில் வாங்குவது தொடர்வதால், சந்தை சிறிது சிறிதாக மேலே செல்கிறது.
புதனன்று 30 சதவீதத்திற்கும் மேலே சரிந்த இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி., கம்பெனியான சத் யம், வியாழனன்று 7 சதவீதம் கூடியது. ஆனால், வெள்ளியன்று 3 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து முடிவடைந்தது. விலைகள் தடாலடியாக குறைந்துள்ளதால், கம்பெனியும் பைபேக் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறது. ஆயிலும், டாலரும்: கச்சா எண் ணெய் பேரலுக்கு 40 டாலர் அளவிலும், டாலர் ரூபாய்க்கு எதிராக 47.37 அளவிலும் வந்து நின்றது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என்று ஒபெக் தெரிவித்தும், விலை கூடுவது போலத் தெரியவில்லை. ஏனெனில், உலக அளவில் உபயோகங்கள் குறைந்துள்ளன. இன் னும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையுமா? இன்னும் ஒரு முறை குறைக்க வாய்ப்புகள் உண்டு என்று தான் பலரும் எதிர்பார்க்கின்றனர். அதிகம் வெளிநாட்டு பண வரவுகள் இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக கூடி வருகிறது. ஏற்றுமதியாளர்கள் குழப்பத் தில் உள்ளனர். டாலர் ஏறி/இறங்குவதால் மனதும் அதுபோல ஏறி/ இறங்குகிறது. இப்படி ஏறி/இறங்குவதால், ஏற்றுமதி கான்ட்ராக்ட்கள் போடும் போது எப்படி விலை குறிப்பிடுவது என்று தெரியாமல் சிறிய ஏற்றுமதியாளர்கள் கவலையடைகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணவீக்கம்12.91 சதவீதம் அளவில் சென்று நின்று எல்லாரையும் மலைக்க வைத்தது. அரசாங்கத்தின் முயற்சிகளாலும், மக்கள் வாங்குவதை தள்ளிப் போட்டதாலும் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் 6.84 அளவில் வந்து நிற்கிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் எல்லாரும் 7 சதவீதம் அளவில் வந்து நிற்கும் என நினைத்தனர். ஆனால், பங்குச் சந்தை 22,000யிலிருந்து பாதிக்கு வந்தது போல பணவீக்கமும் தடலடியாக பாதியளவில் வந்து நிற்கிறது. மக்கள் கைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பெரிய அளவில் பொருட்கள் வாங்குவது ஏதும் நடக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், அது பண வாட்டத்தில் கொண்டு செல்லும். அதாவது பணவீக்கம் மைனசில் இருக்கும். எல்லாரும் அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தால் நாட்டுக்கு நல்லதல்ல. வீட்டுக் கடன் வட்டி குறைந்தது மட்டும் சந்தையை தூக்கி நிறுத்தாது. வீடு விலைகளும் குறைய வேண் டும். கட்டுமானத்துறையின் ஜாம்பவான்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து விலைகளை சிறிது குறைப்பார்களேயானால், வீட்டுச் சந்தை மறுபடி உயிர் பெறும்.
தங்கம் ஏன் கூடுகிறது?: வீடு வாங்க ஓடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தற்போது வெயிட் அண்ட் வாட்ச் என்ற பாலிசியில் இருக்கின்றனர். பணம் எல்லாம் பத்திரமாக பணமாகவோ அல்லது தங்கமாகவோ இருக்கிறது. இது தங்கம் விலை கூடுவதற்கு ஒரு காரணம். இரண்டாவது, இப்போது இருக்கும் சூழ்நிலையில், இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பலரும் கருதுவதாலும். தங்கம் உலகத்தின் பொதுவான நாணயமாயிற்றே. அதாவது, எங்கும் தங்கத்தை கொண்டு சென்று பணமாக்கிக் கொள்ளலாம்.எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) டிசம்பரில் விற்றதை விட வாங்கியது அதிகம்.இது சந்தையை மேலே கொண்டு சென்றதற்கு ஒரு காரணி.பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்களைக் குறைத்துள்ளது. அமெரிக்காவின் ஆட்டோ கம்பெனிகளின் மீட்பு முடிவுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் ரேட் குறைப்பு ஆகியவை, சந்தையின் அடுத்த வாரப் போக்கை நிர்ணயிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வட்டி குறைப்பு

பொதுத்துறை வங்கிகளை அடுத்து எல்.ஐ.சி., வீட்டுக்கடன் நிறுவனமும் வட்டி குறைப்பு செய்துள்ளது. இது பற்றி, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.ஆர்.நாயர் தெரிவித்துள்ளதாவது: மொத்தம் 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீதமாகவும், அடுத்து வரும் ஆண்டு களுக்கு 9.75 சதவீதமாகவும் இருக்கும். 20 லட்சத்திற்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு, 11.50 சதவீதத்தில் இருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப் பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு, முன் கூட்டியே கடனை திருப்பி செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதத்திற்கு விலக்கு போன்ற சலுகைகளும் உண்டு. இவ்வாறு நாயர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


எரிபொருள் விலை வீழ்ச்சி : விமான கட்டணம் குறைகிறது

விமான எரிபொருளின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், விரைவில் விமான கட்டணமும் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, விமான எரிபொருளின் விலையும் கடந்த 36 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதையடுத்து, கடுமையாக உயர்த்தப்பட்ட விமான கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், விமான கட்டணம் குறைப்பு குறித்து, விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
விமான எரிபொருளுக்கான விலை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளது. இதன் பலன், சாதாரண பயணிகளுக்கும் கிடைக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம், இன்னும் சில நாட்களில் கட்டணத்தை குறைப்பது குறித்து அறிவிக்கும். இதையடுத்து, தனியார் விமான நிறுவனங்களும் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்