உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள். அதிலும் வீடு என்று வருகின்றபோது, "எலி வளையானாலும் தனி வளை' என்பதுதான் பழமொழி. சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது வாழ்க்கைக் கனவாக இருக்கிறது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள 21 லட்சம் மண்குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துப் பாராட்டவும் செய்யலாம்.
மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் 2006-ம் ஆண்டில் அமைத்த தொழில்நுட்பக் குழுமம், நகர்ப்புற வீடுகள் பற்றாக்குறை குறித்து அண்மையில் அறிக்கை அளித்தது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் இறுதியில் (2007-08) இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழும் 2.47 கோடி குடும்பங்கள் வீடுகளின்றி அவதிப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2.17 கோடி குடும்பங்களின் மாத வருமானம் ரூ.3,300-க்குள். 28 லட்சம் குடும்பங்களின் மாத வருமானம் ரூ.7300-க்குள்.
நகர்ப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்கள் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரம். 37.8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகம்தான். 28. 2 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. இது நகர்ப்புறக் கணக்கெடுப்பு மட்டுமே. அதிலும், 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்த புள்ளிவிவரம்.
இந்நிலையில் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் பேர் மண்குடிசைகளில் வாழ்வதாகப் புள்ளிவிவரங்கள் மூலம் அறியவந்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் கிராமப்புறங்களில் இந்தப் புள்ளிவிவரத்தை விடவும் இரு மடங்கு குடும்பங்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை. அண்மைக் காலங்களில் பெய்த பெருமழையின்போது மண்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
கிராமப்புறங்களில் வீடு இல்லாத குடும்பங்களின் பிரச்னை மழைக்காலத்தோடு முடிந்துபோகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் வீடு இல்லாத மக்களின் சிக்கல் மிகவும் மோசமானது. நகர்ப்புறங்களில் அழகு, தூய்மை ஆகிய காரணங்களுக்காக இவர்கள் விரட்டப்படும்போது, ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள குடிசைப் பகுதியை நாடிப் போவதைத்தவிர வேறு வழியே இல்லை. நகர்ப்புறங்களில் வீடு இல்லா மக்களின் வாழ்க்கைக்கு குடிசை மாற்று வாரியம் இருந்தாலும்கூட, நகரத்தில் இடம் கிடைக்காததால் அவர்களுக்கு வீடு கட்டித் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்களில் தமிழ்நாடு முழுவதும் 323 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 175 ஏக்கர் நிலம் சென்னை கே.கே.நகர் கோட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்டு, குடிசைமாற்று வாரியம் இங்கே அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டச் செய்யலாம். கூவம் நதி தூய்மைப் பணிக்காக வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு இந்தக் குடியிருப்புகளை வழங்கலாம்.
ஊரகப் பகுதி என்றாலும், நகர்ப்பகுதி என்றாலும் ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தருவது பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றை இலவசம் என்று சொல்லும்போதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.
முதல்கட்டமாக, நிகழாண்டில் ரூ.1800 கோடி செலவில் 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக கட்டுவதற்கு ஆகும் செலவு ரூ.60,000.
1,500 ரூபாய் மதிப்புள்ள இலவச கலர் டி.வி. கொடுப்பதற்கே ஒவ்வொரு பயனாளியிடமும் அதிகாரிகள் ரூ.100 முதல் ரூ.200 வரை பெற்றுள்ளனர் என்பதை அரசு மறுத்தாலும் மக்கள் மன்றத்தில் அனைவரும் அறிந்த ரகசியம். ரூ.60,000 மதிப்புள்ள இந்த வீடுகளை அரசு இலவசமாகக் கட்டிக் கொடுக்கும் என்றால், அதற்காக நடைபெறக்கூடிய பாரபட்சங்கள், முறைகேடுகள் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.
மிக உயர்ந்த நோக்கத்துடன் கட்டித் திறக்கப்பட்டு வந்துள்ள பெரியார் சமத்துவபுரங்கள் அனைத்திலும் இப்போது திடீர் ஆய்வு நடத்தினால், அங்கு பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதை அறிய முடியும். காரணம், பயனாளிகள் ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருப்பதாலும், அரசு மலிவாக வீடு கட்டித் தருவதால் அந்த வாய்ப்பை எந்த வகையிலும் கைப்பற்ற முற்பட்டு வெற்றி கண்டவர்கள் என்பதும்தான். இத்திட்டத்தில் பயனடைந்த ஏழைகள் மிகச் சிலராகவே இருக்கின்றனர். இது அரசின் தவறல்ல. அரசியல்வாதிகளுக்கு துணை போன, வருவாய்த்துறை அதிகாரிகளின் தவறு. அதே நிலைமை இந்தத் திட்டத்துக்கும் வந்துவிடக் கூடாது. இலவசத்தின் மதிப்பு உயரும்போது முறைகேடுகளின் அளவும் உயர்வது இயல்பு.
தமிழக அரசு இந்த ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கான தொகை முழுவதையும் முழுக்க முழுக்க வட்டியில்லாக் கடனாக அளித்து, குறைந்தது 12 அல்லது 15 ஆண்டுகளுக்கு அத்தொகையை சிறு தவணைகளாகப் பிரித்து, மாதவாடகை போல செலுத்தும்படி செய்தாலும்கூட, இத்திட்டத்தில் குறைந்தது 75 சதவீதம் உண்மையான ஏழைகள் பயன்பெற ஏதுவாகும். 50 சதவீத மானியம் வழங்கினாலும் தவறில்லை.
வீட்டின் ஒவ்வொரு செங்கல், சிமென்ட் கலவையிலும் தனது உழைப்பின் பணம் சேர்ந்து இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால்தான், இந்த வீடுகளின் தரம் குறித்து ஏழைகள் கேள்வி எழுப்புவும், பராமரிப்பதில் அக்கறை கொள்ளவும் செய்வார்கள். இல்லையெனில், மிக நல்ல நோக்கத்துடன் அரசு அறிவித்துள்ள இத்திட்டம் குறைப்பட்டுப் போகும்.
பயனாளிகளின் தேர்வில்கூட, தமிழகத்தின் எந்த இடத்திலும் குடும்பத்தின் அங்கத்தினருக்கு வீடோ, வீட்டுமனையோ, நிலமோ சொந்தமாக இல்லை என்பதை உறுதி செய்வதில் அரசு கறாராக இல்லாவிட்டால் உள்ளாட்சியில் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஏற்கெனவே வீடு இருப்போரும் கூட்டணி வைத்து இந்தத் திட்டத்தை அபகரித்துச் சென்ர்ருவிடும் வாய்ப்புகள் ஏராளம்.
நன்றி : தினமணி
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment