தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையின்போது, சென்னை உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்கள் அலைந்து திரிந்து பயணச்சீட்டுகளை வாங்கி, இருக்கைகள்கூட கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.
அரக்கப்பறக்க ஓடிவந்து பேருந்துகளைப் பிடித்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அரசு பஸ்களின் கூடுதல் கட்டணமும், கூட்ட நெரிசலும் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களும்தான்.
அங்கு விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற உணவு, நட்சத்திர ஹோட்டல்க ளையும் மிஞ்சும் அளவுக்கு விலை உயர்வு மற்றும் மூச்சைத் திணறடித்த கழிவறைத் துர்நாற்றங்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
சிறுபொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் கடலை உள்ளிட்ட "ஸ்நாக்ஸ்'கள் கூட குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வெந்நீரைவிடக் கேவலமான காபி, டீ ஆகியவற்றின் விலையோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாயின. சாப்பாடு மற்றும் குளிர்பானங்களின் விலையோ வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொட்டிருந்தன. எந்த அளவுக்கு விலை உயர்ந்திருந்ததோ, அந்த அளவுக்கு உணவின் தரமும் மோசமாக இருந்தது. உணவுக்கு அதிகவிலை கொடுத்ததற்காக கவலைப்படாதவர்கள் கூட, அதைச் சாப்பிடுவதற்காகக் கண்ணீர்விட்டனர்.
உணவுப்பொருள்கள் தான் அதிகவிலை என்றால், கழிவறைகளிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிரடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் வேறு வழியின்றி கழிவறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால் கழிவறையின் நிலையோ படுமோசம். சுத்தம் செய்யப்படாமலும், சில இடங்களில் தண்ணீர் இன்றியும் காணப்பட்டன.
இதனால் கழிவறைக்குச் சென்றவர்களுக்கெல்லாம் மயக்கம்தான் வந்தது. கூடுதல் கட்டணங்கள் கொடுத்தும், பேருந்துகளில் தான் இருக்கைகள் கிடைக்கவில்லை. உணவகங்களிலும், கழிவறைகளிலுமா இந்த நிலை? என்று பயணிகள் புலம்பித் தீர்த்தனர்.
கழிவறைக் கட்டணங்களால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் சாலைகளிலேயே இயற்கை உபாதையைக் கழித்தனர். இதனால் போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்காக போடப்பட்ட தங்கநாற்கர சாலைகள் சிறுநீர் ஆறாய் காட்சியளித்தது.
÷விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் குண்டர்கள் ஆங்காங்கே கையில் தடிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மிரட்டியது பயணிகளை மட்டும் அல்ல, பேருந்துகளை ஓரமாக நிறுத்தச்சொல்லி ஓட்டுநர்களையும் தான்.
சாலையோரம் இயற்கை உபாதையைக் கழிக்க முயன்றவர்களைத் தடிகளைக் காட்டி எச்சரித்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இதனால் அதிர்ந்துபோன பயணிகளுக்கு கொள்ளையர்களும், ரௌடிகளும் ஹோட்டல் வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ, கூட்டமே இல்லாதே உணவகங்களையெல்லாம் விட்டுவிட்டு கூட்ட நெரிசல் மிக்க, குண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்தினர்.
ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அங்கே அசைவ உணவுடன் பான்பராக், வெற்றிலை பாக்கு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகத் தரப்படுகின்றன; இதற்காக இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று பயணிகள் சிலர் கூறினர்.
குண்டர்களின் செயல்களால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்துமாறு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் தங்களுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது உண்மையா? அல்லது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்துநர் விட்ட கதையா என்பதற்குப் போக்குவரத்துக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்.
"குடி'மகன்களுக்காக மதுபானக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, குடிமக்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம். அல்லது இந்த உணவகங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமோ அல்லது மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பிலோ ஒப்படைக்கலாம். இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமே. கூடுதல் கட்டணத்தாலும், கூட்ட நெரிசலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவையாவது சரியான விலையில் தரமானதாக வழங்கினால் ஆறுதலாக இருக்குமே.
அதுமுடியாத பட்சத்தில் ஏல முறையில் தனியாருக்கு உணவகங்களை ஒதுக்கலாம். அவர்களும் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால், அதைத்தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு உணவுப்பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.
அனைத்து உணவுப்பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை எழுதி பயணிகளின் பார்வையில் படும்படி உணவகங்களின் வாசலில் வைக்கலாம். உணவுப்பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் தரலாம். ஆனாலும் உணவகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை விட அரசே நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து தனியார் உணவகங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.
ரயில்வே துறையைப்போல் போக்குவரத்துத் துறையும் உணவுப்பொருள்களை விற்பனை செய்ய தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : ஏ.வி.பெருமாள்
நன்றி : தினமணி
Friday, January 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல ஆலோசனைதான். ஆனால், இவர்கள் இப்படிப்பட்ட செயல்திட்டத்தின் மூலம் நாம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று ஆலோசிப்பார்களே ஒழிய.... மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள்.
இங்கு கேடுகெட்டவர்கள் பல அரசியல்வாதிகள் மட்டுமல்லர்... பல அதிகாரிகளும் தான்.
உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள். இதைப் பார்த்து எவனாவது ஒருத்தன் முயற்சி செய்யட்டும்.
repeateeeeeeeeeeeeeee
என் பயணத்தில் மாறாக முடியாத அனுபவம் சென்னை யில் இருந்து திருச்செந்தூர் செல்லும்( பொங்கல் ) வழியில் ஓர் உணவகத்தில் இரண்டு கல் தோசை விலை 35 பின் குறிப்பு (சாம்பார் மற்றும் சட்னி கிடையாது ) முட்டை கொழம்பு மட்டும் தன விலை 25 இது போன்ற பிரயநகளில் அவதி படுவது மலே தட்டு மக்கள் அல்ல அடி தட்டு மக்களும் என்ன போன்ற நடு தட்டு மக்களும் தான் இதற்கு அரசு தன கண்டிப்பாக பொறுபேற்க வேண்டும் உங்களின் யோசனை நல்ல ஒன்று தான் அனால் இதை கடை பிடிக்காத இந்த அரசு டாஸ்மாக் வியாபாரத்தை உயர்த்த சிந்திக்க தெரியும் தவிர இது போன்ற விஷ யங்களை கண்டு கொள்ளது
ரோஸ்விக் வருகைக்கு நன்றி
kailash,hyderabad வருகைக்கு நன்றி
Post a Comment