இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி எப்போதுமே பரபரப்பாகப் பேசப்படுபவர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவர் சர்வதேச ஊடகங்களை எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார். இப்போது அவரது பெயர் பரபரப்பாகியிருக்கும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.
÷அண்மையில் மிலன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்த பெர்லுஸ்கோனியின் முகத்தில் இளைஞர் ஒருவர் சர்ச் போன்ற வடிவத்தைக் கொண்ட கரடுமுரடான பொருளைக் கொண்டு தாக்கிவிட்டார். இதில் நிலைகுலைந்துபோன பெர்லுஸ்கோனியின் மூக்கு உடைந்தது. வாயில் இரு பற்கள் பெயர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
÷இத்தாலி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியொரு சம்பவத்துக்கு இத்தாலி முழுவதுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்க வேண்டும். நாடே ஒன்றிணைந்து பிரதமர் விரைவாகக் குணமடைந்து வர பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். பிரதமருக்கான பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி விவாதம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் நடக்கவில்லை.
÷இத்தாலியின் ஒரு பிரிவினர் பெர்லுஸ்கோனியின் மீதான தாக்குதலை வரவேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அவரைத் தாக்கிய இளைஞரை ஹீரோவாக்கினர். மூக்கிலும் வாயிலும் ரத்தம் சொட்டும் பெர்லுஸ்கோனியின் பொம்மைகள் கடைகளில் விற்றுத் தீர்ந்தன. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெர்லுஸ்கோனிக்கு எதிரான கருத்துகளால் நிரம்பின. அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் மீது வெறுப்புக் கொண்ட மக்கள்கூட்டம் இத்தாலியில் இருக்கிறது. தேசம் பிளவுபட்டுக் கிடப்பதும் வெளிப்படையாகி இருக்கிறது.
÷நாட்டின் தலைவருக்கு விபத்து ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அந்த நாடே அவருக்காக அனுதாபப்படுவதுதான் இயல்பு. எதிர்க்கட்சியினர்கூட இந்த மாதிரியான சூழலில் விமர்சனத்தைத் தவிர்ப்பார்கள். பெர்லுஸ்ú கானி மீது மட்டும் ஏனிந்த வெறுப்பு? அதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
÷அண்மையில் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது. பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக பல நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், தன்னிடமிருந்த படத்தை, பக்கத்து மேஜைக்குத் தள்ளிக் கொண்டிருந்தார். பல்வேறு கால கட்டங்களில் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் என அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. அதை வாங்கிய சிலர் பார்த்தனர். சிலர் முகம் சுளித்தனர். சிலர் கண்டுகொள்ளவில்லை.
÷பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெüன், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி போன்ற பெருந்தலைகளும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் பரோனஸ் ஆஷ்டன் போன்ற பெண் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இவ்வளவு மலிவான செயலைச் செய்த அந்த நபர், இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனிதான் எனப் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இடம் பொருள் தெரியாமல் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்த மனிதருக்கு வயது 73.
÷இதுபோன்ற நகைப்புக்கிடமான செயல்களுக்குப் பெயர் பெற்றவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். உலக நடப்புகள் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குக்கூட ஏடாகூடமாகப் பதில் சொல்லி பத்திரிகையாளர்களின் கேலிக்கு ஆளானவர் அவர். இவரது பொது அறிவையும் நிர்வாகத் திறனையும் கிண்டல் செய்யாதவர்களே இல்லை.
÷ஊடகங்களின் கேலிக்கு ஆளான இன்னொருவர் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி. ஆனால், இவரது நிர்வாகத்திறனைப் பற்றி யாரும் கேலி செய்யவில்லை. கேலிக்குள்ளானது இவரது தனிப்பட்ட வாழ்க்கைதான். இரண்டாவது மனைவியுடன் ஊர் சுற்றிய கதைகள் பத்திரிகைகளில் வெளியானதால் சர்கோஸியின் மரியாதை கிழிந்து போனது. மனைவியுடன் தனது உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்காக எக்கி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களெல்லாம் இன்றைக்கும் இணையத்தில் ஹாட். பதவிக்கு வந்த காலத்தில் மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடப்பட்ட சர்கோஸி, இப்போது கேலிப் பொருளாகியிருக்கிறார்.
÷இந்த இருவரையும் விஞ்சி நிற்கிறார் பெர்லுஸ்கோனி. மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் இவர், அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே இளம் பெண்களுடன் வாழ்ந்து வருவதாகவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. விலைமாது ஒருவர், தனது சுயசரிதையில் பெர்லுஸ்கோனி பற்றி தாறுமாறாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
÷இதேபோல, பொது நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிறத்தைக் குறிப்பிட்டு, கேலி வெளிப்படும் தொனியில் பேசியுள்ளார் பெர்லுஸ்கோனி. அத்துடன் விடாமல், ஒபாமாவின் மனைவியையும் அதேபோல் குறிப்பிட்டுள்ளார். பெர்லுஸ்கோனியின் இந்தப் பேச்சால், இத்தாலியின் எதிர்காலத்துக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நாட்டின் மூத்த தலைவர்கள் ஒபாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பெர்லுஸ்கோனி பொருள்படுத்துவதில்லை. இதைக்கூட ஒபாமாவுக்கு ஜாலியாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா, எனக் கேட்பார்.
÷இன்னொரு நிகழ்ச்சியின்போது, உலகத் தலைவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்த மிச்சேல் ஒபாமா, பெர்லுஸ்கோனியிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இது இத்தாலிக்கு நேர்ந்த அவமானமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இப்படித் தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும், செயல்களாலும் ஒரு பிரிவு மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் பெர்லுஸ்கோனி, இத்தாலிய ஊடங்களில் பெரும்பான்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரர். சிறந்த தொழிலதிபரும்கூட. அரசியல் ரீதியான எதிர்ப்புகளையெல்லாம் திறம்படக் கையாண்டவர். ஆனாலும், தனிப்பட்ட வாழ்க்கையால் தற்போது அவரது புகழுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவிலிருந்து அவர் மீண்டு வருவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் தனிப்பட்ட வாழ்வைக் கிளறிப்பார்ப்பது நியாயமாகுமா என அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு.
பெர்லுஸ்கோனியின் விவகாரத்தை மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிறது. நாட்டுத் தலைவரின் தனிப்பட்ட குறும்புகளாலும், நகைப்புக்கிடமான செயல்களாலும் உலக அரங்கில் அந்த நாட்டின் மரியாதை சரிந்து போகும், அரசு முறை உறவுகள் சிக்கலாகும் என்றால், அந்தத் தலைவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தான் ஏற்படும். அதற்காக, பெர்லுஸ்கோனியைத் தாக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இந்தக் காயங்கள் அவருக்கு உதவக்கூடும்.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment